You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'விளக்குகளை அணைத்துவிட்டு மக்களை எல்லை தாண்டி தள்ளிவிடுகிறது' - இந்தியா மீது வங்கதேசம் குற்றச்சாட்டு
- எழுதியவர், நகீப் பஹார்
- பதவி, பிபிசி நியூஸ் வங்கமொழி சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
"அவர்களது எல்லையில் முள்வேலிக்கு இணையாக எல்லைச் சாலை உள்ளது. அந்தச் வேலியில் பல்வேறு பகுதிகளில் நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தச் சாலையில் இரவில் பெரிய வாகனங்களில் விளக்குகள் அணைக்கப்பட்டு மக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதன் பிறகு ஏதேனும் ஒரு நுழைவாயிலைத் திறந்து, மக்களை வங்கதேச எல்லைக்குள் தள்ளி விடுகிறார்கள்."
இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் எல்லையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களை வலுக்கட்டாயமாக எல்லை தாண்டி வங்கதேசத்திற்கு அனுப்புவதாகக் கூறியுள்ள வங்கதேச எல்லைக் காவல் படையின் (பிஜிபி) தென்மேற்கு பிராந்திய கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் மஹ்மூதுல் ஹசன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்தியா-வங்கதேச எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக 'புஷ் இன்' (Push in) அல்லது 'புஷ் பேக்' (Push back) என்ற விவகாரத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
பிஜிபி மற்றும் பிஎஸ்எஃப் இடையே அடிக்கடி கொடி அமர்வுகள் மற்றும் விவாதங்கள் நடப்பது ஒருபுறமிருக்க, வங்கதேச மக்கள் இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்களைத் துரத்திய சில சம்பவங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
கடந்த சுமார் இரண்டு வாரங்களாகப் பல்வேறு எல்லைப் பகுதிகளில் இதே போன்ற சூழ்நிலையே நீடித்து வருகிறது.
மே மாத தொடக்கத்தில் இருந்து ஜூன் மாதத்தின் முதல் பத்து நாட்களுக்குள், எல்லையின் 20 பகுதிகளில் குறைந்தது இருநூறு பேரை வங்கதேச எல்லைக்குள் தள்ள பிஎஸ்எஃப் முயன்றதாக பிஜிபி கூறுகிறது.
இதுபோன்ற அனைத்து சம்பவங்களிலும் பிஜிபி வீரர்களுடன் உள்ளூர் மக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததால், ஒரு நபர் கூட வங்கதேச எல்லைக்குள் நுழைய முடியவில்லை என்று அது கூறுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய எல்லை பாதுகாப்புப் படை 'மக்களை தள்ளும்' செய்யும் முறை ஒரே மாதிரியாக இருப்பதாக பிஜிபி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஜெனரல் ஹசன் கூறுகையில், "ஒவ்வொரு முறையும் மக்களை தள்ளுவதற்கு முன்பாக இந்திய எல்லைப் பகுதியில் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. பிஎஸ்எஃப் 'மக்களை தள்ள' தயாராகிறது என்பதற்கான மிகப்பெரிய அறிகுறி இதுவே ஆகும்" என்று கூறுகிறார்.
உள்ளூர் மக்களுக்கு இந்த விவகாரம் குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், 'மக்களைத் தள்ளும்' செயலைத் தடுப்பதில் உதவி கோரப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எல்லையை ஒட்டிய பகுதிகளில் நிலைமை எவ்வாறு உள்ளது?
ஜசோரிலிருந்து பெனாபோல் பகுதியில் இந்திய எல்லையை ஒட்டிய சாதிப்பூர் கிராமத்தில் இருந்து மற்றொரு எல்லைக் கிராமமான ரகுநாத்பூருக்குச் செல்லும் சாலையும் வங்கதேச எல்லையை ஒட்டியே அமைந்துள்ளது. இந்தச் சாலையின் இருபுறமும் மரங்கள் உள்ளன.
ஜூன் 2-ஆம் தேதி இந்தச் சாலைக்குச் சென்றபோது ஒரு வித்தியாசமான காட்சி தென்பட்டது. இந்த முழுப் பகுதியும் ஏதோ ஒரு சுற்றுலாத் தலம் போல மாறியிருப்பது போல் தோன்றியது.
இந்தியாவில் இருந்து வலுக்கட்டாயமாக வங்கதேசத்திற்கு அனுப்பப்பட்டு 'நோ மேன்ஸ் லேண்ட்' பகுதியில் சிக்கிக்கொண்ட மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக அங்கு உள்ளூர் மக்கள் பெருமளவில் கூடியிருந்தனர்.
இருப்பினும், அந்தச் சமயத்தில் 'நோ மேன்ஸ் லேண்ட்' பகுதியில் ஒரு நபர் கூட தென்படவில்லை.
ஜூன் மாதத்தின் கடுமையான வெயிலில் 36 மணி நேரத்திற்கும் மேலாக 'நோ மேன்ஸ் லேண்ட்' பகுதியில் சிக்கியிருந்த 10 முதல் 12 பேர், அந்தச் சமயத்தில் இந்திய எல்லையில் உள்ள முள்வேலிக்கு அருகில் இருந்த மரங்களின் நிழலில் தஞ்சம் புகுந்திருக்கலாம். 'நோ மேன்ஸ் லேண்ட்' பகுதியில் அவர்களின் சில ஆடைகளும் பொருட்களும் காணப்பட்டன.
கடந்த மே 31 நள்ளிரவில் முள்வேலியில் உள்ள நுழைவாயில் வழியாக 10-12 பேரைக் கொண்ட இந்த குழுவை பிஎஸ்எஃப் வலுக்கட்டாயமாக வங்கதேச எல்லைக்குள் தள்ளியதாக பிஜிபி குற்றம் சாட்டுகிறது.
அந்தச் சமயத்தில் பிஜிபி வீரர்கள் டார்ச் அடித்தும், ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரித்தும் அவர்கள் வங்கதேசத்தை நோக்கி வருவதைத் தடுத்தனர். இதன் காரணமாக அந்த மக்கள் அங்குள்ள நோ மேன்ஸ் லேண்டில் சிக்கிக்கொண்டனர்.
இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, ஜூன் 7 அன்று சாம்பாய்நவாப்கஞ்சின் கோமாஸ்தாபூரின் பங்காபாரியின் எல்லைப் பகுதிக்குச் சென்றபோதும் ஏறத்தாழ இதே போன்ற சூழ்நிலையே காணப்பட்டது. ஜூன் 3 ஆம் தேதி இரவில் அந்த எல்லையில் இருந்து 28 பேரை வங்கதேசத்தை நோக்கி பிஎஸ்எஃப் 'தள்ள' முயன்றதாக பிஜிபி குற்றம் சாட்டுகிறது.
ஜூன் 3 ஆம் தேதி இரவு சுமார் இரண்டு முதல் இரண்டரை மணியளவில், பங்காபாரி எல்லைச் சாவடியைச் சேர்ந்த பிஜிபி வீரர்களும் 20-30 உள்ளூர் மக்களும் சேர்ந்து அந்த மக்கள் வங்கதேசத்திற்குள் வருவதைத் தடுத்தனர்.
இதன் காரணமாக அந்த மக்களும் 'நோ மேன்ஸ் லேண்ட்' பகுதியில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கு அவர்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்தனர். ஆனால் ஜூன் 6 ஆம் தேதி இரவில் இருந்து அவர்கள் 'நோ மேன்ஸ் லேண்ட்' பகுதியில் காணப்படவில்லை.
அப்பகுதியில் உள்ள பிஜிபியின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்திய எல்லை பாதுகாப்புப் படையுடன் நடத்திய பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஜூன் 6 ஆம் தேதி இரவில் விளக்குகளை அணைத்த பின், அங்கு சிக்கியிருந்த மக்களை இந்திய எல்லைக்குள் நுழைய பிஎஸ்எஃப் அனுமதித்தது என்று தெரிவித்தார்.
இருப்பினும், பிஎஸ்எஃப் இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
பிஎஸ்எஃப் மீதான குற்றச்சாட்டுகள்
மே மாத இறுதியில், சத்கீரா மாவட்டத்தின் கலாரோவா உப்ஜிலாவை ஒட்டிய எல்லையில் இந்தியப் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியதாகச் செய்திகள் வெளியானதை அடுத்து, மேற்கு வங்கத்தை ஒட்டிய அனைத்துப் பகுதிகளிலும் பிஜிபி கண்காணிப்பை தீவிரப்படுத்தியது.
அதன் பிறகுதான் பிஜிபி வீரர்கள் உள்ளூர் மக்களுடன் இணைந்து ஜினாய்தா, ஜசோர், நவ்கான், சாம்பாய்நவாப்கஞ்ச் மற்றும் பஞ்சகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 'புஷ் இன்' (மக்களை வலுக்கட்டாயமாக தள்ளும்) மூலம் வரும் மக்களைத் தொடர்ந்து தடுத்து நிறுத்தினர்.
அனைத்திலுமே இந்திய எல்லை பாதுகாப்புப் படை கையாளும் 'மக்களை தள்ளும்' செயல்முறை ஒரே மாதிரியாக இருப்பதாக பிஜிபியின் தென்மேற்கு பிராந்திய கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் மஹ்மூதுல் ஹசன் தெரிவிக்கிறார்.
பிஜிபியின் கண்காணிப்பு, உத்திசார் மற்றும் சிவிலியன் ஆதாரங்கள் தவிர, உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், ஒரு எல்லைப் பகுதியில் இருந்து மக்களை வலுக்கட்டாயமாக எல்லை தாண்டி அனுப்புவதற்கு முன்பு பிஎஸ்எஃப் அமைப்பின் சில நடவடிக்கைகள் 'அறிகுறி'யாக இருக்கின்றன என்று அவர் கூறினார். மக்கள் எல்லை தாண்டி அனுப்பப்படுவதற்கான தயாரிப்பு பணிகள் நடந்து வருவதை அவை காட்டுகின்றன.
எல்லைப் பகுதிகளில் வசிக்கும் வங்கதேச கிராமங்களின் சாமானிய மக்கள் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவது பிஜிபிக்கு பெரிதும் உதவுகிறது என்று பிரிகேடியர் ஜெனரல் மஹ்மூதுல் ஹசன் கூறுகிறார்.
அவர்களின் உதவி இல்லாமல் மக்களை வங்கதேசத்திற்குள் தள்ளுவதை தடுப்பது சாத்தியமில்லை என்று அவர் தெரிவித்தார்.
உள்ளூர் மக்கள் பிஜிபிக்கு எவ்வாறு உதவுகிறார்கள்?
மே மாதத்தில் சத்காரியின் கலாரோவா எல்லையில் இந்தியப் பகுதியில் மக்கள் கூடியதை அடுத்து, மேற்கு வங்காளத்தை ஒட்டிய எல்லையில் பிஜிபி கண்காணிப்பையும் ரோந்துப் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் கீழ் உள்ளூர் மக்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பிஜிபியின் நவ்கான் பட்டாலியன் கமாண்டர் லெப்டினன்ட் கர்னல் அரிஃபுல் இஸ்லாம் மாசூம், "நாங்கள் உள்ளூர் பள்ளிகள், மசூதிகள் மற்றும் சந்தைகளில் தொடர்ந்து ஒலிபெருக்கிகள் உதவியுடன் மக்களை எச்சரித்து வருகிறோம். இதனுடன் உள்ளூர் மக்களுடன் உரையாடல்களும் நடத்தப்படுகின்றன. ஏதேனும் அறிகுறி தென்பட்டால் மக்களை வங்கதேசத்திற்குள் தள்ளுவதற்கான முயற்சி நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கூறியுள்ளோம்" என்றார்.
அவர் மேலும் கூறுகையில், ''இதன் பலன் சில நாட்களிலேயே தெரியவந்தது. பங்காபாரி எல்லையில் ஜூன் 3 நள்ளிரவில் இந்திய எல்லையில் விளக்குகள் அணைந்தது குறித்தும், சிலரின் 'புஷ் இன்' முயற்சி குறித்தும் சந்தைக் காவலாளி ஒருவர்தான் எங்களுக்குத் தகவல் கொடுத்தார்'' என்றார்.
அந்தக் காவலாளி அமீனுல்லா, எல்லைப் பகுதியில் விளக்குகள் அணைக்கப்பட்டாலோ அல்லது இந்திய எல்லையில் வாகனங்கள் நடமாடும் சத்தம் கேட்டாலோ எச்சரிக்கையாக இருக்குமாறு பிஜிபி அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு தன்னிடம் கூறியிருந்ததாகத் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, எல்லையிலிருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவிலேயே வீடு இருந்ததால், ஜூன் 3 ஆம் தேதி இரவு இந்திய எல்லையில் இருந்து வந்த 28 பேரைத் தடுப்பதில் அவரது குடும்ப உறுப்பினர்களே முன்னணியில் இருந்தனர். அவர்களில் சில பெண்களும் இருந்தனர்.
"இரவு சுமார் இரண்டரை மணிக்குச் சில ஆண்களும் பெண்களும் எங்கள் எல்லைக்குள் நுழைய முயல்வதைக் கண்டோம். ஆண்களை பிஜிபி தடுத்து நிறுத்தியது. ஆனால் பெண்களைத் தடுக்கும் தைரியத்தை திரட்ட முடியவில்லை. அப்போது நாங்கள்தான் அந்தப் பெண்களைத் தடுத்து இந்திய எல்லையை நோக்கித் தள்ளினோம்" என அமீனுல்லாவின் சகோதரி கூறினார்.
பங்காபாரி மட்டுமின்றி, மேலும் பல எல்லைப் பகுதிகளிலும் 'புஷ் இன்' சம்பவங்களைத் தடுப்பதில் உள்ளூர் மக்களின் பங்களிப்பு வெளிவந்துள்ளது.
ஜூன் மாத தொடக்கத்தில் லால்முனீர்ஹாட்டில் கிராம மக்கள் குழு ஒன்று இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்களைத் துரத்தும் வீடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தது.
பல்வேறு எல்லைப் பகுதிகளில் உள்ளூர் கிராம மக்கள் இரவில் விழித்திருந்து பிஜிபியுடன் சேர்ந்து காவலும் ரோந்துப் பணியும் மேற்கொண்டு வருவதாக அவர் கூறுகிறார்.
சாமானிய மக்கள் ரோந்துப் பணியில் ஈடுபடாவிட்டாலும், பல நேரங்களில் அவர்கள் அதிக எண்ணிக்கையில் திரள்வதே காரியத்தைச் சாதித்து விடுகிறது என்று பிஜிபி உயர்மட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவதால், பிஎஸ்எஃப் அமைப்பால் பொதுவாக 'புஷ் இன்' செய்ய முடிவதில்லை என்பது அவரது கூற்று.
ஜசோர் மற்றும் சாம்பாய்நவாப்கஞ்ச் எல்லைப் பகுதியில் உள்ள பல கிராம மக்களுடன் நடத்திய உரையாடலில் இருந்து, 'நோ மேன்ஸ் லேண்ட்' பகுதியில் சிக்கிய மக்கள் மீது அவர்களுக்கு மிகுந்த அனுதாபம் இருப்பது தெரியவருகிறது.
அவர்களில் பலர் வங்கதேச குடிமக்களாக இருப்பதால், அவர்கள் மீண்டும் நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பது குறித்தும் அவர்களின் பார்வை சாதகமாக உள்ளது.
ஆனால் பிஜிபியைப் போலவே, அவர்களும் வங்கதேச குடிமக்களைத் திருப்பி அனுப்பும் இந்த செயல்முறை 'புஷ் இன்' அல்லது 'புஷ் பேக்' என்பதற்குப் பதிலாகச் சட்டப்பூர்வமாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
பிஎஸ்எஃப் என்ன சொல்கிறது?
பிஜிபியின் குற்றச்சாட்டுகள் குறித்து பிஎஸ்எஃப் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஆனால், இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே பல்வேறு மட்டங்களில் நடைபெறும் கூட்டங்களில், மக்களை வலுக்கட்டாயமாக வங்கதேசத்திற்குள் தள்ளும் 'புஷ் இன்' குற்றச்சாட்டுகளை அவர்கள் (பிஎஸ்எஃப்) பலமுறை நிராகரித்துள்ளதாக பிஜிபி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிஜிபியின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பிஎஸ்எஃப் என்னதான் சொல்கிறது?
இந்தக் கேள்விக்கு பிஜிபியின் பிராந்திய கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் மஹ்மூதுல் ஹசன் பதிலளிக்கையில், "'புஷ் இன்' சம்பவங்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இந்த மக்கள் ஜீரோ லைனின் இந்தப் பக்கத்திற்கு எவ்வாறு வந்தார்கள் என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் பிஎஸ்எஃப் கூறுகிறது. நோ மேன்ஸ் லேண்டில் சிக்கியிருப்பவர்கள் வங்கதேச குடிமக்கள் என்பது அதன் கருத்து" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு