அமெரிக்கா - இரான் போர் நிறுத்தம் தொடர்வது ஏன் கடினம்? 4 விஷயங்கள்

அமெரிக்க-இரான் போர்நிறுத்தம்,  இரான், அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல்

பட மூலாதாரம், Atta Kenare / AFP via Getty Images

படக்குறிப்பு, பிராந்திய அளவில் புதிதாக நடத்தப்பட்ட தாக்குதல்களால், ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட அமெரிக்க-இரான் போர்நிறுத்தம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது
    • எழுதியவர், லூயிஸ் பருச்சோ
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான புதிய அச்சுறுத்தல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானின் மூத்த அதிகாரிகளுக்கு விடுத்துள்ளனர்.

புதன்கிழமை வளைகுடாவில் தனது ஹெலிகாப்டர்களில் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இரானிய ராணுவ மற்றும் கண்காணிப்புத் தளங்களைத் தாக்கியதாக அமெரிக்கா கூறியது. இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தாக்குதல்களை நடத்தியது; மற்றொரு தாக்குதலை தாங்கள் முறியடித்துள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில நாட்களிலேயே இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல், மேற்கு மற்றும் மத்திய இரானில் உள்ள இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

போர்நிறுத்தம் தொடங்கிய பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடந்த முதல் நேரடி மோதல் இதுவாகும். இந்த நிலையில், இரு தரப்பினரும் "தாக்குதல்களை" நிறுத்துமாறு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.

அமெரிக்க-இரான் போர்நிறுத்தம்,  இரான், அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல்

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, போர் நிறுத்தத்திற்கான சாதகமற்ற நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது போல் தோன்றக்கூடாது என்ற உள்நாட்டு நெருக்கடிக்கு இரான் தலைமை ஆளாகியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்

குறிப்பிட்ட விவரங்கள் எதையும் தெரிவிக்காமல், இரான் இனி "அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்" என்று அமெரிக்க அதிபர் கூறினார். இரான் "முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டுவிட்டது" என்றும், அது "இரானிடம் வெறும் பேச்சு மட்டுமே இருக்கிறது, செயலில் ஒன்றும் இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, தனது நாடு "எந்தவொரு தாக்குதலுக்கும் அல்லது அச்சுறுத்தலுக்கும் பதிலடி கொடுக்காமல் விடாது" என்று இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்திருந்த நிலையிலும், போர்க்களத்தில் அமெரிக்கா "தோல்விகளைச் சந்தித்துள்ளது" என்று அவர் கூறியிருந்த நிலையிலும் அமெரிக்க அதிபரின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.

தற்போதைக்கு, எந்தவொரு தரப்பும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாகக் கைவிடவில்லை, இருப்பினும் பதற்றம் மேலும் அதிகரித்தால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரிவான தீர்வை எட்ட அமெரிக்காவும் இரானும் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தை முயற்சிகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அப்படியானால், இந்த போர்நிறுத்தத்தை நிலைநிறுத்துவது ஏன் இவ்வளவு கடினமாக உள்ளது? என்ற கேள்விக்கு நிபுணர்களின் கூற்றுப்படி, அதற்கு நான்கு காரணங்கள் முக்கியமானதாக இருக்கலாம்.

1. இரானுக்கு இது ஒரு சுமூகமற்ற போர்நிறுத்தம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

வாஷிங்டனை தளமாகக் கொண்ட 'சென்டர் ஃபார் இன்டர்நேஷனல் பாலிசி' என்ற சிந்தனைக் குழுவின் மூத்த ஆய்வாளர் சினா தூசியின் கூற்றுப்படி, இரானின் கண்ணோட்டத்தில் இந்த போர்நிறுத்த உடன்படிக்கையானது மோதலின் "அடிப்படைப் பிரச்னைக்குத் தீர்வு காணவில்லை" என்பது ஒரு முக்கியக் காரணமாகும்.

லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் இரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மற்றும் இரானிய துறைமுகங்களின் மீதான கடற்படை முற்றுகை உள்ளிட்ட அமெரிக்காவின் தொடர்ச்சியான ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

செவ்வாயன்று, இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்துமாறு இரான் அழைப்பு விடுத்த ஒரு நாள் கழித்து, இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானில் தாக்குதல் நடத்தின.

முழு அளவிலான மோதலுக்குத் திரும்பாமல், "கணிசமான செல்வாக்கை" அமெரிக்கா தக்கவைத்துக் கொள்ளும் ஒரு போருக்குப் பிந்தைய ஏற்பாடாகவே இரான் இதைப் பார்க்கிறது. இதை இரானிய அதிகாரிகள் "நிலையற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கருதுவதாக தூசி கூறுகிறார்.

வாஷிங்டன் தன் வசம் "குறிப்பிடத்தக்க சாதகமான சூழலை" தக்க வைத்துக் கொள்ளும் ஒரு போருக்குப் பிந்தைய ஏற்பாடாகவே இரான் இதனைப் பார்க்கிறது; இதனை இரானிய அதிகாரிகள் "நிலையற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கருதுவதாக தூசி கூறுகிறார்.

அமெரிக்கா தனது ராணுவ அழுத்தத்தைத் தொடர்ந்து தக்கவைத்து, ஒப்பீட்டளவில் குறைந்த இழப்பில் இரானின் பிராந்தியக் கூட்டாளிகளை இலக்கு வைக்க முடிந்தால், அந்த நடவடிக்கைகள் இந்த பிராந்தியத்தின் நிரந்தர அம்சமாக மாறி, காலப்போக்கில் இரானின் நிலையை பலவீனப்படுத்திவிடும் என்று இரான் கவலைப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அதே வேளையில், இரான் தரப்பில் சுயகட்டுப்பாட்டைக் காட்டும்போது, எதிரிகள் தங்கள் மீதான ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தத்தைத் தொடர அனுமதிக்கும் ஒரு போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாகத் தங்களைக் காட்டிக்கொள்ளக் கூடாது என்ற உள்நாட்டு அழுத்தத்தையும் இரானின் தலைமை எதிர்கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

2. இஸ்ரேலின் பங்கு

அமெரிக்க-இரான் போர்நிறுத்தம்,  இரான், அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல்

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் போர்நிறுத்தத்தை வலுவிழக்கச் செய்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

போர் நிறுத்தத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளைச் சிக்கலாக்கும் முக்கியக் காரணியாக இஸ்ரேலின் நடவடிக்கைகளையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

"இரான் ஒரு பிராந்திய வல்லரசாக நீடிப்பதை அனுமதிக்கும் வகையிலான அமெரிக்க-இரான் ஒப்பந்தத்தை தடுப்பதே இஸ்ரேல் அடிப்படை குறிக்கோள்" என்று பிரிட்டனைச் தளமாகக் கொண்ட 'ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்' அமைப்பின் மூத்த ஆய்வாளர் முனைவர் எச்.ஏ. ஹெலியர் தெரிவித்துள்ளார். தூதரக முயற்சிகளில் இஸ்ரேல் ஒரு "முட்டுக்கட்டையாக" இருக்கக்கூடும் என்றும் அவர் விவரித்துள்ளார்.

"அமெரிக்கா இரானுடன் ராஜ்ஜிய ரீதியிலான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருப்பது தெரிந்திருந்தாலும், அந்த பேச்சுவார்த்தைகளை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்."

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு, இரான் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று டெல் அவிவிடம் டிரம்ப் வலியுறுத்தியிருந்த நிலையில், இஸ்ரேல் எந்த அளவுக்கு டிரம்பின் வார்த்தையை மீறியது என்பது குறித்து சில விவாதங்கள் எழுந்துள்ளன.

இருப்பினும், இரானுடனான நீண்டகால மோதலில் இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவையே நம்பியிருக்கிறது என்பதை ராணுவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

"இந்த போரில் இஸ்ரேலால் நீண்ட காலத்திற்குத் தனித்துச் செயல்பட முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஏனெனில் ஆயுத தளவாடங்கள் என்பவை தீர்ந்துபோகக் கூடியவை" என்று இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் யெஹோஷுவா காலிஸ்கி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ராணுவ வரலாற்றாசிரியர் டேனி ஓர்பாக்கின் கூற்றுப்படி, இரானுடனான எந்தவொரு ஒப்பந்தமும் இஸ்ரேலின் பாதுகாப்பு கவலைகளைப் புறக்கணிக்க முடியாது என்பதை அந்நாடு இதன் மூலம் அடிக்கோடிட்டு காட்டுகிறது.

"ஒருவேளை ஏதேனும் சாத்தியமான போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, அது இஸ்ரேலின் நலன்களைக் கடுமையாகப் பாதித்தால், இஸ்ரேல் அந்த ஒப்பந்தத்தையே தலைகீழாக மாற்றிவிடக் கூடும்" என்று அவர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிபிசிக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், நிதானமாக இருக்குமாறு தான் வலியுறுத்திய போதிலும், இரானின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுத்ததன் மூலம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன்னை மீறிச் செயல்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார்.

3. பதற்றம் அதிகரிப்பு

மூன்றாவது காரணி என்னவென்றால், பதற்றங்கள் அதிகரிப்பதே பேச்சுவார்த்தை உத்தியின் ஒரு பகுதியாக மாறிவிட்டதாகத் தோன்றுகிறது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான ராணுவ அழுத்தம், பொருளாதாரத் தடைகள் மற்றும் கடல்சார் முற்றுகை ஆகியவை இருந்தபோதிலும், இரானின் தலைமை இன்னும் ஆட்சியில் நீடிப்பதோடு, அதன் பாதுகாப்பு கட்டமைப்பும் சிதையாமல் உள்ளது. இரானின் எதிரிகள் முன்பு கணித்ததுபோல இரானில் உள்நாட்டு பதற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை.

இது இரானின் மீள்திறன் உணர்வை வலுப்படுத்தியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எந்த விலை கொடுத்தாவது மோதலைத் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பதற்குப் பதிலாக, அழுத்தங்களைத் தாங்கும் திறன் தங்களுக்கு இருப்பதாக இரான் இப்போது கருதக்கூடும்.

அதே நேரத்தில், ராணுவ அழுத்தமும் , அரசுகளிடையிலான பேச்சுவார்த்தைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

"இரான் ராஜ்ஜிய பேச்சுவார்த்தைகளைக் கைவிடவில்லை," என்று தூசி கூறுகிறார்.

லெபனான், வளைகுடா மற்றும் பிற இடங்களில் சமீபத்தில் நடைபெற்ற நடவடிக்கைகளில் பெரும்பாலும் இரான் ஆதரவு குழுக்கள் சம்பந்தப்பட்டவை அனைத்தும், போரைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டவை அல்ல; மாறாக தற்போதைய நிலையில் பாதிப்பை அதிகரிப்பதையும், அதன் மூலம் பேச்சுவார்த்தை மேஜையில் இரானின் நிலையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டவை என்று அவர் உறுதிபட கூறுகிறார்.

இதே கருத்தை எதிரொலிக்கும் ஹெலியர், "இதன் தர்க்கம் மிகவும் எளிமையானது. இரான் மீது தாக்குதல் நடத்துவது இஸ்ரேலுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற நிலை இருந்தால், அந்தப் பிராந்தியத்தில் உள்ள ஒட்டுமொத்த அமெரிக்கப் பாதுகாப்பு கட்டமைப்பிற்கும் அதை பெரும் பாதிப்பாக மாற்றுங்கள் என்பதுதான் அது."

4. அமெரிக்க செல்வாக்கின் எல்லைகள்

அமெரிக்க-இரான் போர்நிறுத்தம்,  இரான், அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல்

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, சமீபத்திய நிகழ்வுகள் நீண்டகாலத் தீர்வைக் காண்பதை மேலும் கடினமாக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்காவின் பங்கு மற்றும் அது தனது செல்வாக்கைப் பயன்படுத்த எந்தளவுக்குத் தயாராக உள்ளது என்பதுதான் இறுதிக் காரணியாகும்.

இஸ்ரேலின் முதன்மையான ராணுவ ஆதரவாளராக இருக்கும் அமெரிக்கா, அதற்குத் தேவையான ஆயுதங்கள், நிதி மற்றும் ராஜ்ஜிய ஆதரவை வழங்குகிறது; இது இந்த மோதலின் போக்கை மாற்றுவதற்கான குறிப்பிடத்தக்க செல்வாக்கை அமெரிக்காவிற்கு வழங்குகிறது.

இந்த போர்நிறுத்த உடன்படிக்கையின் பலவீனமான நிலையைப் புரிந்துகொள்வதற்கு இந்த செல்வாக்கே மிகவும் முக்கியமானது என்று ஹெலியர் கூறுகிறார்.

"இஸ்ரேல் மாற வேண்டும் என்று அமெரிக்கா விரும்பினால், அதை மாற்றுவதற்கான பலம் அதனிடமே உள்ளது" என்று கூறும் அவர், தங்களது ஆதரவிற்கான வரம்புகளைப் பற்றி ஒரு சிறிய சைகை காட்டினாலே அது "உடனடியாக டெல் அவிவின் கவனத்தை ஈர்க்கும்" என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

"அந்தச் செல்வாக்கை அதற்கேற்பப் பயன்படுத்த அது தவறினால், அதுவும் உடந்தையாகிறது. அமெரிக்காவுக்கு இஸ்ரேலை கட்டுப்படுத்துவதற்கான செல்வாக்கு இருக்கிறது; ஆனால் அதைப் பயன்படுத்துவதற்கான விருப்பம் இல்லை."

எதிர்கால அபாயங்கள்

இந்தக் காரணிகள் அனைத்தும் ஒரு நிரந்தரமான தீர்வை எட்ட முடியாதபடி நிலைமையை மேலும் கடினமாக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போதைக்கு, ராஜ்ஜிய பேச்சுவார்த்தை ஒன்றே முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே சாத்தியமான வழி என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், ராஜ்ஜிய பேச்சுவார்த்தையானது "ராணுவ நடவடிக்கைகளுக்கான ஒரு மறைப்பாக" பார்க்கப்படும் நிலை அதிகரித்தால், "தன் மீது தாக்குதல் நடத்தினால், அதன் எதிரொலியாக தாங்க முடியாத பாதிப்பை ஏற்படுத்துவதன்" மூலம் இரான் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ளக்கூடும் என்று ஹெலியர் எச்சரிக்கிறார்.

இத்தகைய அணுகுமுறை மாற்றம், எதிர்காலத்தில் மோதல்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதோடு, அவற்றை மேலும் ஆபத்தானதாகவும் மாற்றக்கூடும் என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு