உலகில் ஒருவரைப் போல மற்றொருவர் இருக்க என்ன காரணம்?

பிரசுரிக்கப்பட்டது

ஆக்னஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, ​​ அவரை அணுகிய ஓர் ஆண் ஆக்னஸிற்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

அந்த நபர் நினைக்கும் நபர் நாம் இல்லை என்று உணர ஆக்னஸிற்கு அதிக நேரம் எடுக்கவில்லை.

அதை அவர் தெளிவுபடுத்தியதும், ஆக்னஸை போன்று இருக்கும் ஒருவரை தனக்கு தெரியுமென அந்த நபர் கூறினார். தன்னைப் போன்று இருக்கும் எஸ்டர் என்ற பெயர் கொண்ட அந்த நபரை முதலில் ஃபேஸ்புக் வழியாக ஆக்னஸ் சந்தித்தார். பின்னர், இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டனர்.

“தோற்றம் மட்டுமல்ல, எங்களுடைய பண்புகளும் ஒரே மாதிரியாக இருந்தன” என்கிறார் எஸ்டர்.

தன்னில் ஒரு பகுதியை மற்றொருவரிடம் பார்ப்பது எஸ்டருக்கு வினோதமாகவும் விசித்திரமாகவும் இருந்தது.

“ஆக்னஸும் நானும் குணத்திலும் ஆர்வத்திலும் ஒரே மாதிரியாக இருந்தது மேலும் சிறப்புமிக்கதாக இருந்தது. எங்களுக்கு இசை, உடைகள், டாட்டூ ஆகியவற்றில் ஒரே மாதிரியான ரசனை இருந்தது” என்றும் எஸ்டர் கூறுகிறார்.

எஸ்டருக்கு 32 வயது, ஆக்னஸிற்கு 28 வயது. அவர்கள் இருவரும் கனடாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஃபிராங்கோயிஸ் ப்ருனெலின் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். அவர் தான் பிபிசி முண்டோ சேவையிடம் இவர்கள் கதையைப் பகிர்ந்தவர்.

அவர்களைப் பார்த்தபோது, அவர்கள் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டு தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக ஃபிராங்கோயிஸ் ப்ருனெல் நினைவுகூர்ந்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள எந்தவித தொடர்பும் இல்லாத ஒத்த தோற்றம் கொண்டவர்களைக் காட்சிப்படுத்துவதற்காக பல ஆண்டுகளை அவர் செலவழித்துள்ளார்.

கீழேயுள்ள ஆக்னஸ் மற்றும் எஸ்டரின் இந்தப் படம்தான் 2015ஆம் ஆண்டு அவர் எடுத்தது.

‘ஐம் நாட் ஏ லுக் அலைக்’(I'm not a look-alike) என்ற ப்ரூனெல்லின் திட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானவர்களில் ஆக்னஸ் மற்றும் எஸ்டரும் அடங்கும்.

சாதாரண நபர்கள் பிரபலங்களைப் போல இருப்பது தொடர்பாக நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இணையத்தில் இருப்பதால் இது குறித்து நீங்கள் முன்னரே அறிந்திருக்கலாம்.

ஃபெராரி அணி நிறுவனர் இத்தாலியைச் சேர்ந்த என்சோ ஃபெராரி மற்றும் துருக்கி வம்சாவளி ஜெர்மன் கால்பந்து வீரர் மெசுட் ஓசில் ஆகியோரின் தோற்ற ஒப்பீடு சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமானது.

ப்ரூனெல் தனது திட்டத்தைத் தொடங்கியபோது, இது அறிவியல் ஆராய்ச்சிக்கு முன்னோடியாக மாறும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.

குடும்ப உறவுகள் அல்லாத நபர்களுக்கு இடையேயான உடல் ஒற்றுமையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருந்த பார்சிலோனாவில் உள்ள ஜோசப் கரேராஸ் லுகேமியா ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் குழு ப்ருனெல்லை தொடர்புகொண்டது.

அதன் இயக்குநரும், பார்சிலோனா பல்கலைக்கழக மருத்துவத்துறையின் மரபியல் பேராசிரியருமான மானெல் எஸ்டெல்லர், ஆய்வுக்கு தலைமை தாங்கினார். அவர் பிபிசி முண்டோ சேவையிடம் சில சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகளைப் பற்றி கூறினார்.

என்ன ஆய்வு?

2016ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், கடந்த ஆகஸ்ட் மாதம் Cell Reports என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.

'Look-alike humans identified by facial recognition algorithms show genetic similarities' என்ற தலைப்பில் வெளியான அந்தக் கட்டுரையில், ஒரே மாதிரியான முகத்தோற்றம் கொண்ட தொடர்பில்லாத நபர்களை அடையாளம் காணுவதை இந்த ஆராய்ச்சி நோக்கமாக கொண்டிருந்ததாக அதன் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஆராய்ச்சியாளர்கள் ப்ரூனெல்லை தொடர்புகொண்டபோது, அவருடைய திட்டத்தில் பங்கேற்ற 32 தன்னார்வ ஜோடிகள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

அவர்களின் புகைப்படங்கள் முகத்தை அடையாளம் காணும் மூன்று நவீன மென்பொருள் கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன.

"இவை ஒரு முகத்தை மற்றொன்றுடன் ஒப்பிடும்போது எவ்வளவு ஒற்றுமை உள்ளது என்பதைக் கண்டறியும் முறை" என்று எஸ்டெல்லர் கூறினார்.

உதாரணமாக, இந்த முறை இரட்டையர்களிடம் பயன்படுத்தப்பட்ட போது ஒற்றுமை விகிதம் 90 முதல் 100 சதவிகிதம் வரை இருந்தது.

தொடர்பில்லாத நபர்களிடம் முக ஒற்றுமையைக் கண்டறிய நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அதிக ஒற்றுமை விகிதம் கண்டறியப்பட்டது.

75 சதவிகித ஜோடிகள் ஒற்றுமை கொண்டிருப்பதாக குறைந்தபட்சம் இரண்டு மென்பொருள் கூறுவதாக அந்நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த முறை இரட்டையர்களை அடையாளம் காணக்கூடிய மனிதர்களின் திறனுக்கு மிக நெருக்கமானது என்று எஸ்டெல்லர் கூறுகிறார்.

ஆய்வில் கலந்துகொண்ட 16 ஜோடிகள் மிகவும் ஒத்த அடையாளம் கொண்டிருப்பதாக மூன்று மென்பொருள் சோதனையில் தெரியவந்தது.

ஆய்வு முடிவுகள்

பங்கேற்பாளர்களின் உயிரியல் மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு நாடுகளில் இருப்பதால் அதைப் பெறுவது சற்று கடினமாக இருந்ததாக எஸ்டெல்லர் கூறுகிறார்.

எனவே உமிழ்நீரில் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

“நாங்கள் உயிரியல் மாதிரிகள், ஜீனோம், எபிஜீனோம், மைக்ரோபயோம் ஆகியவற்றை ஆய்வு செய்தோம்” என்று எஸ்டெல்லர் கூறுகிறார்.

மரபியல் அவர்களை ஒன்றாக இணைத்தது. அதே சமயம் எபிஜெனெடிக்ஸ் மற்றும் மைக்ரோபயோம் அவர்களை தூரப்படுத்தியது.

“அவர்களுக்கு இடையே எந்தவித தொடர்பும் இல்லாத போதும் ஒரே மாதிரியான மரபணு மற்றும் டிஎன்ஏ வரிசைகள் இருந்தது இந்த ஆய்வு முடிவுகளில் கிடைத்த முக்கிய விஷயம். இந்த தன்னார்வலர்களின் குடும்ப வரலாறை சில நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்று ஆராய்ச்சியாளர்கள் பார்த்த போதிலும் அவர்களுக்கு இடையே பொதுவான உறவினர்கள் யாரும் இல்லை” என்றும் அவர் கூறுகிறார்.

நிபுணர்கள் குறிப்பிடும் அந்தக் குறிப்பிட்ட டிஎன்ஏ வரிசைகள் நம் முகத்தின் சிறப்பியல்பு அம்சங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவை.

இருவர் மிகவும் ஒத்திருப்பது லாட்டரி வாங்குவது போன்றது. நீங்கள் பரிசை வெல்வது மிகக் கடினம், ஆனால் திடீர் அதிர்ஷ்டம் வரலாம்.

"இரண்டு நபர்களுக்கும் இடையே தொடர்பில்லாத போதிலும், முடிவில் அவர்களுக்கு ஒரே வடிவத்தை அளிக்கக் கூடிய மரபணு மாறுபாடுகள் உள்ளன" என்கிறார் எஸ்டெல்லர்.

அதாவது, அவர்கள் டிஎன்ஏவின் சில பண்புகள் ஒத்துள்ளன.

“தங்களின் புருவங்களை அடர்த்தியாக்கும் பண்பு கொண்ட ஒரு மரபணு, உதடுகளை தடிமனாக்கும் பண்பு கொண்ட ஒரு மரபணு மற்றும் சில குறிப்பிட்ட பண்புகள் கொண்ட மரபணுக்கள் தொடர்பில்லாத இருவரிடம் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இவை அனைத்தும் ஒன்றாக இணையும் போது, அவர்களின் முகம் ஒரே மாதிரியான தோற்றத்தில் உள்ளது” என்கிறார் எஸ்டெல்லர்.

உடலமைப்பைத் தாண்டி பிற ஒற்றுமைகள்

ஸ்மித்சோனியன் இதழில் சாரா குடா சுட்டிக்காட்டியுள்ளபடி, மரபியல் துறையில் இந்த ஆய்வு புதிய சாதனையைப் படைத்துள்ளது. தங்கள் பழக்கவழக்கங்களைப் பற்றிய 60க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கொண்ட வினாத்தாள் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டு, அதற்கு பதிலளிக்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

"அவர்கள் அதில் ஒத்திருக்கிறார்களா என்பதைப் பார்க்க இந்த ஆய்வு செய்யப்பட்டதாகவும், சில சமயங்களில் அதில் ஒற்றுமைகள் வெளிப்பட்டதாகவும் கூறும் பேராசிரியர், எடை, வயது, உயரம் போன்ற பிற உடல் அம்சங்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டதாகக் கூறுகிறார்.

மிகவும் ஒரே மாதிரி இருந்த 16 ஜோடிகளில் செய்யப்பட்ட ஆய்வில், "பலர் ஒரே மாதிரியான எடை கொண்டிருந்தனர் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை பகுப்பாய்வும் ஒற்றுமைகள் இருப்பதைக் காட்டியது" என்றும் அவர் கூறுகிறார்.

"புகைபிடிக்கும் நடத்தை மற்றும் கல்வி நிலை ஆகியவற்றிலும் ஜோடிகளில் ஒற்றுமை இருந்ததாகவும், பகிரப்பட்ட மரபணு மாறுபாடு உடல் தோற்றத்துடன் தொடர்புடையது மட்டுமல்ல, பொதுவான பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தையிலும் தாக்கம் கொண்டிருக்கலாம் என்று அந்நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

பயோமெடிசினில் இதன் சாத்தியமான பயன்பாடு குறித்தும் எஸ்டெல்லர் ஆராய விரும்புகிறார்.

"முகத்தின் வடிவத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மரபணுக்கள் மற்றும் அவற்றின் மாறுபாடுகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். எனவே மூக்கு, வாய், நெற்றி, காதுகளின் மரபணுக்கள் நோயறிதலிலும் உதவலாம்” என்கிறார் எஸ்டெல்லர்.

"ஒருவர் முகத்தில் இருந்து அந்த நபரின் மரபணுவை நாம் ஓரளவு அறிய முடியும். இது மரபணு நோய்களின் ஆரம்பநிலை கண்டறிதலுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்றும் அவர் கூறுகிறார்.

சிறிய அளவிலான ஆய்வு

இந்த ஆய்வு சிறிய அளவில் நடத்தப்பட்டது என்பதை ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இது சரியானது என்று நம்பும் அவர்கள், பெரிய அளவில் ஆய்வு நடத்தப்பட்டாலும் தங்களின் கண்டுபிடிப்புகள் மாறாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

"பெரிய அளவில் நடத்தப்படும் ஆய்வு, அதிக மரபணு மாறுபாடுகளை வழங்கும். மேலும், நமது முகங்களை வரையறுக்க உயிரியல் தரவுகளின் பிற அடுக்குகளின் பங்களிப்பை தெளிவுபடுத்துவதற்கும் அது பயனுள்ளதாக இருக்கும்" என எஸ்டெல்லர் அறிக்கையில் கூறியுள்ளார்.

“நம்மைப் போல 100 சதவிகிதம் ஒத்த நபர் இருப்பது கடினம். ஆனால், 75 சதவிகிதம், 80 சதவிகிதம் வேறுபாடு கொண்ட நபர்கள் உலகில் பலர் உள்ளனர். எனவே நாம் சரியான நேரத்தில் இருக்கிறோம்” என்று பிபிசி முண்டோ சேவையிடம் எஸ்டெல்லர் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக ஒரே மாதிரியாக இருக்கும் அந்நியர்களை படம்பிடித்து அதில் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ள ப்ரூனெல், "ஒருமுறை உங்கள் மேற்பரப்பைக் கொஞ்சம் சுரண்டினால், அனைத்து இடங்களிலும் மக்கள் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நாம் எப்படி இருந்தாலும் நாம் ஓர் இனம்” என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: