You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை வன்முறை: ஜனாதிபதி கோட்டாபய கட்சி எம்.பிக்கள் இருவர் கைது
இலங்கையின் காலி முகத்திடலில் நடத்தப்பட்டு வரும் தன்னெழுச்சி போராட்டத்தின் மீது கடந்த 9ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி முகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை தொடங்கியுள்ளது.
இதன்படி, கடந்த 9ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவூட்டுமாறு சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில், குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 22 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர், போலீஸ் மாஅதிபருக்கு அறிவித்திருந்தார்.
கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் தேசிய கூட்டணி எம்.பி-யின் பிரேரணை தோல்வி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதற்கு நிலையியற் கட்டளையை இடைநிறுத்தி வைப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
அரசியலமைப்பல் ஜனாதிபதியின் தத்துவங்களையும் பணிகளையும், கடமைகளையும் முறைப்படி நிறைவேற்ற முடியாமல் போனதன் மீதான நாடாளுமன்றத்தின் அதிருப்தியைத் தெரிவிக்கும் பிரேரணையை இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்காக நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி வைப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிரேரணையொன்றை முன்வைத்தார்.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட பிரேரணையை எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியல்ல வழிமொழிந்தார்.
இதையடுத்து, சபையில் கடும் அமளிதுமளி ஏற்பட்டது.
குறித்த பிரேரணைக்கு சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன எதிர்ப்பை வெளியிட்டதை அடுத்து, சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.
ஜனாதிபதியின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று விவாதத்துக்கு எடுக்க முடியாது என தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த 11ஆம் தேதி நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் படி, ஐந்து நாட்களின் பின்னரே நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.
சபை முதல்வர் தினேஷ் குணவர்தனவின் கடும் எதிர்ப்பை அடுத்து, எம்;.ஏ.சுமந்திரனின் பிரேரணையை நிறைவேற்ற வாக்கடுப்பொன்றை நடத்துமாறு அமைச்சர் தினேஷ் குணவர்தன சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தினேஷ் குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய, இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பை நடத்த சபாநாயகர் தீர்மானித்திருந்தார்.
இவ்வாறு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் எம்.ஏ.சுமந்திரனால் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 68 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இந்த பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்