ஐபிஎல் 2022: GT Vs RR - கோப்பையை வெல்லப்போவது யார்?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியும், சஞ்சு சாம்சன் தலையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் களமிறங்குகின்றன.

ஐபிஎல் 15ஆவது சீசன் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில், யாரும் எதிர்பார்க்காத குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளன.

முதன்முறையாக களமிறங்கி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த குஜராத்

இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என்ற இரு புதிய அணிகள் சேர்க்கப்பட்டன. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கே.எல்.ராகுலும் கேப்டனாக உள்ளனர்.

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியபோது ஷேன் வார்ன் தலைமையில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணி, அதன் பிறகு இறுதிப் போட்டிக்கு செல்லவே இல்லை.

2009, 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான் அணிக்கு ஷேன் வார்ன் கேப்டனாக இருந்தார். இருப்பினும் அந்த அணி முறையே 6, 7 மற்றும் 6ஆவது இடத்தை மட்டுமே பிடித்திருந்தது.

அதன்பிறகு ராகுல் டிராவிட் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தார். பின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகிய பிறகு ஐபிஎல் போட்டிகளிலுருந்தும் விலகினார்.

பின்பு 2014ஆம் ஆண்டு ஷேன் வாட்சன் கேப்டனாக பொறுப்பேற்றார். அந்த ஆண்டு ஐந்தாவது இடத்தை மட்டுமே ராஜஸ்தான் அணி பிடித்தது.

2015ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அதன்பின்பு அணி இரண்டு வருட தடையை சந்தித்தது.

2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி மிக மோசமாக விளையாடி 8ஆவது இடத்தை பிடித்தது.

எனவே கேப்டன்ஸி குறித்து முக்கிய முடிவுகளை எடுத்து 26 வயதே ஆன சஞ்சு சாம்சன் அணியின் கேப்டன் ஆக பொறுப்பேற்றார்.

இறுதிப் போட்டியில் தமிழக வீரர்கள்

குஜராத் அணியில் தமிழக வீரர்கள் சாய் சுதர்சன், விஜய் சங்கர் மற்றும் சாய் கிஷோர் ஆகிய மூன்று பேர் உள்ளனர். இதில் ப்ளேயிங் 11-ல் தமிழக வீரர் சாய் கிஷோர் இடம்பிடித்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.

அஸ்வினின் பந்து வீச்சின் பலம் குறித்து தனியாக சொல்ல வேண்டியது இல்லை. சமீபத்தில் நியூசிலாந்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணிக்கு பலம் சேர்த்திருந்தார் அஸ்வின்.

சமீபமாக கபில் தேவை பின்னுக்கு தள்ளி அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். ராஜஸ்தான் அணிக்கு பெரும் பலமாக விளங்கி வருகிறார்.

21 வயதான சுதர்சன் இதுவரை ராஜஸ்தான் அணி சார்பாக ஐந்து போட்டிகளில் விளையாடி 145 ரன்களை எடுத்துள்ளார். இவருக்கு இதுதான் முதல் ஐபிஎல் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாய் கிஷோருக்கும் இது முதல் ஐபிஎல். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், இந்த ஐபிஎல்லில் மூன்று கோடி ரூபாய்க்கு குஜராத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். பல்வேறு அணிகள் அவரை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டினாலும் கடைசியில் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வந்து சேர்ந்தார். சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த சாய் கிஷோர் அஸ்வினை தனது ரோல் மாடலாக கருதுகிறார்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான விஜய் சங்கர், 2022 ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியால் 1.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்திய அணியில் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட விஜய் சங்கர் இதற்கு முன்பு சன் ரைசர்ஸ் அணியில் விளையாடினார்.

கோப்பையை வெல்ல போவது யார்?

இரு அணிகளுக்குமே சமமான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர் நிபுணர்கள். இந்த தொடரில் இருமுறை குஜராத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதிக் கொண்டன. அதில் இருமுறையும் குஜராத் அணியே வெற்றி பெற்றது.

இருப்பினும் ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சனின் கேப்டன்ஸி குறித்து அனைவரும் பாராட்டி வருகின்றனர். அதேபோல அஸ்வின், ஜோஸ் பட்லர், சஹல் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் அணிக்கு பலமாக உள்ளனர்.

மறுபுறம் குஜராத் அணியில் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஹர்திக் பாண்ட்யா அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்துள்ளார். மேலும் ஷுப்மேன் கில், மில்லர், ஷமி போன்றோர் அணிக்கு பலம் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறையும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி நான்கு முறையும் கோப்பையை வென்றுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: