அடுத்தடுத்து கொளுத்தப்பட்ட வட மாநிலத்தவர் குடிசைகள்; ஆடு மெய்த்த பெண் கொலை - என்ன நடந்தது?

போலீஸ்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

நாமக்கல் மாவட்டத்தில் ஆடுமேய்க்க சென்ற பெண் முள் புதரில் ஆடைகள் கிழிக்கப்பட்டு, முகம் மற்றும் கழுத்து பகுதிகளில், ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் நிலவுகிறது.

இது குறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தவிர, அருகே குடியிருக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் இதை செய்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு அவர்களது குடிசைக்குத் தீவைத்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளளனர்.

நடந்தது என்ன?

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள காரபாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன். விவசாய கூலி வேலை செய்து வரும் இவரது மனைவி, கடந்த 11 ஆம் தேதி ஆடு மேய்க்க சென்றபோது குட்டை அருகே முள் புதரில் இறந்து கிடந்தார். அவரைக் காணவில்லை என்று தேடி வந்து பார்த்த கணவர் விவேகானந்தன், அதிர்ச்சி அடைந்து, அவருக்கு உயிர் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து அந்தப் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் நித்யாவின் கணவர் மற்றும் உறவினர்கள், ஊர் மக்கள் வட மாநிலத்தவர்கள்தான், வல்லுறவு செய்து கொலை செய்திருக்க வேண்டுமென புகார் கொடுத்தனர்.

போலீசார் வடமாநிலத்தவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். இதை அடுத்து நாமக்கல் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் வந்து அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிடச் செய்தார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரின் அண்ணன் பூபதி பாத்திரிகையாளர்களிடம் பேசுகையில்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"எங்களது விவசாய தோட்டத்திற்கு அருகில் குட்டை உள்ளது. அருகிலிருக்கும் வெல்ல ஆலையில் தங்கியிருக்கும் வட இந்தியர்கள் இந்தக் குட்டையில் மீன் பிடிக்க வருவார்கள். அவர்களை மீன் பிடிக்கக்கூடாது என நாங்கள் அடிக்கடி துரத்தி விடுவோம்.

கடந்த 11 ஆம் தேதி தம்பி மனைவி மதியம் இரண்டு மணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்றார். மாலை 4.45 மணியளவில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற ஆடுகள் வீட்டுக்கு வந்துவிட்டன. என் தம்பி விவேகானந்தன் குட்டைக்கு அருகில் சென்று தேடி பார்த்துள்ளார். ஒரு செருப்பு , செல்போன் கவர், கப், சூரி கத்தி ஆகியவை அருகே கிடந்துள்ளன.

ஓடைக்குள்ளே இருந்து 450 அடி முள்ளுக்குள் தள்ளிக் கொண்டு போய், வல்லுறவு செய்து, கழுத்தில் கயிறு போட்டு கொன்றுவிட்டனர். குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். போலீசாருக்கு வட மாநில தொழிலாளர்கள்தான் இந்த கொலையில் ஈடுபட்டிருப்பார்கள் என்று தகவல் சொன்னோம். சுற்றி 15 வெல்ல ஆலைகள் உள்ளன. அங்கிருக்கும் வடமாநில தொழிலாளர்கள் கஞ்சா போதையில் இருப்பது, குட்டைக்கு வந்து மீன் பிடிப்பது, மரம் வெட்டுவது என அனைத்தையும் போலீசிடம் சொன்னோம்," என்றார்.

போராட்டம்

விவேகானந்தன் பேசும்போது "ஆடுகள் வீட்டுக்கு வந்த பிறகும் மனைவி வீட்டுக்கு வரவில்லை என்று சந்தேகமடைந்து காட்டுக்குள் போய் பார்த்தேன். அங்கு மனைவி அலங்கோலமாகக் கிடந்தாள். உடனே அரசு மருத்துவமனை கொண்டு வந்து பார்த்தோம். ஆனால், அவர் இறந்துவிட்டார். இது முழுக்க முழுக்க வட மாநிலத் தொழிலாளர்கள் செய்துள்ளதாக போலீசிடம் சொன்னோம். ஆனால், போலீசார் எங்கள் குடும்பத்தினரைத்தான் கேள்வி கேட்கின்றனர். வட மாநிலத்தவரை கேள்வி கேட்பதில் ஆர்வம் காட்டவில்லை" என்றார்.

தனக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க முடியாது என்றும் அவர் கூறினார்.

பிரேத பரிசோதனையில், உயிரிழந்த பெண் பாலியல் வன்புணர்வு செய்து, கழுத்தை கயிற்றைக் கொண்டு இறுக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிறுவன் கைது

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்திரவின் பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் இந்திராணி, சுரேஷ், ரவிச்சந்திரன் ஆகியோர் கொண்ட மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கடந்த 13 ஆம் தேதி இது தொடர்பாக கைது செய்தனர். விசாரணையில் சிறுவன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், தான் கரும்பு வெட்டும் வேலைக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து வந்திருந்ததாகவும், அந்தப் பெண்ணைக் கண்டதும் தனக்கு சபலம் ஏற்பட்டதாகவும், அதனால், அவர் ஆடு மேய்க்கும் பகுதியில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு அவரை வல்லுறவு செய்து கொன்றதாகவும், பிறகு நகைகளை எடுத்துக்கொண்டு சென்றதாகவும் கூறியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

பெண்ணின் செல்போனை தான் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த இடத்தை போலீசாரிடம் சிறுவன் காண்பித்தான். கொலை செய்தது எப்படி என்பது தொடர்பாகவும் போலீசாரிடம் நடித்து காட்டினான். அதன்பிறகு சிறுவனை ஜேடர்பாளையம் போலீசார் சிறையில் அடைந்தனர்.

ஆனால், அந்த சிறுவன் இதைச் செய்திருக்க மாட்டான் என்று ஊர் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதனிடையே ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலை வளாகத்தில் குடிசை அமைத்து, தங்கியிருக்கும் குடிசைகளுக்கு அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்தனர்.

மர்ம சம்பவங்கள்

போராட்டம்

ஜேடர்பாளையம் அருகே வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம்( 50) என்பவரின் ஆலையில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தவர் தங்கி உள்ள குடிசைகளுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இச்சம்பவம் குறித்து டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச் செல்வன் , பரமத்தி வேலூர் டி.எஸ்.பி கலை யரசன் மற்றும் போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த தீ வைப்பு சம்பவத்திற்கும் பெண்ணின் மரணத்துக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர்.

இதையடுத்து 16 ஆம் தேதி அதிகாலையில் காரில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை மற்றும் குடிசை வீடுகளுக்கு தீ வைத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து காரில் வந்த, கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனசேகரன்(28), தமிழரசன்(26), சுதன்(25), பிரபு(37), சண்மு கசுந்தரம்(43), பிரகாஷ்(29) ஆகிய 6 பேரை ஜேடர்பாளையம் போலீசார் கைது செய்தனர். காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் பேசுகையில்

இந்தக் கொலை வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளான். வட மாநிலத்தவர்களுக்கும் இக்கொலைக்கும் சம்பந்தமில்லை. சிறுவன் மட்டும் இக்கொலையில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக வடமாநிலத்தவர்கள் ஈடுபடவில்லை என்பதை குடும்பத்தினருக்கு புரிய வைத்துள்ளோம் என்றார். கொலையில் தொடர்பு இருக்கலாம் எனக்கருதி, வட மாநிலத்தவர்களின் குடிசைகளை எரித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 21 ஆம் தேதி சரளைமேடு வெல்ல ஆலையில் வட மாநிலத்தவர்களின், பத்துக்கும் மேற்பட்ட குடிசைகளுக்கும், மூன்று டிராக்டர்களுக்கும் தீ வைத்த சம்பவம், திடுமல் ரோடு பகுதியில் ஆலை கொட்டகை நடத்தி வரும் பழனிசாமி வீட்டு தீ வைத்த சம்பவம்,

வடகரையாத்தூரில் ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ஆகியவை குறித்து விசாரணை செய்து தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் முயன்றுகொண்டுள்ளனர்.

அடுத்தடுத்த சம்பவங்களால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. இதை தொடர்ந்து ஜேடர்பாளையத்தில் வடகரையாத்தூர், வீ.கரைப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த இருதரப்பினர் இடையே அமைதி பேச்சு கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.

"இந்த பகுதியில் அசாதாரண சூழ்நிலையை சிலர் தவறாக பயன்படுத்தி தேவையற்ற அசம்பா விதங்களை உருவாக்க நினைக்கிறார்கள். இதை தவிர்க்க, கிராமங்களை சேர்ந்த அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கிராம மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்படும். மேலும் தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்.

இந்த வழக்கை விசாரித்து வரும் பரமத்தி வேலூர் துணை கண்காணிப்பாளர் கலையரசன் பிபிசி தமிழிடம் தெரிவிக்கையில், "இந்த கொலை வழக்கில் வேறு யாரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. கைது செய்யப்பட்டுள்ள நபர் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய ஆதாரங்களைச் சேகரித்து வருகிறோம். மருத்துவ பரிசோதனைக்கும் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு வட மாநில தொழிலாளர்கள் தான் எனப் பரவும் செய்தியில் உண்மை இல்லை. அத்தகைய செய்திகளை பரப்புபவர்களை கண்காணித்து வருகிறோம். பொய் செய்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குடிசைகளுக்கு தீ வைத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த சமயம் அடிதடியில் ஈடுபட்டதற்காக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: