You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காண்டாமிருக வண்டு: தலையில் கொம்புடன் இருக்கும் இந்த பூச்சிக்கு விவசாயிகள் அஞ்சுவது ஏன்?
நான் முதன்முதலில் காண்டாமிருக வண்டு ஒன்றைப் பார்த்தபோது, அது ஏதோ சிறிய கவசமணிந்த ஓர் உயிரினம் போலத் தோன்றியது. அந்தத் தருணம், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மறையூரில், சாலையோரமாக பூச்சிகளை அவதானிப்பதற்காக பூச்சி நடை மேற்கொண்டிருந்தபோது வந்தது.
அந்த இயற்கை சூழ் நிலப்பரப்பில், மனிதர்களைவிட, இறக்கைகள், உணர்கொம்புகள், நிழல்களுக்கே இரவு அதிகம் சொந்தமானது போலத் தோன்றியது. கைவிளக்குகளின் ஒளியில் சாலையோரம் உயிர்ப்புடன் நடுங்கிக் கொண்டிருந்த இலைகளில் அமர்ந்திருந்த அந்துப்பூச்சிகளை, புழுதியினூடாக ஒழுங்கான பாதைகளில் ஊர்ந்து சென்ற எறும்புகளை அவதானித்துக் கொண்டிருந்தோம்.
இருளில் எங்கோ, சிள்வண்டுகள் தங்கள் ரீங்காரத்தை இசைத்துக் கொண்டிருந்தன. ஒவ்வோர் அடியிலும், அந்த நிலப்பரப்பு ஏதோ ரகசியப் பெட்டகத்தைத் திறப்பது போல, ஒவ்வொரு தாவரத்திலும் பல வகை இரவாடி சிற்றுயிர்களின் நடமாட்டத்தைக் காண முடிந்தது.
அப்போதுதான் அதையும் பார்த்தேன். சாலையோரம் இருந்த ஆமணக்குச் செடியின் அகன்ற இலை ஒன்றின்மீது, பளபளப்பான வண்டு கனமாக நின்றிருந்தது. டார்ச் ஒளியில் அதன் வளைந்த உடல் கருங்கல்லைப் போல மெருகேறியிருந்தது. அதன் தலையில் இருந்த கொம்பு, பயமுறுத்தும் அளவுக்குப் பெரிதாக இல்லையென்றாலும், என்னை அசைவின்றி நின்று ஆராய வைக்கும் அளவுக்கு விசித்திரமாக இருந்தது.
அந்த வண்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி அவசரமாக ஓடவில்லை. அது கிட்டத்தட்ட வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த ஏதோவொரு பழமையான உயிரினம் போலத் தோன்றியது.
அன்றிரவின் பூச்சி நடையில் என்னுடன் வந்து கொண்டிருந்த காட்டுயிர் ஒளிப்படக் கலைஞரும் சூழலியல் எழுத்தாளருமான சண்முகானந்தம், என் ஆச்சரியத்தைக் கண்டு புன்னகைத்தார்.
அதுவொரு காண்டாமிருக வண்டு என்றும், அதன் தலையிலுள்ள கொம்பின் காரணமாகவே அந்தப் பெயர் வந்தது என்றும் விளக்கினார்.
அதோடு, சாலையோரத்தில் காடுகளில் வாழும் பூச்சியாக என் கண்களில் முதலில் தென்பட்ட இந்த காண்டாமிருக வண்டு, தென்னை விவசாயிகளுக்கு மிகவும் பரிச்சயமான வண்டுகளில் ஒன்று என்பதையும் அவர் மூலமாகப் பின்னர் அறிந்துகொண்டேன்.
தென்னை விவசாயிகளின் எதிரி
பருத்த, கருமையான உடல் மற்றும் தலையிலுள்ள கொம்பு காரணமாக காண்டாமிருக வண்டு என்று அழைக்கப்படும் இது, ஒரு ஸ்காரப் (Scarab) வண்டினத்தைச் சேர்ந்தது.
இதில், நன்கு வளர்ந்த, முதிர்ச்சியடைந்த ஒரு வண்டு சுமார் 30 முதல் 57 மி.மீ வரை நீளம் கொண்டிருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல்கள் கூறுகின்றன.
பொதுவாக, ஆண் வண்டுகளில் தலை மீதிருக்கும் கொம்பு மிகவும் எடுப்பாக இருக்கும் என்று விவரிக்கும் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆய்வுகள், இந்த வண்டின் உண்மையான முக்கியத்துவம் அதன் தோற்றத்தில் மட்டுமே இல்லையெனவும், இரவு நேரத்தில் அவை மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்பில் அடங்கியுள்ளதாகவும் கூறுகின்றன.
காண்டாமிருக வண்டுகள், தென்னை மரங்களின் குருத்துப் பகுதியில் துளையிட்டுச் செல்கின்றன. மரத்தின் மையக் குருத்தில் துளைகள், கடித்துத் துப்பப்பட்ட நார்கள், சேதமடைந்த குருத்தோலைகள், ஓலை முழுமையாக விரியும்போது தென்படும் முக்கோண வடிவ வெட்டுகள் போன்ற அறிகுறிகளின் மூலம் ஒரு தென்னை மரத்தில் காண்டாமிருக வண்டுகள் ஊடுருவியுள்ளன என்பதை விவசாயிகள் கண்டறிகின்றனர்.
மேலோட்டமாகப் பார்க்கையில் இந்த வண்டு ஓர் அபூர்வமான, ஆச்சர்யமளிக்கும் பூச்சி போலத் தோன்றலாம். ஆனால், விவசாயத்தில், இது பனை வகை மரங்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளாகவே பார்க்கப்படுகின்றன.
கருவண்டு என்றும் அழைக்கப்படும் இது, இந்தியாவின் தென்னை விளையும் அனைத்து மாநிலங்களிலும் தென்னைகளுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சியாகவே உள்ளன. இவை, நாற்றுகள், தென்னங்கன்றுகள், முதிர்ந்த காய்க்கும் நிலையிலுள்ள மரங்கள் என அனைத்தையும் பாதிப்பதாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் குறிப்பிடுகிறது.
குறிப்பாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தகவல்படி, முதிர்ந்த காண்டாமிருக வண்டுகள் விரியாத பூங்கொத்துகளையும் ஓலைகளையும் சேதப்படுத்தி, மரத்தின் வளர்ச்சியையும் மகசூலையும் பாதிக்கிறது.
"இந்த வண்டுகளால் மனிதர்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. இவை மக்களைக் கடிப்பதில்லை, அவற்றின் கொம்பு நமக்கு எதிரான ஆயுதமாகச் செயல்படுவதில்லை" என்று கூறும் அசோகா சுற்றுச்சூழல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர் ப்ரியன், "அந்தக் கொம்புகளின் உண்மையான தாக்கம் தென்னை மரங்களில்தான் உள்ளது. நன்கு வளர்ந்த வண்டுகள் மரத்தின் அடிமரத்தில் துளையிடுவதற்கு அது உதவுகிறது. மையக் கதிரில் துளைகள், கதிரின் அடிப்பகுதியில் மெல்லப்பட்ட நார், சரிந்து விழுந்த மையக் கதிர், விரிந்த ஓலைகளில் முக்கோண வடிவில் காணப்படும் வெட்டுகள் ஆகியவை இந்தப் பூச்சிகள் மரத்தை சேதப்படுத்தியுள்ளது என்பதற்கான பொதுவான அறிகுறிகள்" என்றும் அவர் விளக்கினார்.
"காண்டாமிருக வண்டுகள், வாழை, கரும்பு, பப்பாளி, அண்ணாசி பழம் போன்ற பல்வேறு வகைத் தாவரங்களையும் சார்ந்து இருந்தாலும், தென்னை மரங்கள்தான் அவற்றை அதிகமாக ஈர்க்கின்றன" என்று 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் வேளாண் பூச்சியியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வின்படி, இந்த வண்டுகளால் ஏற்படும் சேதம் 20% வரையிலான மகசூல் இழப்புக்கு வழிவகுக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
தமிழ்நாட்டின் பொள்ளாச்சி-உடுமலைப்பேட்டை பகுதியிலும், கேரளாவின் நீண்ட தென்னை விளையும் நிலப்பரப்பிலும், இந்த கருவண்டுகள் தென்னை விவசாயிகளின் முக்கிய எதிரியாக, மகசூலில் இடர்களை உருவாக்கும் முதன்மைப் பூச்சியாக விளங்குகின்றன.
மாட்டுச் சாணத்தில் தொடங்கும் வாழ்க்கை
தென்னைகளில் அவற்றுக்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கும் நிலையில் காணப்படும் முதிர்ந்த வண்டு, அவற்றின் வாழ்க்கைப் பின்னணியில் இருக்கும் ஒரு கட்டம் மட்டுமே.
பொதுவாக அவற்றின் வாழ்க்கை முதலில், சாணக் குழிகள், அழுகும் தென்னை மரக்கட்டைகள், மாட்டுச் சாணக் குழிகள், மக்கிய உரக் குவியல்கள், மண்புழு உரங்கள், தேங்காய் நார் மற்றும் பிற மக்கும் கரிமப் பொருட்களில் தொடங்குவதாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாதிரியான இடங்களை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், முதிர்ந்த காண்டாமிருக வண்டுகள் முட்டையிடுவதற்கான முதன்மைப் பகுதிகளாகப் பட்டியலிட்டுள்ளது.
மத்திய தோட்டப்பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டு உலகளாவிய ஆக்கிரமிப்பு உயிரினங்களின் தரவுத் தளத்தில் வெளியான ஓர் இனவியல் விவரக்குறிப்பு, "இந்த வண்டுகள் காய்ந்த தென்னை மரங்களிலும், மக்கிய உரம் மற்றும் மரத்தூள் குவியல்கள் போன்ற மக்கும் கரிமப் பொருட்களில் இனப்பெருக்கம் செய்வதாக" குறிப்பிடுகிறது.
மேலும், இந்தியாவில் மாட்டுச் சாணக் குவியல்கள் அவற்றின் முக்கியமான இனப்பெருக்கத் தளங்களாகச் செயல்படுவதாகவும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறையாகப் பராமரிக்கப்படாத காய்ந்த தென்னை மரங்கள், சாணக் குவியல்கள், மக்கும் கரிமப் பொருட்கள் இருக்கக்கூடிய ஒரு தென்னந்தோப்பு, இந்த வண்டுகளின் பெருக்கத்துக்கு நல்வாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
காண்டாமிருக வண்டுகளின் ரகசிய இனப்பெருக்கம்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பதிவுகள்படி, "ஓரிக்டெஸ் ரைனோசெரஸ் என்ற அறிவியல் பெயரைக் கொண்ட காண்டாமிருக வண்டுகளின் முட்டைகள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். அவை 8 முதல் 12 நாட்களில் பொரிக்கின்றன."
மேலும், "இந்த வண்டுகளின் முதல் மற்றும் இரண்டாவது புழுப் பருவங்கள் முறையே, 10-21 நாட்கள், 12-21 நாட்கள் என்ற அளவில் நீடிக்கும். பின்னர் மூன்றாவது புழுப் பருவம் 60 முதல் 165 நாட்கள் வரை தொடரக்கூடும்" என்றும் அந்தப் பதிவுகள் கூறுகின்றன.
அதைத் தொடர்ந்து, "கூட்டுப்புழு பருவத்துக்கு முந்தைய நிலையில் 8-13 நாட்கள் நீடிக்கும் இவை, 17 முதல் 28 நாட்கள் வரை கூட்டுப்புழு (Pupa) பருவத்தில் உறங்குகின்றன."
மொத்தமாக, காண்டாமிருக வண்டுகளின் வாழ்க்கை சுழற்சி நான்கு முதல் ஒன்பது மாதங்கள் வரை நீடிக்கலாம். இது ஓராண்டுக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட புதிய தலைமுறைகளை உருவாக்க அவற்றுக்கு வழிவகுக்கிறது.
மத்திய தோட்டப்பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் சந்திரிகா மோகன் ஆராய்ந்த உலகளாவிய ஆக்கிரமிப்பு உயிரினங்களின் தரவுத் தளத்தில் உள்ள ஒரு விவரக் குறிப்பில், இனச்சேர்க்கை மேலே நாம் பார்த்த இடங்களில் நடைபெறுவதாகவும், பெண் வண்டுகள் அழுகும் மரக்கட்டைகள், கழிவுக் குவியல்களில் துளையிட்டு முட்டையிடுவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த இனத்தைச் சேர்ந்த ஒரு வயது வந்த வண்டின் சராசரி ஆயுட்காலம் சுமார் 4.7 மாதங்கள் எனவும், ஒரு பெண் வண்டு சுமார் 108 முட்டைகள் வரை இடும் எனவும் கடந்த 1955ஆம் ஆண்டு கே.கே.நிரூலா மற்றும் அவரது குழுவினர் வெளியிட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இது, காண்டாமிருக வண்டுகளின் இனப்பெருக்க செயல்முறையை வேளாண் நிலங்களின், குறிப்பாக தென்னந்தோப்புகளின் புறக்கணிக்கப்பட்ட மூலைகளுடன் பிணைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சாணம், அழுகும் தென்னை மரம், மரத்தூள் குவியல், உரக் குவியல் போன்ற கழிவுகள் இந்த வண்டுகளின் ரகசிய இனச்சேர்க்கை அறையாகவும் பின்னர் பெண் வண்டுகள் முட்டையிடும் இடமாகவும் மாறுகின்றன.
இனப்பெருக்கச் செயல்முறை குறித்த சமீபத்திய ஆய்வுகள், இந்த வண்டுகளின் கவரக்கூடிய, கவசம் போன்ற உடலமைப்பு போலவே, அவற்றின் இனப்பெருக்க நடத்தையும் மிகச் சிக்கலானது என்பதைக் கண்டறிந்துள்ளன.
கிராப் புரொடெக்ஷன் என்ற ஆய்விதழில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ஒரு பகுப்பாய்வு, காண்டாமிருக வண்டுகள், எத்தில் 4-மெத்திலோக்டானோயேட்' என்ற ஒரு திரளான ஃபெரோமோனை உற்பத்தி செய்கின்றன.
அந்த ஆய்வின்படி, "இந்த ஃபெரோமோன், பனை மரங்கள் மற்றும் இனப்பெருக்கம் செய்யவல்ல இடங்களில் பொருத்தமானவற்றைக் கண்டறிய அவற்றுக்கு உதவுகிறது. கண்காணிப்புக்காக பயன்படுத்தப்படும் ஃபெரோமோன் பொறிகளுக்குப் பின்னாலுள்ள அதே வேதிம தர்க்கம்தான் இங்கும் செயலில் உள்ளது."
தலையிலுள்ள கொம்பு எதற்குப் பயன்படுகிறது?
கடந்த 1990இல் கேரள பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆய்வில், ஏ.மினி, வி.கே.கே.பிரபு ஆகியோர், காண்டாமிருக வண்டு வெவ்வேறு சூழல்களில் பல்வேறு வகையான கீச்சிடும் ஒலிகளை எழுப்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
அந்த ஆய்வின்படி, "ஆண் வண்டுகள் காதல் மற்றும் இனச்சேர்க்கை முயற்சிகளின்போது தீவிரமான கீச்சிடும் ஒலிகளை எழுப்புகின்றன. அதுவே ஆக்ரோஷமான மோதல்களின்போது அதற்கேற்ற தனித்துவமான ஒலிகளை எழுப்புகின்றன. ஒப்பீட்டளவில் பெண் வண்டுகள் குறைவாகவே கீச்சிட்டன. அதேநேரம் பாலியல் முதிர்ச்சியை அடையாத பெண் வண்டுகள், ஆண் வண்டுகளின் கவனத்தை ஈர்க்கும்போது, அவற்றை விரட்டுவதற்கு ஏற்ற ஒலிகளை எழுப்புகின்றன."
மேலும் இந்த ஆய்வு ஓர் அசாதாரணமான நடத்தையைப் பதிவு செய்தது. அதாவது, "ஆண் வண்டுகளுடன் இனச்சேர்க்கையில் ஈடுபட்டு கருவுறும் பெண் வண்டுகள், சில நேரங்களில் ஆணின் காதல் மற்றும் இனச்சேர்க்கை நடத்தையைத் தழுவி, அவற்றின் ஒலிகளை ஒத்த தீவிரமான கீச்சிடும் ஒலிகளை எழுப்பியதை" ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
இவை மட்டுமின்றி, இந்த வண்டுகளின் தலையிலுள்ள புகழ்பெற்ற கொம்பு அமைப்பு குறித்து அனிமல் பிஹேவியர் என்ற ஆய்விதழில் 2015 நவம்பரில் வெளியான 31 காண்டாமிருக வண்டு இனங்கள் குறித்த ஓர் ஒப்பீட்டு ஆய்வு பேசுகிறது. அந்த ஆய்வின்படி, "வளங்களுக்கான போட்டி பல்வேறு பூச்சியினங்கள் மத்தியில் ஏற்படும்போதும் பிற சிற்றுயிர்களைக் குத்திப் பிளந்து, அப்புறப்படுத்த இந்தக் கொம்புகளை காண்டாமிருக வண்டுகள் பயன்படுத்துகின்றன."
அதோடு, "தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படும் தென்னை காண்டாமிருக வண்டுகளைப் பொறுத்தவரை, ஆண், பெண் பூச்சிகளிடையே கொம்பின் தோற்றத்தில் வேறுபாடு உள்ளது. ஆண் வண்டுகளுக்கு இந்தக் கொம்பு அளவில் பெரியதாக இருக்கும்" என்று அமெரிக்காவின் கூட்டுறவு வேளாண் பயிர் பூச்சிக் கணக்கெடுப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.
காண்டாமிருக வண்டுகள், விவசாயத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடிய உயிரினம் என்றாலும், மற்றபடி அவை மனிதர்களுக்கு எந்த விதத்திலும் காயம் ஏற்படுத்தக்கூடிய அல்லது அச்சத்திற்குரிய உயிரினம் அல்ல.
அவற்றால் ஏற்படும் சேதம் விவசாயிகளைக் கவலைகொள்ளச் செய்கிறது. அதேவேளையில், மரத்தின் உச்சியைக் கண்காணிப்பது, அவை இனப்பெருக்கம் செய்ய வசதியான இடங்கள் உருவாகாமல் சுற்றத்தைத் தூய்மையாக வைத்திருப்பது போன்ற நடவடிக்கைகள், அவற்றால் ஏற்படும் சேதங்களைத் தவிர்ப்பதில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளன என்பனவற்றை அவற்றின் வாழ்க்கை சுழற்சியைப் புரிந்துகொள்வது நமக்கு உணர்த்துகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு