இலங்கையில் 12 மணிநேரத்துக்குள் 3 சிறைகளில் மோதல் - அமைச்சர் கூறிய புலனாய்வு தகவல்

இலங்கை சிறைச்சாலை
படக்குறிப்பு, பல்லன்சேனை சிறைச்சாலை
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இலங்கையில் மூன்று சிறைச்சாலைகளில் 12 மணிநேரத்துக்குள் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மூன்று பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு நியூமெகஸின் சிறைச்சாலை, குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேனை சிறைச்சாலை ஆகியவற்றிலேயே இந்த அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

மூன்று சிறைச்சாலைகளிலும் ஏற்பட்டிருந்த பதற்ற நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இந்த சிறைச்சாலைகள் மாத்திரமன்றி, இலங்கை முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை திணைக்களம் மேலும் குறிப்பிடுகின்றது.

இதனிடையே, சிறைச்சாலைகளின் அவசர நிலைமைகளின் போது செயற்பட வேண்டிய விதம் குறித்து ஆராய்வதற்காக கூட்டுப் பொறிமுறை ஒன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு முதல் நடந்தது என்ன?

கொழும்பு - பொரள்ளை பகுதியில் அமைந்துள்ள நியூ மெகஸின் சிறைச்சாலையில் நேற்றிரவு 10.15 அளவில் பதற்ற நிலையொன்று உருவானது.

கைதிகள் இரு குழுக்களுக்கு இடையில் இந்த பதற்றம் ஏற்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிடுகின்றது.

சிறைச்சாலையின் சிறைக் கூடங்களை உடைத்துக்கொண்டு திடீரென வெளியேறிய கைதிகள், அமைதியின்மையை ஏற்படுத்தியிருந்தனர்.

இதன்போது நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக போலீஸார், போலீஸ் விசேட அதிரடிப்படை அழைக்கப்பட்டிருந்தனர்.

போதைப்பொருள் பிரச்னையே இந்த பதற்ற நிலைமைக்கான காரணமாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

சிறைச்சாலைக்கு வெளியிலிருந்து வீசப்படும் போதைப்பொருள் பொதிகள், கைதிகளுக்கு கிடைக்காமை இந்த பிரச்னை உருவாவதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது.

இந்த அமைதியின்மை காரணமாக 10 கைதிகள் காயமடைந்துள்ளதுடன், கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த கைதிகள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மெகஸின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலை
படக்குறிப்பு, அநுராதபுரம் சிறைச்சாலை

குருவிட்ட சிறைச்சாலை மோதல்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

குருவிட்ட சிறைச்சாலையிலும் இன்று அதிகாலை 6.30 அளவில் பதற்ற நிலைமையொன்று ஏற்பட்டது.

இதன்போது, கைதிகள் சிறைச்சாலையின் மருத்துவமனையை சேதப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக போலீஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, கண்ணீர் புகை பிரயோகம் நடாத்தப்பட்டதுடன், துப்பாக்கி பிரயோகங்களும் நடாத்தப்பட்டுள்ளன.

குருவிட்ட சிறைச்சாலையை பதற்ற நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக துப்பாக்கி சூடு நடாத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த கைதிகள் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பல்லன்சேனை சிறைச்சாலையில் பதற்றம்

பல்லன்சேனை சிறைச்சாலை
படக்குறிப்பு, பல்லன்சேனை சிறைச்சாலை

கொழும்பு நியூ மெகஸின் சிறைச்சாலை மற்றும் குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னணியில், அடுத்ததாக நீர்கொழும்பு பல்லன்சேனை சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை உணவு வழங்குவதற்கான சிறை அதிகாரிகள் சிறைக்கூடங்களை திறந்துள்ளனர்.

சிறை கூடங்களிலிருந்து வெளியேறிய கைதிகள், மீண்டும் சிறை கூடங்களுக்கு செல்ல மறுத்துள்ளதுடன், சிறைச்சாலையின் கூரைமீதேறி போராட்டம் நடாத்தியுள்ளனர்.

இந்த நிலையில், சிறைச்சாலையின் பாதுகாப்புக்காக போலீஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அழைத்து வரப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, சிறை கைதிகள், சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வருகைத் தந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

அத்துடன், பாதுகாப்பு அதிகாரிகள் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடாத்த முயற்சி செய்ததை அடுத்து, பாதுகாப்பு பிரிவினர் கைதிகளை நோக்கி கண்ணீர் புகை பிரயோகம் நடாத்தியுள்ளனர்.

பல்லன்சேனை சிறை மோதலில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், பல்லன்சேனை சிறைச்சாலையின் நிலைமையும் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சுமார் 12 மணிநேரத்துக்குள் மூன்று சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றம் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. மூன்று சிறைச்சாலைகளில் நடைபெற்ற மோதல்களில் மூவர் உயிரிழந்துள்ளனர், 51 பேர் காயமடைந்துள்ளனர்.

சிறைச்சாலை மோதல் ஆரம்பம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த மாதம் 5-ம் மற்றும் 6-ம் தேதிகளில் முதல் தடவையாக சிறைச்சாலை மோதல் ஆரம்பமானது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் அதிகாரிகள் உள்ளடங்களாக 28 பேர் உயிரிழந்திருந்தார்கள்.

சுமார் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பாதுகாப்பு பிரிவினரால் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டது.

இந்த நிலையில், மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்த மாதம் முதலாம் தேதி மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இந்த அமைதியின்மையில் 10 பேர் காயமடைந்து, ராகமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இந்த அமைதியின்மையும் பாரிய பிரயத்தனத்துக்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு

இலங்கையிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை சிறைச்சாலைகள் திணைக்களத்துடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சும் முன்னெடுத்து வருகின்றது.

இதன்படி, சிறைச்சாலைகளுக்கு போலீஸ் மற்றும் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை மோதல் தொடர்பான புலனாய்வு தகவல் என்ன?

பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால

பட மூலாதாரம், AnandaWijepala/FB

சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக ஏற்படும் மோதல்கள் மற்றும் அமைதியின்மைக்கான காரணம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கருத்து தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

போதைப்பொருள் மற்றும் நிழலுலக குழுக்களின் செயற்பாடுகள் இந்த மோதலுக்கான பின்னணியில் இருக்கின்றது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

அத்துடன், இந்த மோதல்கள் சூழ்ச்சி மற்றும் குழப்பம் ஏற்படுத்துவதற்கான ஒரு செயற்படாத இருக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

"நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆரம்பமான இந்த சிறைச்சாலை மோதல் தற்போது பல்லன்சேனை வரை படிப்படியாக வந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் எமக்கு கிடைத்த புலனாய்வு தகவல்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் இதுவொரு சூழ்ச்சி அல்லது குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், இந்த சம்பவங்களின் ஆரம்பகட்ட தகவல்களின்படி போதைப்பொருள் மற்றும் நிழலுலக குழுக்களின் செயற்பாடுகள் இருக்கின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன." என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிக்கின்றார்.

இதேவேளை, கைதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமது செயற்பாடுகள் இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

"சிறைச்சாலையில் ஏற்படும் இவ்வாறான மோதல்களில் எந்தவொரு கைதியினதும், அதிகாரியினதும் உயிர்கள் பறிக்கப்படாதிருப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸார், சிறைச்சாலை திணைக்களம் மற்றும் நீதி அமைச்சு எடுத்து வருகின்றது. அந்த பொறுப்புடனேயே இந்த பிரச்னையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இந்த நேரத்தில் இந்த தகவலை மாத்திரமே என்னால் வெளியிட முடியும். அனைத்து சிறைச்சாலைகளையும் நோக்குவோமானால், ஒரு சூழ்ச்சியின் கீழ் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. அதேபோன்று குழப்பத்தை ஏற்படுத்தும் நிலைமையொன்று தெரிகின்றது. இந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணைகளின் பின்னரே சரியான தகவல்களை வெளியிட முடியும். அனைவரையும் பாதுகாத்து, இந்த மோதலை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் முயற்சியாகும். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்" என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

காலி சிறைச்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
படக்குறிப்பு, காலி சிறைச்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

சிறை மோதல் தொடர்பில் ஜனாதிபதி எடுத்த தீர்மானம்

சிறைச்சாலைகளின் அவசர நிலைமைகளின் போது செயற்பட வேண்டிய விதம் குறித்து ஆராய்வதற்காக கூட்டுப் பொறிமுறை ஒன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் முப்படைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய கூட்டுப் பொறிமுறை ஒன்று எதிர்வரும் வாரத்தில் ஸ்தாபிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தரப்பினர் சிறை கைதிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்துவார்கள் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

இந்த கலந்துரையாடலில் சிறைச்சாலைகளுக்கு மேலதிகமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு