தமிழ்நாடு அரசு சார்பில் இலங்கைக்கு கூடுதல் உதவி அளிக்க மு.க. ஸ்டாலின் உறுதி

இலங்கைக்கு கூடுதல் உதவி அளிப்பதாக ஸ்டாலின் உறுதி

பட மூலாதாரம், Sri Lanka in India/Twitter

பிரசுரிக்கப்பட்டது

இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (04/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இலங்கைக்கு கூடுதல் உதவிப் பொருள்களை அனுப்ப தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, சென்னை தலைமை செயலகத்தில் சனிக்கிழமை தன்னைச் சந்தித்த இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகோடாவிடம் இந்த உறுதியை அவர் அளித்தார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு மத்திய அரசு மூலமாக தமிழ்நாடு அரசு ஏற்கெனவே உதவி அளித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இலங்கை தூதர் மிலிந்த மொரகோடா சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பு குறித்து ட்விட்டர் பக்கத்தில் ,மிலிந்தா மொரகோடா வெளியிட்ட பதிவில், 'முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்துப் பேசினேன். இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ள வகையிலும் தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் இருந்தது.

சந்திப்பின்போது, இலங்கைக்கு கூடுதல் உதவிகளை அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைக்குத் தேவைப்படும் கூடுதலான அத்தியாவசிய பொருள்கள் அனுப்பப்படும் என்று உறுதியளித்தார்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வாழ் மக்களுக்கு உதவும் வகையில் சென்னை துறைமுகத்திலிருந்து அந்த நாட்டுக்கு 9 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் ஆவின் பால் பவுடர், 24 மெட்ரிக் டன் அத்தியாவசிய மருந்து பொருள்களை தமிழக அரசு கடந்த மாதம் 18-ஆம் தேதி கப்பல் மூலம் அனுப்பி வைத்தது. இந்தக் கப்பலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட இந்தப் பொருள்களின் மொத்த மதிப்பு 45 கோடி.

இதைத் தொடர்ந்து மேலும் நிவாரணப் பொருள்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான உறுதியை தலைமைச் செயலகத்தில் தன்னைச் சந்தித்த இலங்கைத் தூதரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.

"இலங்கையில் சர்வதேச பிரச்னையாக ரஷ்ய விமான பிரச்னை மாற்றப்பட்டுள்ளது" - சஜித் பிரேமதாச

ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானம் இலங்கையில் இருந்து வெளியேறத் தடை விதித்து, கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்னை சர்வதேச பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக தமிழ் மிரர் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

சஜித் பிரேமதாச

பட மூலாதாரம், Getty Images

அதுகுறித்த செய்தியில், "நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்னை சர்வதேச பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதோடு, ராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்னை தற்போது பாரிய அளவில் உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை இல்லாமலாக்கிக் கொள்ளவும் நாட்டின் தேயிலையை விற்பனை செய்துகொள்ள முடியாத நிலைக்குத் தள்ளவுமே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், இந்த அபாய நிலையைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் ஜனாதிபதி அல்லது வெளியுறவு அமைச்சர் ஆகியோர் காணப்படுவது ஏன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் நடவடிக்கைகளைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் பேரணி

ஆளுநர் ஆர். என். ரவி
படக்குறிப்பு, ஆளுநர் ஆர். என். ரவி

தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கைகளைக் கண்டித்து, சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி எஸ்டிபிஐ கட்சியினர் பேரணி நடத்தியதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில், கிண்டி ரேஸ்கோர்ஸ் அருகிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியில், மதிமுக துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைப் பொதுச் செயலர் மு.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயல வன்னி அரசு மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் கலந்துகொண்டனர். அதில் பங்கேற்றவர்கள், ஆளுநரின் நடவடிக்கைகளைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

பின்னர், ஊர்வலமாகச் சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முன்னதாக, பேரணியில் பங்கேற்றவர்கள் மத்தியில் எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், "பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், உச்சநீதிமன்றமே தமிழக ஆளுநர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

ஆளுநரின் நடவடிக்கைகள் அரசியல் சாசனப்படியும் வரம்பு மீறாமலும் கூட்டாட்சித் தத்துவத்தை மீறாத வகையிலும் மாநிலத்தின் சுயாட்சிக்குக் கேடு விளைவிக்காத வகையிலும் அமைய வேண்டும்.

ஆனால், இவற்றை மீறும் வகையிலேயே தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளன. மக்களுக்கான மசோதாக்களை கண்டுகொள்ளாமல், அவற்றைக் கிடப்பில் போடுகிறார். இதேபோல, மாநில அரசை மதிக்காத போக்கு, புதிய கல்விக் கொள்கையின் பரப்புரை உள்ளிட்ட நடவடிக்கைகள் ஆளுநரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

மக்களால் தேந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளை முடக்கும் ஆளுநரின் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம்," என்று பேசினார்.

காணொளிக் குறிப்பு, "வேலையாட்களுக்கு நானே உணவளிக்கிறேன்" - இலங்கை நெருக்கடியில் பெண் ஆடை உற்பத்தியாளர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: