கொரோனா வைரஸ்: சமய சடங்குகளை நிறைவேற்றும் தருணம் இது கிடையாது - மஹிந்த ராஜபக்ஷ

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.

இதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 189ஆக அதிகரித்துள்ளது.

44 பேர் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அத்துடன், 138 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷ

பட மூலாதாரம், MAHINDA RAJAPAKSHA/TWITTER

படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ஷ

இதனிடையே, சமய சடங்குகள் மற்றும் இனங்களுக்கான விசேட தேவைகளையும், சடங்குகளையும் நிறைவேற்றும் தருணம் இது கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். நாட்டு மக்களுக்கு நேற்றிரவு விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பௌத்த மக்களுக்கு விசேடமான பௌர்ணமி தினத்தில் கூட பௌத்த விஹாரைகளுக்கு வர வேண்டாம் என பௌத்த சமயத் தலைவர்கள் கூறியுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், அனைவரும் சிந்தித்து செயற்படக்கூடிய தருணம் இதுவென மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். பொதுவாக மனிதர்கள் என்ற ரீதியில் சிந்தித்தால் மாத்திரமே எங்களுக்கு இந்த மனித புதைகுழியிலிருந்து மறுபக்கத்திற்கு பாய்ந்து செல்ல முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் பாரதூரமான கஷ்டங்களை முகங்கொடுத்த நாம், பயங்கரவாதம் இருந்த காலக் கட்டத்தில் 20, 30 வருடங்கள் முகாம்களில் வாழ்ந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். யுத்தக் காலத்தில் இரவில் இலைகள் மற்றும் குழைகளை விரித்து உறங்கியிருந்ததையும் அவர் நினைவூட்டினார். இவ்வாறான அர்ப்பணிப்புக்களை செய்தவர்களுக்கு இந்த காலக் கட்டத்தில் வீட்டில் இருப்பது பெரிய விடயமாக இருக்காது என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

உலகம் முழுவதும் சுற்றுலா தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச விமான சேவைகள் முதல் கடற்கரை சிப்பிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ்

இந்த நிலையில், உலக நாடுகளை போன்று இலங்கையிலும் சுற்றுலா, ஹோட்டல், உணவு விடுதிகள், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளும் சீர்குலைந்துள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.

இந்த வைரஸ் தாக்கம் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி தடைப்பட்டுள்ளதாகவும், சர்வதேசத்தில் தேயிலை ஏலம் தடைப்பட்டுள்ளதாகவும், தேயிலை, தேங்காய், இறப்பர் ஆகிய உற்பத்திகளை வெளிநாட்டிற்கு அனுப்ப முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தாலி, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கை பணியாளர்களினால் அனுப்பி வைக்கப்படும் பணமானது, இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்குவதாக கூறிய அவர், அந்த வருமான வழிகள் அனைத்தும் தற்போது தடைப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

இந்த நிலையில், இன மத வேறுபாடுகள் இன்றி அனைத்து அரசியல் கட்சிகளில் தலைவர்களும் அரசாங்கத்துடன் கைக்கோர்த்து செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார். இது இனம், மதம் என்ற ரீதியில் பிரிந்து செயற்படக்கூடிய காலம் கிடையாது என குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஷ, இன்றைய தினம் எம் அனைவருக்கும் ஒரே எதிரியாக கொரோனா மாத்திரமே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறான சிரம நிலைமைகள் காணப்பட்டாலும், அரசாங்கம் என்ற ரீதியில் தாம் மக்களுக்கான சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்தார். இலங்கையில் தனிமைப்படுத்தலை புறக்கணிக்கும் ஆயிரக்கணக்கானவர்களை அடையாளம் கண்டுக்கொள்வதற்காக அரச புலனாய்வு பிரிவினரை ஈடுபடுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதையும் பிரதமர் நினைவூட்டினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: