கி.ரா நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் இலங்கை படைப்பாளிகள்

    • எழுதியவர், யூ.எல். மப்றூக்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

சாகித்ய அகாதெமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் உடல், தமிழ்நாட்டில் உள்ள அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல் கிராமத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

புதுச்சேரி லாசுப்பேட்டை அரசுக் குடியிருப்பில் அவரது இல்லத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவில் கி.ராஜநாராயணன் காலமானார்.

கி.ரா என அறியப்படும் இந்தியாவின் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு குறித்து, இலங்கையின் எழுத்தாளர்கள் கலைஞர்கள் பலரும் தமது கவலையினையும் அஞ்சலிகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கி.ரா.வுடன் நேரடியாக தொடர்புகளைக் கொண்டிருந்த படைப்பாளிகள் மற்றும் அவரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர்கள் சிலரிடம் பிபிசி தமிழ் பேசியது.

இதன்போது இலங்கையின் மூத்த எழுத்தாளரும் கல்வியாளருமான பேராசிரியர் எம்.ஏ. நுஃமான், கி.ராவைச் சந்தித்த அனுபவம் மற்றும் அவரின் எழுத்துக்கள் குறித்த தனது பார்வைகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவின் அண்ணாமலை பல்கலைக்கழத்தில் தான் கலாநிதிப் பட்டப்படிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, 1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் கி. ராஜநாராயணனை அவரின் வீட்டுக்குச் சென்று முதன் முதலாகச் சந்தித்த நினைவினை நுஃமான் பகிர்ந்து கொண்டார்.

"இலங்கையில் இருக்கும் போதே அவரின் எழுத்துக்களை வாசித்திருந்தேன். இந்தியப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது 85இல் அவரை முதன்முதலில் சந்தித்தேன். பின்னர் பல தடவை அவரைச் சந்திக்கக் கிடைத்திருக்கிறது".

"கி.ராஜநாராயணன் ஒரு சிறந்த எழுத்தாளர். அவருடைய கரிசல் பிரதேச மக்களின் வாழ்க்கையை, தனது எழுத்துக்களில் அவர் கொண்டுவந்தார். அதனால் அவர் முக்கியமான படைப்பாளியாக அடையாளம் காணப்பட்டார்.

"தங்களுடைய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்களை விடவும், தமது மக்களின் பண்பாடு தொடர்பில் அவர் முக்கிய கவனம் செலுத்தினார். தமது பகுதி மக்களின் பேச்சு வழக்குத் தமிழ் சொற்களைக் கொண்ட அகராதியொன்றை அவர் உருவாக்கியிருப்பது மிக முக்கியமான பங்களிப்பாகும். ஒரு ஸ்தாபனம் செய்ய வேண்டிய விடயத்தை அவர் செய்து முடித்திருக்கின்றார்," என்கிறார் பேராசிரியர் நுஃமான்.

கி.ரா.வுக்கான மணிவிழாவையொட்டி 'ராஜநாராயணியம்' எனும் பெயரில் வெளியிடப்பட்ட நூலில், பேராசிரியர் நுஃமான் எழுதிய விமர்சனக் கட்டுரையொன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கவிஞர் மீரா தொகுத்து 'அன்னம்' வெளியீடாக வந்திருந்த அந்த நூலில், கி.ராவின் படைப்புக்கள் குறித்து முக்கிய எழுத்தாளர்கள் பலர் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.

அந்த நூலில் 'ராஜநாராயணனின் படைப்புலகம்' எனும் தலைப்பில் பேராசிரியர் நுஃமான் கட்டுரையொன்றினை எழுதியிருந்தார். அது குறித்தும் அவர் நினைவுகூர்ந்தார்.

"அந்தக் கட்டுரையின் மூலப் பிரதியில் நான் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் தொடர்பில் சிறியதொரு கருத்து வேறுபாடு அவருக்கு இருந்தது. மற்றும்படி அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட விடயங்களை அவர் ஏற்றுக் கொண்டார்".

"அது நீண்டதொரு கட்டுரை, அந்தக் கட்டுரையை முடிக்கும் போது; 'இவருடைய படைப்புலகத்தை ஆணிவேரற்ற அழகான விருட்சம் எனக் கூறலாமா? அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது' எனக் குறிப்பிட்டிருந்தேன். அது பற்றி என்னிடம் பேசிய கி.ரா; அந்த விடயத்தைத் தவிர அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருந்த ஏனைய மதிப்பீடுகளை ஏற்றுக் கொள்வதாக கூறியிருந்தார்" என நுஃமான் தனது நினைவுகளை மீட்டினார்.

"சமூக அரசியல் முரண்பாடுகளுக்குள் ராஜநாராயணனில் எழுத்துக்கள் ஆழமாகச் செல்லவில்லை என்பதைத்தான் 'ஆணிவேரற்ற அழகான விருட்சம்' என்று நான் கூற வந்தேன். ஆனால், ஒருவரின் எழுத்துக்கள் சமூக, அரசியல் விடயங்களை ஆழமாகப் பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதனால், அந்தக் கட்டுரையை 'ராஜநாராயணியம்' நூலில் சேர்க்கும் போது, அதன் முடிவுப் பகுதியில் குறிப்பிட்டிருந்த அந்த விடயத்தை நீக்கி விட்டேன்" என்றார் பேராசிரியர் நுஃமான்.

தன் மண்ணை சாறுபிழிந்து, கடதாசியில் குடிக்கத் தந்தவன்: கவிஞர் சோலைக்கிளி புகழாரம்

'என்னை மிகவும் கவர்ந்த படைப்பாளி. தன் மண்ணை சாறு பிழிந்து கடதாசியில் நமக்குக் குடிக்கத்தந்தவன். பாசாங்கற்ற கரிசல் பருத்தி. உன்னையே இன்னும் உடுத்திருக்கிறேன். எனது கண்ணீர்த் துளிகள்போல் இந்த வரிகள் முகநூலிலும் வழியட்டும்' என்று, ராஜநாராயணனின் மறைவு குறித்து, கவிஞர் சோலைக்கிளி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பு ஒன்றை எழுதியிருக்கிறார்.

எழுத்தாளர்களுக்கு இலங்கையில் வழங்கப்படும் உயர் விருதான சாகித்திய அக்கடமி விருதை தனது கவிதை நூல்களுக்காக பல தடவை பெற்றுக் கொண்ட கவிஞர் சோலைக்கிளி, ஜப்பான் அரசின் கலாசார வுங்கா விருதினையும் பெற்றவர்.

சோலைக்கிளியின் எழுத்துக்களில் வரும் சொற்கள், அவரின் மண் சார்ந்த மொழி வழக்குகளாக இருப்பது சிறப்பம்சமாகும்.

அவர் கி.ராவின் எழுத்துக்கள் பற்றி பேசினார்;

"நான் உயர்தரம் கற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில்தான் கி.ரா.வின் எழுத்துக்கள் எனக்கு அறிமுகமானது. அவருடைய நூல்களினுடைய அட்டைகளில் படங்கள் போடுவதற்கு அவர் அனுமதிப்பதில்லை. 'எனது கதைகளின் பாத்திரங்களுக்கு, படம் வரையக்கூடிய ஓவியன் தமிழ்நாட்டில் இல்லை' என்று அவர் தமாஷாகச் சொல்வதுண்டு".

"தனது மண்ணை எழுத்துக்களில் அவர் கொண்டு வந்தமை போல், வேறு எவரும் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை. எழுத்தும் அவருமாக வாழ்ந்த - ஓர் எழுத்துக் கலைஞன் அவர்.

நான் அவரை நேரில் சந்தித்ததில்லை. ஆனால் அவரும் நானும் 'மண்' படைப்பாளிகள் என்கிற மானசீக உறவு எங்களுக்குள் இக்கிறது. தனது பகுதி மக்கள் பேசும் சொற்களை அப்படியே எழுத்தில் கொண்டு வந்தவர் கி.ரா. சுகமா? என்பதை சொகமா? என்றுதான் எழுதுவார். அவரின் தாய் மொழி தெலுங்கு என்பது குறிப்பிடத்தக்க விடயம்" என்றார் கவிஞர் சோலைக்கிளி.

சிறுகதை, நாவல்களை எழுதுவோர் கட்டாயமாக கி.ராவின் எழுத்துக்களைப் படித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

"எந்த சித்தாந்தங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல், அமைதியாக இருந்து இலக்கியம் செய்த மனிதர் அவர்" என்று கி.ராஜநாராயணன் பற்றிய தனது கருத்துக்களை சோலைக்கிளி பகிர்ந்து கொண்டார்.

அவருடையதும், எங்களினதும் மொழிவழக்கு ஒன்றாக இருக்கிறது: எஸ்.எல்.எம். ஹனீபா

ராஜநாராயணனைச் சந்திப்பதற்காகவே 1990களில் இந்தியாவுக்குச் சென்று, அவரைச் சந்தித்ததாகக் கூறுகிறார், 'மக்கத்துச் சால்வை' நூலுக்காக சாதித்திய அகடமி விருது பெற்ற மூத்த சிறுகதை எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா. கி.ராவை சந்திப்பதற்கு முன்னராகவே அவருடன் தனக்கு கடிதத் தொடர்புகள் இருந்தாகவும் கூறுகிறார்.

"அவரின் கதைகளில் வரும் சொல் வழக்கும், எங்கள் பகுதி சொல் வழக்கும் ஒரே வகையானவையாக இருப்பதைக் காணலாம். வாங்க என்பதை 'வாங்கெ' என்றும், போங்க என்பதை 'போங்கெ' எனவும், இருங்க என்பதை 'இருங்கெ' என்றும்தான் எழுதுவார். எனது எழுத்துக்களிலும் இவ்வாறான மொழிநடையைக் காணலாம்".

"அவரின் படைப்புகளில் வரும் சொல் வழக்கும், எமது கிழக்கு மாகாண மக்களின் சொல் வழக்கும் ஒன்றுபோல் இருப்பதை, கி.ராவின் சிறுகதை, நாவல்களைப் படிக்கும் போது விளங்கிக் கொள்ளலாம்" என்றார்.

"அவரைச் சந்தித்தபோது எனது சிறுகதைகள் சிலவற்றை வாசித்துக் காட்டினேன். கேட்டு விட்டு; 'நீ நம்ம புள்ள' என்றார். அவரின் மொழி வழக்கும், எனது கதைகளில் வரும் மொழி வழக்கும் ஒன்றாக இருந்ததால்தான் அவர் அவ்வாறு கூறினார்" என மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :