“ஸ்டெர்லைட்டுக்கு எதிராக செயல்பட்டதால் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டேன்” - முகிலன்

முகிலன்

பட மூலாதாரம், FACEBOOK/MUGILAN SWAMIYATHAL

பிரசுரிக்கப்பட்டது

நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:ஸ்டெர்லைட்டுக்கு எதிராக செயல்பட்டதால் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டேன்”

கடந்த பிப்ரவரி 15ம் தேதி ரயிலில் இருந்து சிலர் தன்னை கடத்தி சென்று ஸ்டிடர்லைட்டுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்த வேண்டுமென மிரட்டியதாக சமூக செயற்பாட்டாளர் முகிலன் திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தெரிவித்ததாக நியூ இந்திய எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தனக்கு எதிரான பாலியல் தாக்குதல் வழக்கில் சமர்ப்பித்த மனுவில், தன்னை கடத்திய பிறகு, தனியறையில் அடைத்து வைத்திருந்ததாக கூறியுள்ள அவர், அடிக்கடி தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான செயல்பாடுகளை விட்டுவிட வேண்டுமெனவும், அவ்வாறு செய்தால் தான் விரும்பிய எதையும் தனக்கு கொடுக்க தயாராக இருப்பதாகவும் தம்மை கடத்தியோர் கூறியதாக முகிலன் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், பொது வெளியில் தன்னை அவமானப்படுத்தப் போவதாகவும், சுய நினைவின்றி தன்னை வைத்திருக்க போதை ஊசிகளை போட்டதாகவும் அவர் அந்த மனுவில் கூறியுள்ளதாக நியூ இந்திய எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Presentational grey line
Presentational grey line

தினமணி - ஜேஎன்யு மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்: 6 மணிநேரம் சிக்கிய மத்திய அமைச்சர்

கோப்புப்படம்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, கோப்புப்படம்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) பட்டமளிப்பு விழா நடைபெற்ற அரங்கை முற்றுகையிட்டு ஏராளமான மாணவர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அந்த அரங்கை விட்டு வெளியேற முடியாமல், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 6 மணி நேரம் சிக்கிக் கொண்டார் என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜேஎன்யு-வில் திங்கள்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழா விழாவில் தலைமை விருந்தினராகக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும், சிறப்பு விருந்தினராக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலும் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஏஐசிடிஏ அரங்கில் இந்த விழா நடைபெற்றது.

விடுதிக் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து, பட்டமளிப்பு விழா நடைறவிருந்த ஏஐசிடிஏ அரங்கம் நோக்கி திங்கள்கிழமை பேரணி நடத்தப்படும் என்று ஜேஎன்யு மாணவர் சங்கம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது.

அதன்படி, பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை கூடிய மாணவர்கள், ஏஐசிடிஏ அரங்கம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து மாணவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றனர்.

மேலும், தண்ணீரைப் பீச்சியடித்து அவர்களைக் கலைக்க முயன்றனர். ஆனால், காவல்துறையினரின் தடையை மீறி மாணவர்கள் பேரணியை தொடர்ந்தனர் என்கிறது தினமணி செய்தி.

டெல்லி காவல்துறைக்கு எதிராகவும், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியவாறு ஏஐசிடிஏ அரங்கம் நோக்கி மாணவர்கள் முன்னேறினர்.

பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அரங்கை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் வெளியேறிச் செல்லும் வகையில் மாணவர்கள் வழிவிட வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக் கொள்ளாத மாணவர்கள், தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கப் பிரதிநிதிகளை ரமேஷ் பொக்கிரியால் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் என்கிறது இந்தச் செய்தி.

Presentational grey line

தினமலர் - இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி வீழ்ச்சி

தொழில்துறை

பட மூலாதாரம், K. Mathan Prasath

தொழில் துறை உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1.1 சதவீதம் சரிவை இந்தியா சந்தித்தது. செப்டம்பரில் உற்பத்தி சரிவு 4.3 சதவீதமாக அதிகரித்தது. சென்ற ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது நாட்டிலுள்ள 23 தொழில் பிரிவுகளில் 17 பிரிவுகள் பின்னடைவை சந்தித்துள்ளன என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, வாகன உற்பத்தி : 24.8 சதவீதம் சரிவு, பர்னிச்சர் உற்பத்தி : 23.6 சதவீதம் சரிவு, இயந்திர பாகங்கள் உற்பத்தி: 22 சதவீதம் சரிவு உற்பத்தி துறையில் சென்ற வருடம் 4.8 சதவீதம் வளர்ச்சி இருந்தது.

எரிசக்தி உற்பத்தித் துறையில் கடந்த ஆண்டு செப்டம்பரில்: 8.2 சதவீதம் வளர்ச்சி இருந்தது. இந்தாண்டு செப்டம்பரில் : 2.6 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. சுரங்கத் தொழிலும் 8.5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக மத்திய புள்ளியல் துறை விளக்கம் அளித்துள்ளது என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :