You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நகைகளை பறித்த இளைஞர் தள்ளிவிட்டார்': இரவும் பகலும் கிணற்றுக்குள் தன்னந்தனியே பரிதவித்த பெண்
- எழுதியவர், பிரவீண் ஷுபம்
- பதவி, பிபிசிக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தெலங்கானாவில் கூலி வேலை தருவதாகக் கூறி 55 வயது மதிக்கத்தக்க பெண்ணை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று, அங்கு அவரிடமிருந்த நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு, விவசாயக் கிணற்றுக்குள் தள்ளிவிட்ட வழக்கில் ஒருவரை கரீம்நகர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கிணற்றில் மூழ்கிவிடாமல், தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்தப் பெண் இரவும் பகலுமாக கிட்டத்தட்ட 24 மணி நேரம் உதவிக்காக போராடிக் கொண்டிருந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
பட்டப்படிப்பு மாணவரான அந்த இளைஞர் ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையாகி கடனில் மூழ்கியதால் இந்தக் கொடூரச் செயலைச் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், அப்பகுதி மக்கள் அந்தப் பெண்ணைப் பத்திரமாகப் மீட்டு கிணற்றிலிருந்து வெளியே கொண்டு வந்தனர்.
விவசாய வேலைக்காக அங்கு சென்றபோது தான் ஏமாற்றப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.
நடந்தது என்ன?
கரீம்நகர் கிசான்நகரைச் சேர்ந்த கங்காதர லட்சுமி என்ற 55 வயது பெண்மணி ஜூலை 1-ஆம் தேதி வேலை தேடி டவர் சர்க்கிளில் உள்ள தினக்கூலித் தொழிலாளர்கள் கூடும் இடத்திற்குச் சென்றார். இரவு வரை அவர் வீடு திரும்பாததால், அவரது மகன்கள் கரீம்நகர் 'த்ரீ-டவுன்' காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காணாமல் போனவர் தொடர்பான வழக்கைப்பதிவு செய்ததாக கரீம்நகர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அன்று என்ன நடந்தது என்பது குறித்து பாதிக்கப்பட்ட லட்சுமி உள்ளூர் ஊடகங்களிடம் விவரித்தார்:
"ஜூலை 1-ஆம் தேதி, கூலி வேலை இருப்பதாகக் கூறிய ஓர் இளைஞர் என்னை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திம்மாபூருக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவர் என்னை நுஸ்துல்லாபூரின் புறநகர்ப் பகுதியில் உள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்று, என்னிடமிருந்த செல்போனைப் பறித்துக் கொண்டு, நான் அணிந்திருந்த தங்க நகைகளையும் பறித்துக் கொண்டார். நான் உதவி கேட்டு அலறியபோது, அவர் எனது வாயில் கைக்குட்டையைத் திணித்து, அருகில் இருந்த விவசாயக் கிணற்றில் தள்ளிவிட்டார்" என்று லட்சுமி கூறினார்.
திடீரென நிகழ்ந்த அந்தச் சூழலில் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் கண்முன்னே எவ்வாறு நிழலாடியது என்று லட்சுமி விவரித்தார். தன் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரின் நினைவு வந்து கண்ணீரை அடக்க முடியாமல் அழுததாகவும் லட்சுமி விவரித்தார்.
கிணற்றிலிருந்த ஒரு கயிற்றின் உதவியுடன் மேலே வர முயன்றபோது, அந்த இளைஞர் மேலிருந்து அந்தக் கயிற்றை அவிழ்த்துவிட்டதால், தான் மீண்டும் கிணற்றிற்குள்ளேயே விழுந்துவிட்டதாக அவர் கூறினார்.
'கால்களை தவளைகள் கடித்தன'
இரவு முழுவதும் விவசாயக் கிணற்றில் இருந்தபோது தான் அனுபவித்த பல்வேறு இன்னல்கள் குறித்து அந்தப் பெண், வேதனையுடன் தெரிவித்தார்
"எனக்கு நீச்சல் தெரியும் என்பதால், நான் பல மணி நேரம் நீந்திக்கொண்டே இருந்தேன். கிணற்றில் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருந்த கம்பிகள் மற்றும் ரப்பர் கயிறுகளைப் பிடித்து மேலே ஏற முயன்றபோதெல்லாம், ஈரமான மேற்பரப்பில் என் கால்கள் வழுக்கி மீண்டும் உள்ளேயே விழுந்துவிட்டேன். தண்ணீரில் நனைந்த என் புடவை கனமாகிவிட்டதால், அதைக் கழற்றி எறிந்துவிட்டேன். உதவி கேட்டு கத்தியபடியே அங்கேயே இருந்தேன். இரவு முழுவதும் தண்ணீரில் இருந்தபோது கிணற்றில் இருந்த தவளைகள் என் கால்களைக் கடித்தன," என்று அவர் ஊடகங்களிடம் விவரித்தார்.
ஜூலை இரண்டாம் தேதி விவசாயக் கிணற்றின் அருகே வந்த நுஸ்துல்லாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சில விவசாயிகள், கிணற்றிலிருந்து லட்சுமியை பத்திரமாக மீட்டனர். பின்னர் போலீசாரின் உதவியுடன் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம் நடந்த நாள் அன்று காலை 10 மணி முதல் மறுநாள் மீட்புப் பணி முடியும் வரை சுமார் 24 மணி நேரம் லட்சுமி தனியாக, கிணற்றுக்குள் ஆதரவற்ற நிலையில் தவித்துள்ளார்.
கிணற்றுக்குள் கட்டில் இறக்கப்பட்டது
நுஸ்துல்லாபூரைச் சேர்ந்த விவசாயி வங்கல ஸ்ரீனிவாஸ் ரெட்டி பிபிசியிடம் பேசுகையில், "அந்த விவசாயக் கிணறு எங்களது வயலுக்குப் பக்கத்திலேயே இருக்கிறது. அந்தப் பாழடைந்த கிணற்றை நான் குத்தகைக்கு எடுத்திருந்தேன். சமீபத்தில்தான் கிணற்றில் இருந்த மோட்டார் பழுதாகிவிட்டது. சரிசெய்வதற்காக அதனை அனுப்ப ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தபோது, கிணற்றுக்குள் ஒரு பெண் இருப்பதைக் கண்டேன். அவரிடம் விவரங்களைக் கேட்டபோது, அவரால் எதையும் சொல்ல முடியாத நிலையில் இருந்தார்" என்று கூறினார்.
"உதவிக்காக மேலும் சில கிராம மக்களை நான் கூப்பிட்டேன். வயலில் ஓய்வெடுப்பதற்காகப் பயன்படுத்தும் ஒரு கட்டிலின் நான்கு பக்கங்களிலும் கயிறுகளைக் கட்டி கிணற்றுக்குள் இறக்கினோம். அவர் கட்டிலின் மேல் வந்து உட்கார்ந்த பிறகு, 'இனி அவர் பாதுகாப்பாக இருக்கிறார்' என்று உறுதி செய்துகொண்டு உள்ளூர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தோம். அதற்குள் கிணற்றுக்குள் ஒரு நபரை இறக்கி, அவருக்கு உணவு மற்றும் உடுத்துவதற்கு உலர்வான உடைகளைக் கொடுத்தோம். போலீசார் வந்த பிறகு, கட்டிலை மேலே இழுத்து மீட்புப் பணியை நிறைவு செய்தோம்" என்று விவசாயி ஸ்ரீனிவாஸ் ரெட்டி தெரிவித்தார்.
"ஒரு உயிரைக் காப்பாற்றும் வாய்ப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார் என்று நான் உணர்ந்தேன்" என்றார் வங்கல ஸ்ரீனிவாஸ் ரெட்டி.
'ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு கடனில் சிக்கி...'
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தம்ம தினேஷ் ரெட்டி (21) என்பவரை உரிய ஆதாரங்களின் உதவியுடன் கைது செய்துள்ளதாக கரீம்நகர் காவல் ஆணையர் கௌஸ் ஆலம் தெரிவித்துள்ளார்.
"ஆன்லைன் சூதாட்டம், கலர் டிரேடிங், லாட்டரி விளையாட்டுகளுக்கு அடிமையான தினேஷ் ரெட்டி, ஏற்கனவே 4 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். கடன் செயலிகள் மூலம் ஏற்பட்ட கடன்களால் கடும் நெருக்கடிக்குள்ளான அவர், எளிதாகப் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார். கரீம்நகர் சந்தையில் உள்ள தியாகிகள் நினைவிடம் அருகே நாங்கள் அவரைக் கைது செய்தோம். அவர் மீது கடத்தல், கொள்ளை மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன," என்று அவர் கூறினார்.
விசாரணையின் போது, திருடப்பட்ட பொருட்களான ஐந்து கிராம் தங்க நகைகள் மற்றும் 20 கிராம் எடையுள்ள வெள்ளி மெட்டி ஆகியவற்றை, கரீம்நகர் டவர் சர்க்கிள் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைக்காரரிடம் 30,000 ரூபாய்க்கு விற்றதை போலீசார் கண்டறிந்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் இரண்டு மொபைல் போன்களையும் பறிமுதல் செய்தனர்.
"ஆன்லைன் சூதாட்டம் மற்றும் சட்டவிரோத பந்தயச் செயலிகள் தனிநபர்களை நிதி ரீதியாகவும் மன ரீதியாகவும் சீரழிக்கின்றன. இது இறுதியில் தீவிரமான குற்றங்களுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது. தொழிலாளர்கள் அறிமுகமில்லாதவர்களை நம்பி தனியாகச் செல்ல வேண்டாம். வேலைக்கு அழைத்துச் செல்லும் நபரின் விவரங்கள், வாகன எண் மற்றும் செல்லும் இடம் போன்ற தகவல்களைக் குடும்பத்தினரிடமோ அல்லது சக தொழிலாளர்களிடமோ கட்டாயம் தெரிவிக்க வேண்டும்" என்று காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு