You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: ஜானகி மறைவு பற்றி இளையராஜா கூறியது என்ன?
மறைந்த பின்னணி பாடகி ஜானகி இறுதிச்சடங்குகள் மைசூரில் நடைபெற்றன.
முன்னதாக அவரது உடலுக்கு தலைவர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மைசூரில் உயிரிழந்த அவரது உடல் அங்குள்ள மகாராஜா மைதானத்தில் வைக்கப்பட்டதாக பிடிஐ செய்தி கூறுகிறது. அங்கு பொதுமக்கள் திரளானோர் வந்து ஜானகி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு
ஜானகியின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
"இறுதிச் சடங்கில் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் யதிந்தரா சித்தராமையா கலந்துகொள்வார். தனது அற்புதமான குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த சிறந்த பாடகியை மரியாதையான முறையில் வழியனுப்ப அரசு முடிவெடுத்துள்ளது," என கர்நாடக முதலமைச்சர் அலுவலகத்தின் எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளையராஜா இரங்கல்
ஜானகியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "பெருமதிப்பிற்குரிய ஜானகி அம்மாவின் இறப்பு செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தேன். மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாக எனக்கு இருந்தது. தன்னுடைய சொந்த வாழ்வில் எத்தனையோ துக்கங்களை, தாங்க முடியாத துக்கங்களைத் தாங்கி அவர்கள் வாழ்ந்தார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம். உலக இசையமைப்பாளர்கள், மாமேதைகள் அவர்களுடைய ஒவ்வொருவர் வாழ்விலும் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் துக்கமானதாக இருந்திருக்கிறது. ஆனால் ஜானகி அம்மா அவர்கள் தன்னுடைய திறமையில் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்பதை ஒவ்வொரு பாடலிலும் நிரூபித்துக் கொண்டே வந்திருக்கிறார். மிகவும் கடினமான உழைப்பாளி, என்னுடன் சேர்ந்து விடாப்பிடியாக அவரும் கடின உழைப்பை மேற்கொள்வார். அவருடைய இழப்பு இந்திய திரைப்பட இசை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு," என்று அவர் தெரிவித்தார்.
பி.சுஷிலா இரங்கல்
பிரபல பின்னணி பாடகி பி.சுஷிலா ஜானகியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.
"இன்று என் வாழ்க்கையில் மிகவும் சோகமான நாள். ஒரு புகழ்பெற்ற சக பாடகியை மட்டுமல்ல, ஒரு நல்ல நண்பரும் சகோதரியுமான ஜானகியை இழந்துவிட்டேன். இசைத் துறையில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை ஒன்றாகக் கழித்த நாங்கள், மொழிகளைக் கடந்து எண்ணற்ற மெலடி பாடல்களையும் மற்றும் அழகான, வாழ்நாளுக்குமான பந்தத்தைப் பகிர்ந்துள்ளோம். அவருடைய மறைவு இசை உலகில் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. லட்சக்கணக்கான மனங்களில் நீ என்றும் வாழ்வாய், என் அன்பிற்குரிய ஜானகி." என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மறைவில் இந்தியா ஒரு இசை நட்சத்திரை இழந்துவிட்டதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார்.
"அவருடைய அசாத்தியமான பாடும் திறமை பல தலைமுறைகளை மகிழ்வித்தது. அவருடைய பணி 6 தசாப்தங்களையும் கடந்தது. அந்தக் காலகட்டத்தில் ஹிந்தி, ஒடியா, துளு, உருது, பஞ்சாபி மற்றும் வங்காளம் உள்ளிட்ட சுமார் 20 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். அவருடைய காலங்களைக் கடந்த இசை எப்போதும் மதிப்பு மிக்கதாக இருக்கும். அவருடைய குடும்பத்தினருக்கும் எண்ணற்ற ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "பிரபல பின்னணி இசை பாடகி எஸ்.ஜானகியின் மறைவு இசை மற்றும் கலாசார உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. வெவ்வேறு மொழிகளில் அவர் பாடிய பாடல்கள் தலைமுறைகள் கடந்தும் பிரபலமானவை. அவரின் பாடல்கள் ஒவ்வொரு உணர்வுக்கும் ஒப்பில்லாத நயத்துடனும் பன்முகத்திறனுடனும் குரல் கொடுத்தது.
அவரின் மெலடி பாடல்கள் இனி வரும் ஆண்டுகளுக்கும் ரசிகர்களை மகிழ்விக்கும். இந்தச் சோகமான தருணத்தில் அவரின் குடும்பத்தினருக்கும், எண்ணிலடங்காத ரசிகர்களுக்கும் ஒட்டுமொத்த இசை உலகிற்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு