சீனா இப்போது அமெரிக்காவை விடுத்து ஜப்பானை முதன்மை எதிரியாக கருதுகிறதா?

    • எழுதியவர், பிபிசி மானிட்டரிங்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிசிபி) அதிகாரப்பூர்வ செய்தித் தாளான பீப்பிள்ஸ் டெய்லி, அந்த கட்சி எதைப் பற்றி கவலைப்படுகிறது என்பதற்கான தெளிவான அறிகுறியை காட்டுகிறது.

இதன் பக்கங்களில் தொடர்ந்து வெளியாகும் கட்டுரைகள், தைவான், வர்த்தகம் மற்றும் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட தற்போதைய பிரச்னைகளில் கட்சியின் கருத்துக்கள் மற்றும் கொள்கைகளை தெளிவாக விளக்குகின்றன.

இந்த நாளிதழில் ஜோங் ஷங் (சீனாவின் குரல்) என்ற பெயரில் வெளியாகும் சர்வதேச விவகாரங்கள் குறித்த கருத்துக் கட்டுரைகள், பெரும்பாலும் சீனாவின் மிகப்பெரிய உலகளாவிய போட்டியாளரான அமெரிக்காவை விமர்சித்து வந்துள்ளன.

ஆனால், அக்டோபர் 2025 முதல், இது பழைய போட்டியாளரான ஜப்பானை முதன்மையான இலக்காக வைத்துள்ளது.

இது ஏன், இதன் பொருள் என்ன என்பதை இந்தக் கட்டுரை ஆராய்கிறது.

கவனம் மாறியது ஏன்?

சீனாவின் கவனம் மாறியதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜப்பானின் பிரதமரான பிறகு, வலதுசாரித் தலைவரான சனாய் டகாயிச்சி ராணுவத்துக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளார் என்பது ஒரு காரணம்.

இது சீனாவில் பழைய கவலைகளையும் வரலாற்று ரீதியான அதிருப்தியையும் மீண்டும் தூண்டியுள்ளது. அதே நேரத்தில், நாட்டின் உள்ளே இருக்கும் ஏமாற்றத்தை, ஏற்கெனவே நிறுவப்பட்ட ஒரு வெளிநாட்டு எதிரியை நோக்கி திருப்புவதற்கான வாய்ப்பையும் இது சிசிபி-க்கு வழங்கியுள்ளது.

நாட்டுக்குள் மக்களின் கருத்து மற்றும் சிந்தனையை திறம்பட வழிநடத்துவதே இதன் நோக்கம் என்று ஜோங் ஷங் கூறுகிறது.

இரண்டாவது காரணத்தை அமெரிக்க தரப்பில் இருந்து பார்த்தால், 2025-ஆம் ஆண்டின் பெரும்பகுதி நடந்த பரஸ்பர வரிவிதிப்பு போருக்குப் பிறகு, இரு நாடுகளும் தங்களது உறவுகளை நிலைப்படுத்தவும் மேம்படுத்தவும் முயற்சிக்கும் நேரத்தில் அமெரிக்கா மீதான விமர்சனங்கள் குறைந்து வருகின்றன.

தலையங்க நிலைப்பாட்டில் வந்த இந்த மாற்றம் எப்படித் தெரிகிறது?

டகாயிச்சி பொறுப்பேற்ற பிறகு, ஜோங் ஷங்கின் தலையங்கங்களின் கவனம் திடீரென அமெரிக்காவில் இருந்து விலகி ஜப்பான் மீது மையம் கொண்டது.

டகாயிச்சி ஆட்சிக்கு வந்த பிறகு, ஜோங் ஷங் ஜப்பான் மீது 27 விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. இவை தவிர அமெரிக்கா குறித்து கலவையான நிலைப்பாடு கொண்ட 11 கட்டுரைகள் வெளியிடப்பட்டன.

அமெரிக்காவை கடுமையாக விமர்சிக்கும் கட்டுரைகள் இரண்டு மட்டுமே வெளியிடப்பட்டன. அமெரிக்கா மற்றும் ஜப்பான் தவிர மற்ற தலைப்புகளில் 2 கட்டுரைகள் மட்டுமே வெளியிடப்பட்டன.

2025ம் ஆண்டு நவம்பர் 14 அன்று வெளியான ஜப்பான்-எதிர்ப்பு கட்டுரைகளின் முதல் கட்டுரை, "நெருப்போடு விளையாட வேண்டாம்" என்று டகாயிச்சியை எச்சரித்தது.

இதற்குக் காரணம், தைவான் தொடர்பாக ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால், ஜப்பான் ராணுவ ரீதியாக தலையிடக்கூடும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இது சீனாவின் கவலைகளை அதிகரித்தது.

சீனாவின் இந்த சிவப்புக் கோடு தாண்டப்பட்டவுடன், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் பின்பற்றிய அமைதிவாதக் கொள்கையிலிருந்து விலகுவதற்கான அறிகுறிகளாகக் கருதப்பட்ட டகாயிச்சியின் பிற நடவடிக்கைகள் மீதும் விமர்சனங்கள் குவிந்தன.

இந்த நீண்ட தொடர் விமர்சனங்களில், டகாயிச்சியின் பல கொள்கைகளும் நடவடிக்கைகளும் இலக்கு வைக்கப்பட்டன.

அந்த விமர்சனங்களில் ஜப்பானின் அமைதிவாத அரசியலமைப்பைத் திருத்த வேண்டும் என்ற அவரது நோக்கம், நாட்டில் "ராணுவவாதத்தின் மறுவருகை", மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக ஜப்பானின் "ஏமாற்றக்கூடிய பரப்புரை" ஆகியவை அடங்கும்.

இது தவிர, இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களின் வரலாற்றை "சிதைத்துக் காட்ட முயற்சிப்பது", ஜப்பானின் "அணுசக்தி லட்சியங்கள்", பிலிப்பைன்ஸுடன் அதன் "கூட்டுச்சதி", ஆயுத ஏற்றுமதி விதிகளில் தளர்வு மற்றும் தற்காப்பு என்பதோடு நின்ற ராணுவக் கொள்கையிலிருந்து விலகி தீவிர ராணுவ நிலைப்பாட்டை எடுப்பது போன்ற "ஆபத்தான கொள்கை மாற்றங்களும்" இந்த விமர்சனங்களில் அடங்கும்.

சீனாவின் அரசு ஊடகங்களில் டகாயிச்சிக்கு எதிரான தனிப்பட்ட விமர்சனங்களும் தாக்குதல்களும் குவிந்துள்ளதையும் நாம் கண்டுள்ளோம்.

இருப்பினும், தன் மீது சுமத்தப்படும் "புதிய ராணுவவாதம்" என்ற குற்றச்சாட்டுகளை ஜப்பான் நிராகரித்துள்ளது.

மே மாதம் நடைபெற்ற ஷாங்க்ரி-லா பாதுகாப்பு மாநாட்டில் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி பேசுகையில், உண்மையில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகளே சர்வதேச சமூகத்துக்கு "கடுமையான கவலைக்குரிய" விஷயமாகும் என்றார்.

அதே நேரத்தில், ஜப்பான் தனது பாதுகாப்புக்காக அமெரிக்காவை சார்ந்திருப்பதை குறைப்பதற்காகவே தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருவதாக சில நிபுணர்கள் நம்புகின்றனர்.

அமெரிக்காவின் கொள்கைகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதால், ஜப்பான் தனது பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகளவில் தற்சார்புள்ளதாக மாற்ற விரும்புகிறது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

ஜோங் ஷங்கில் அமெரிக்காவைப் பற்றி என்ன எழுதப்பட்டது?

சீன ஊடகங்களில் அமெரிக்கா ஒரு மிக முக்கியமான தலைப்பாக இருந்து வருகிறது. சீனா பெரும்பாலும் அமெரிக்காவை தனக்கு நேர்மாறான ஒரு உதாரணமாகக் காட்டுகிறது.

சீனா ஒரு நிலையான, அமைதியை விரும்பும், வளரும் நாடுகளின் (உலகளாவிய தெற்கு) ஆதரவாளராக, வர்த்தகத்துக்காகத் திறந்திருக்கும், பன்முக ஒத்துழைப்பில் நம்பிக்கை கொண்ட நாடாக இருப்பதாக சீனா கூறுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா படிப்படியாக இந்த குணங்களில் இருந்து விலகிச் செல்வதாக சீனா பார்க்கிறது.

இருப்பினும், அமெரிக்காவுடனான உறவுகளை சீராக வைத்திருப்பதில் சீனாவுக்கு அதிக ஆர்வம் உள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணம் அமெரிக்கா அதன் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருப்பதுதான்.

ஆனால் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வர்த்தக வரிகள் உலகளாவிய வர்த்தக அமைப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கி, சீனா மீது மிகக் கடுமையான வரிகள் விதிக்கப்பட்டபோது, ஜோங் ஷங் அமெரிக்காவுக்கு எதிராக விமர்சனக் கட்டுரைகளைக் குவித்தது.

அந்த ஒரு மாதத்தில் மட்டும் ஜோங் ஷங் அமெரிக்காவை விமர்சித்து 11 கட்டுரைகளை வெளியிட்டது. இந்தக் கட்டுரைகளில் அமெரிக்கா மீது "அளவுக்கு அதிகமான வரிகளை" விதிப்பதாகவும் "பொருளாதார ரீதியான கட்டாயப்படுத்துதலில்" ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அத்துடன், அமெரிக்கா " உலகளாவிய பன்முக வர்த்தக அமைப்பின் மிகப்பெரிய அழிப்பாளராக" மாறிவிட்டது என்றும், "தகுதியுள்ளது மட்டுமே தப்பிப்பிழைக்கும்" என்பது போன்ற சிந்தனை ஆதிக்கம் செலுத்தும் ஒரு சூழ்நிலைக்கு உலகைத் தள்ளியுள்ளது என்றும் கூறப்பட்டது.

இதற்குப் பிறகு வெளியான கட்டுரைகளில் அமெரிக்காவுடனான சீனாவின் பேச்சுவார்த்தைகள் நேர்மறையான பார்வையில் சித்தரிக்கப்பட்டன. வர்த்தகத் தகராறுகளைத் தீர்க்கவும் உறவுகளை மீண்டும் சீராக்கவும் இரு நாடுகளுக்கும் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இதன் தொடர்ச்சியாக, ஷி ஜின்பிங் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே இந்த ஆண்டு மே மாதம் சந்திப்பு நடைபெற்றது.

இந்த உச்சிமாநாட்டுக்குப் பிறகு வெளியான கட்டுரைகளில் இருதரப்பு உறவுகளில் "புதிய ஆற்றல்" மற்றும் "புதிய அத்தியாயம்" பற்றி பேசப்பட்டது. இருப்பினும், இந்தக் கட்டுரைகளின் நோக்கம் அமெரிக்காவைப் பாராட்டுவது என்பதை விட, ஷி ஜின்பிங்கை ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட, திறமையான தலைவராகக் காட்டுவதாகவே இருந்தது.

கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இரு நாடுகளின் உறவுகளை "ஆக்கப்பூர்வமான மூலோபாய நிலைத்தன்மை" நோக்கி எடுத்துச் செல்லும் ஒரு தலைவராக அவர் காட்டப்பட்டார்.

இருப்பினும் டொனால்ட் டிரம்ப்பின் ராணுவ நடவடிக்கைகள் குறித்த சீனாவின் ஆழமான கவலைகளை வெளிப்படுத்துகின்றன என்பதால் 2026-இல் வெளியான இரண்டு கட்டுரைகள் குறிப்பாகக் கவனத்தை ஈர்க்கின்றன.

ஜனவரியில் வெளியான ஒரு கட்டுரை, வெனிசுவேலாவின் அதிபராக அப்போது இருந்த நிக்கோலஸ் மதுரோவைப் பிடிப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கையை விமர்சித்தது. இத்தகைய "ஆதிக்கம்" உலகளாவிய நிலைத்தன்மையின் அடித்தளத்தை உலுக்கக்கூடும் என்று அந்தக் கட்டுரை கூறியது.

ஏப்ரலில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு இதே வாதம் மேலும் முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட்டது. அந்த நேரத்தில் ஜோங் ஷங், ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் அமெரிக்காவைக் குறிக்கப் பயன்படுத்திய "வேட்டையாடும் ஆதிக்க சக்தி" என்ற வார்த்தையைக் குறிப்பிட்டது. இந்த விளக்கம் அமெரிக்கா குறித்து சீனா நீண்டகாலமாகச் செய்து வரும் விமர்சனங்களுக்கு ஒத்ததாக இருந்தது.

ஜப்பான், சீனாவின் முதன்மை எதிரியா?

உள்நாட்டு கருத்துப் பரப்பல் என்ற பார்வையில் பார்த்தால், 2026-இல் ஜோங் ஷங்கின் செய்திகள் ஜப்பானை முதன்மை எதிரியாகச் சித்தரித்துள்ளன.

இரண்டாம் உலகப் போரின் போது தான் செய்த கொடுமைகளுக்காக ஜப்பான் போதிய அளவு வருந்தவில்லை என்று சீனா நம்புகிறது.

அந்தக் காலத்தின் வலி இன்றும் சீன சமூகத்தில் ஆழமாக உள்ளது மற்றும் அரசு ஊடகங்கள் அவ்வப்போது அதை நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன. எனவே, ஜப்பான் பெரும்பாலும் மக்களின் கோபத்துக்கும் அதிருப்திக்கும் எளிதான இலக்காகிவிடுகிறது.

சீனா அநேகமாக ஜப்பானின் ராணுவவாத கடந்த காலத்தையும் தற்போது அது தனது ராணுவ பலத்தை அதிகரிக்க எடுக்கும் முயற்சிகளையும் ஒரே கதையின் இரண்டு பகுதிகளாகப் பார்க்கிறது.

இவ்விரு விஷயங்களும் இணைந்து ஜப்பானை ஒரு சாத்தியமான அச்சுறுத்தலாகக் காட்டும் வாதத்தை மேலும் வலுப்படுத்துகின்றன என்பது சீனாவின் கூற்று.

ஜப்பானை ஒரு "நவ-ராணுவவாத" நாடாகக் காட்டுவது சர்வதேச அரங்கில் ஜப்பானைத் தனிமைப்படுத்தும் சீனாவின் உத்தியின் ஒரு பகுதியாகும்.

இவை அனைத்துக்கும் மத்தியிலும், அமெரிக்கா சீனாவின் மிக முக்கியமான உலகளாவிய போட்டியாளராகவும் மூலோபாயப் போட்டியாளராகவும் தொடர்கிறது. சீனாவின் எழுச்சி பாதையில் உள்ள மிகப்பெரிய தடையும் அதுவேயாகும்.

இரு நாடுகளுக்கும் இடையே எப்போதாவது மோதல் ஏற்பட்டால், அது மிகவும் ஆபத்தான வடிவத்தை எடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

"துசிடிடிஸ் ட்ராப்" (Thucydides Trap) என்பதில் இருந்து தப்பிக்க சீனாவும் அமெரிக்காவும் தங்களது உறவுகளை கவனமாகக் கையாள வேண்டும், என்று ஷி ஜின்பிங் பலமுறை வலியுறுத்தியுள்ளார்.

"துசிடிடிஸ் ட்ராப்" என்பது, ஏற்கெனவே நிறுவப்பட்ட ஒரு வல்லரசுக்கும் வளர்ந்து வரும் ஒரு சக்திக்கும் இடையிலான மோதல் கிட்டத்தட்ட தவிர்க்க முடியாததாகிவிடும் ஒரு சூழ்நிலையைக் குறிக்கிறது.

மறுபுறம், ஜப்பான் சீனாவுக்கு மிகப்பெரிய பிராந்திய கவலையாக உள்ளது. ஜப்பான் உண்மையில் தனது அமைதிவாத அரசியலமைப்பில் மாற்றம் செய்தால், அணு ஆயுதங்களைப் பெற்றால் அல்லது தைவானுடனான தனது உறவுகளை மேலும் வலுப்படுத்தினால், இந்தக் கவலை மேலும் அதிகரிக்கக்கூடும்.

சீனாவின் அரசு ஊடகங்களில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் வெவ்வேறு நோக்கங்களுக்காக "எதிரியாக" சித்தரிக்கப்படுகின்றன. ஆனால் தற்போது அமெரிக்காவை விட ஜப்பானை இலக்கு வைக்கும் குரல்கள் மிகவும் பலமாகவும் வெளிப்படையானதாகவும் இருப்பதாகத் தெரிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு