You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்: திமுக கவுன்சிலர்கள் உட்பட 13 பேர் மீது வழக்கு, பாஜக போராட்டம், கைது
தூத்துக்குடியில் உள்ள பாஜக மாநிலத் துணைத் தலைவரும் முன்னாள் எம்.பியுமான சசிகலா புஷ்பா வீட்டின் மீது வியாழக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக சசிகலா புஷ்பா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், மூன்று திமுக கவுன்சிலர்கள் உள்பட 13 பேர் மீது போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திமுக மாநகராட்சி கவுன்சிலர் ராமகிருஷ்ணனை பிணையில் விடுவித்து தூத்துக்குடி நடுவர் நீதிமன்ற எண்- 3- பொறுப்பு நீதிபதி ஜலதி உத்தரவு பிறப்பித்தார்.
முன்னதாக, தாக்குதல் நடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யக்கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்தான், திமுகவைச் சேர்ந்த தூத்துக்குடி மாநகராட்சி பெண் கவுன்சிலர் அதிர்ஷ்டமணி, ஆண் கவுன்சிலர்கள் இசக்கி ராஜா, ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் ரவீந்திரன் மற்றும் ஒன்பது பெண்கள் உள்ளிட்ட 13 பேர் மீது சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, அமைச்சர் கீதா ஜீவன் பற்றி அவதூறாகப் பேசியதாக சசிகலா புஷ்பா மீது வட பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று வழக்குகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டம் - பாஜகவினர் கைது
"தூத்துக்குடியில், பாஜக துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் கண்ணாடியை உடைத்த திமுகவினரை கைது செய்யவேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்ற 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் நடந்தவுடன், சசிகலா புஷ்பா வீட்டில் குவிந்த பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். பின்னர் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் தூத்துக்குடி பிரதான சாலையான 3ம் மைல் சாலையில் மறியலில் ஈடுபட போவதாக கூறிய நிலையில், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின் அருகில் உள்ள தேவர் சிலை அருகே அமர்ந்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். பிறகு, இன்று கைது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 2,000க்கும் மேற்ப்பட்ட பாஜகவினரைத் திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக கூறிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து இன்று டிசம்பர் 23 காலை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி தலைமையில் கூடிய பாஜகவினர் 400க்கும் மேற்பட்டோர் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டக்காரர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார்.
என்ன நடந்தது?
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து சமீபத்தில் தமிழக அமைச்சர் கீதா ஜீவன் பேசிய கடுமையான பேச்சுக்கு எதிர்வினையாக, சசிகலா புஷ்பா நேற்று புதன்கிழமை வெளியிட்ட கருத்துகளைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இந்தக் கூற்றை பிபிசி தமிழால் தன்னிச்சையாக உறுதிப்படுத்த இயலவில்லை.
சமீபத்தில் பேசிய தமிழக அமைச்சர் கீதா ஜீவன், "அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்களும் ஏற வேண்டியிருக்கும்," என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் பேசிய சசிகலா புஷ்பா, அமைச்சரை மிரட்டும் வகையில் சில சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார்.
தூத்துக்குடி ஆண்டாள் தெருவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றபோது இந்த கருத்துக்களை அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
முன்னதாக, சசிகலா பங்கேற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன் பால கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது சசிகலா புஷ்பா, “ஒன்றரை ஆண்டுகளாக நடக்கும் திமுக ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை. சுய புராணம் பாட தகுதி உள்ளவர் அண்ணாமலை. ஆகவே, அவரை புகழ்கிறோம். அதற்கு முழு தகுதி பெற்றவர் அவர். எந்த கோர்ட் வாசலிலும் அவர் சொத்து குவிப்பு வழக்கில் நிற்கவில்லை. குற்றவாளிகளை கொண்டு போய் நின்றுதான் பழக்கம், குற்றவாளியாய் நின்று அவருக்கு பழக்கம் இல்லை," என்று பேசினார்.
24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் அவரைப் பற்றி பேச தகுதி மற்றவர்களுக்குத் தகுதி இல்லை. மரியாதையாகப் பேசச் சொல்லி கொடுப்பது பாஜக. ஒருமையில் பேசும் பழக்கம் பாஜகவில் இல்லை என்றும் அவர் சாடினார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின் அண்ணாமலைக்கு ஆங்காங்கே மக்கள் கூட்டம் கூடுகிறது. சனாதனம் பற்றி பேசுவோம். அது எங்கள் கொள்கை,” என்றும் சசிகலா புஷ்பா பேசினார்.
மேலும் அவர், “நீங்கள் செய்யும் ஊழலைப் பற்றி சொல்லுவோம், சமூக நலத்துறை அமைச்சராய் இருந்து நீங்கள் சமூகத்தைப் பேணவில்லை.. நாகரிக அரசியல் செய்ய வேண்டும். தெற்கத்தி பெண்களுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள். தூத்துக்குடியில் மாற்றம் வரப் போகிறது.
கீதாஜீவன் அமைச்சராக இருக்கும் போது இங்கு திமுக தோற்கப் போகிறது. பிஜேபி வெற்றி பெறப் போகிறது,” என்றும் சசிகலா புஷ்பா பேசினார்.
இந்த நிலையில் இன்று அவரது வீடு, கார் கண்ணாடி உடைக்கப்பட்டு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையில் சிப்காட் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து சசிகலா புஷ்பாவை தொடர்பு கொண்டு பிபிசி தமிழ் பேசியபோது, "கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க கன்னியாகுமரிக்கு சென்று விட்டு திரும்பும்போது என் வீடு தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர்தான் இதற்கு காரணம் என்று சந்தேகம் எழுப்பி போலீஸிடம் புகார் அளித்துள்ளோம்" என்று கூறினார்.
வீட்டில் சிசிடிவி கேமரா மூலம் யார் தாக்கினார்கள் என்று பார்க்கவில்லையா என்று கேட்டபோது, "இன்று காலையில் இருந்தே மின்சாரம் தடை பட்டிருந்ததால் சிசிடிவி காட்சிகள் இயங்கவில்லை," என்று சசிகலா புஷ்பா பதிலளித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்