இலங்கையில் தடுத்து வைக்கப்பட்ட ரஷ்ய விமானம் - வெளியேறும் பயணிகள்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அடுத்து, ரஷ்யா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

அயர்லாந்து நாட்டின் சேலேஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடட் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் காரணமாக, இலங்கைக்கு வருகைத் தந்த ரஷ்யாவிற்கு சொந்தமான பயணிகள் விமானமொன்றை நாட்டை விட்டு வெளியேற கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் கடந்த 2ம் தேதி தடையுத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.

இந்த தடையுத்தரவு எதிர்வரும் 16ம் தேதி வரை அமலில் இருக்கும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனினும், நீதிமன்றத்தின் தடையுத்தரவை ரத்து செய்ய கோரி, ரஷ்ய விமான நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகயை வரும் 8ம் தேதி நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் விசேட மனுவொன்றை சட்ட மாஅதிபர் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக துறைமுகங்கள், விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.

நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு குறித்து தமது தரப்பினர் நீதிமன்றத்தில் விடயங்களை தெளிவூட்டியதன் பின்னர், நீதிபதி மற்றுமொரு உத்தரவொன்றை பிறப்பித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்;.

''பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு இரண்டாவது பிரதிவாதிக்கு அமலாகாது" என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக அவர் கூறுகின்றார்.

இந்த உத்தரவின் பிரகாரம், குறித்த பிரச்னையிலிருந்து இலங்கை விடுப்பட்டுள்ளதாகவும், விமானம் வெளியேறுவதற்கு இலங்கையால் அனுமதி வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

குறித்த விமான சேவை நிறுவனம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், விமானத்தை செல்ல அனுமதிக்க முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை ஏரோபுளோட் விமானம் சேவை நிறுவனத்திற்கும், ரஷ்ய தூதுவருக்கும் அறிவித்துள்ளது.

எனினும், ரஷ்ய தரப்பினர் இதுவரை அவ்வாறான கோரிக்கையை விடுக்கவில்லை என நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.

இந்த விமானத்தை கொண்டு செல்ல முடியாது என ரஷ்ய தரப்பிற்கு எதிராகவே தடையுத்தரவு காணப்படுகின்றமையினால், இந்த கோரிக்கையை அவர்கள் விடுக்கும் பட்சத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவர்கள் எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும் என அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

இதன்பிரகாரம், இலங்கை தரப்பில் எந்தவித தவறும் இடம்பெறவில்லை என துறைமுகங்கள், விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.

191 பயணிகள் மற்றும் 13 விமான பணியாளர்களுடன் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் இந்த. விமானம் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

ரஷ்ய பயணிகள் இலங்கையை விட்டு வெளியேறினர்

ரஷ்யாவிற்கு சொந்தமான விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமை அடுத்து, ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தருவோருக்கு விநியோகிக்கப்படும் விமான பயணச் சீட்டுக்களை விநியோகிக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரஷ்யா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான விமான பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்திருந்த சுற்றுலா பயணிகளை ரஷ்யா மீள அழைத்துள்ளதாக ரஷ்யா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் நாட்டை விட்டு வெளியேறிய ரஷ்ய பயணிகள், ஊடகங்கள் இதனைக் கூறியிருந்தனர்.

''இலங்கைக்கு நாங்கள் 14 நாட்கள் சுற்றுலா பயணிகளாக வருகைத் தந்தோம். ஹிக்கடுவை பகுதியில் இருந்தோம். அவசரமாக ஏற்பட்ட நிலைமை காரணமாக, இலங்கைக்கான சுற்றுலா பயணத்தை கைவிட்டு, உடனடியாக நாட்டிற்கு வருகைத் தருமாறு ரஷ்ய அரசாங்கம் அறிவித்தது. 14 நாட்களுக்கு வருகைத் தந்த நாங்கள், 7 நாட்களில் சுற்றுலா பயணத்தை கைவிட்டு செல்கின்றோம். ஏரோபுளோட் விமானம் இறுதி விமானத்திற்காக நாங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத் தந்தோம்" என ரஷ்ய பிரஜையான எலேனா மெசேன்கோவா தெரிவித்துள்ளார்.

''இந்த சுற்றுலா பயணத்தின் போது டீசல் இருக்கவில்லை. மின்சார வெட்டு அமலில் இருந்தது. இந்த அனைத்து பிரச்னைகளுக்கும் மத்தியில் மிகவும் விருப்பத்துடனேயே நாங்கள் இலங்கைக்கு வருகைத் தந்தோம். எமது ரஷ்ய சுற்றுலா பயணிகளினால் இலங்கைக்கு டாலர் கிடைத்தது. இந்த தீர்ப்பினால் இலங்கைக்கு அந்த நிலைமை இல்லாது போயுள்ளது." என அவர் கூறுகின்றார்.

கடந்த இரு தினங்களில் மாத்திரம் இலங்கையிலிருந்து சுமார் 500ற்கும் அதிகமான ரஷ்யா பிரஜைகள் வெளியேறியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் இலங்கைக்கு 348,314 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்த நிலையில், அதில் 41,591 சுற்றுலா பயணிக்ள ரஷ்ய பிரஜைகள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.

என்ன பிரச்னை?

ரஷ்யாவின் ஏரோபுளோட் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றிற்கு, இலங்கையிலிருந்து வெளியேற கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் கடந்த 2ம் தேதி இடைகால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

அயர்லாந்து நாட்டின் சேலேஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடட் என்ற நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அடுத்தே, ரஷ்ய விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்திற்கு இலங்கையிலிருந்து வெளியேற கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க தடையுத்தரவை பிறப்பித்திருந்தார்.

எதிர்வரும் 16ம் தேதி வரை அமலில் இருக்கும் வகையில் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதியான ரஷ்ய விமான சேவை நிறுவனத்திற்கும், தமக்கும் இடையில் வழக்கொன்று இருப்பதாக முறைப்பாட்டாளர் தரப்பு நிறுவனம் தெரிவிக்கின்றது.

அதனால், பிரதிவாதிக்கு சொந்தமான விமானத்தை இலங்கையிலிருந்து வெளியேற தடை விதிக்குமாறு கோரி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணைகளை நடத்திய, கொழும்பு வணிக மேல் நீதிமன்றம், இந்த இடைகால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: