You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐபிஎல் 2022: பெங்களூருவின் கனவு தகர்ந்தது... பட்லர் சதத்தால் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான்
- எழுதியவர், அஷ்ஃபாக்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ஐபிஎல்லில் கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற ஆர்.சி.பியின் நீண்ட நாள் கனவு மீண்டும் தகர்க்கப்பட்டிருக்கிறது. ஜாஸ் பட்லரின் அபாரமான ஆட்டத்தால் பெங்களூருவை வீழ்த்தி 2008க்கு பிறகு 2வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 2வது குவாலிஃபயர் ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்றது. டாஸில் பெரும்பாலும் தோல்வியை தழுவி வந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், இந்த முறை டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பொறுப்பான ஆட்டம் - சாதித்த படிதர்
விராட் கோலி 7 ரன்களில் ப்ரஷித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழக்க, 2வது விக்கெட்டுக்கு டூ பிளெசிஸ் உடன் ஜோடி சேர்ந்த ரஜத் படிதர் கடந்த ஆட்டத்தை போன்றே இந்த முறையும் நேர்த்தியாக ஆடினார். சிறப்பான ஷாட்களால் பவுண்டரியும் சிக்சருமாக பறக்கவிட்ட படிதர், 40 பந்துகளில் அரைசதம் விளாசினார். மறுமுனையில் டு பிளெசிஸ் 25, மேக்ஸ்வெல் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். படிதர் 42 பந்துகளில் 3 சிக்சர் 4 பவுண்டரிகள் விளாசி 58 ரன்களில் விடைபெற்றார். ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சாதனையை படைத்திருக்கிறார் ரஜத் படிதர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் வெறும் 6 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றினார். அவரை தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து நடையை கட்ட பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 34 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ராஜஸ்தானின் பந்துவீச்சு தாக்குதல்
பெங்களூருவின் ரன் குவிப்பை துல்லியமான பந்துவீச்சின் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தது ராஜஸ்தானின் பந்துவீச்சுப் படை. குறிப்பாக ராஜஸ்தான் பவுலர் பிரசித் கிருஷ்ணா விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஹசரங்கா என முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். அதே சமயம் மெக்காயும் தனது பங்குக்கு 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, முதல் ஓவரிலேயே 2 சிக்சர் 1 பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்து அதிரடியை தொடங்கியது. பவர் பிளே முடிவில் 67 ரன்கள் சேர்த்து போட்டியை தன் வசப்படுத்தியது ராஜஸ்தான் ராயல்ஸ். ஜெய்ஸ்வால் 21, சஞ்சு சாம்சன் 23 ரன்களில் ஆட்டமிழந்தாலும் களத்தில் தனது வேலையை கச்சிதமாக செய்து கொண்டிருந்தார் அதிரடி பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர்.
பட்லர் சதத்தால் தகர்கப்பட்ட ஆர்.சி.பியின் கனவு
சிக்சரும் பவுண்டரியுமாக பறக்கவிட்ட பட்லர், 59 பந்துகளில் சதத்தையும் பதிவு செய்தார். நடப்பு தொடரில் இது அவருக்கு 4வது சதம். ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையையும் சமன் செய்திருக்கிறார் பட்லர். சதம் அடித்த கையோடு ஹர்ஷல் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை பட்லர் சிக்சருக்கு விளாச, ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
60 பந்துகளில் 6 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் விளாசிய ஜாஸ் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கேப்டன்
தோல்விக்கு பின்னர் பேசிய பெங்களூரு கேப்டன் டு பிளெசிஸ், "முதல் செஷன் டெஸ்ட் கிரிக்கெட்டை போன்று இருந்தது. உண்மையில் அதிகமான பவுன்ஸ் இருந்தது. 180 ரன்கள் எடுக்க நினைத்தோம் என்றார். ஆர்.சி.பிக்கு இது ஒரு சிறப்பான சீஸன். மிகவும் வலிமையான ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடாவிட்டாலும் ஆர்.சி.பி அணியை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். எங்கு சென்று விளையாடினாலும் ஆர்.சி.பி.. ஆர்.சி.பி என்கிற முழக்கத்தை கேட்க முடிந்தது. மும்பை விளையாடியபோது கூட ஆர்.சி.பிக்கு ஆதரவாக ரசிகர்கள் முழக்கமிட்டது உணர்வுப்பூர்வமாக இருந்தது. எங்கள் ரசிகர்களுக்கு மிக்க நன்றி" எனக்கூறி விடைபெற்றார்.
பின்னர் பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், டாஸ் எங்களுக்கு சாதகமாக அமைந்தது. உண்மையில் அது முக்கிய பங்கு வகித்தது. 2வது இன்னிங்சில் ஆடுகளம் மாறியிருந்தது. ஜாஸ் பட்லர் போன்றதொரு சிறந்த பேட்ஸ்மேன் கிடைப்பதற்கு நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் என மகிழ்ச்சியுடன் கூறினார்.
14 ஆண்டுகளுக்கு பின்னர் இறுதிப்போட்டியில்...
ராஜஸ்தான் ராயல்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைவது இது 2வது முறை.. 2008ல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து மறைந்த ஷேன் வார்ன் தலைமையில் கோப்பையை உச்சிமுகர்ந்தது. அதற்கு பின்னர் 2013, 15,18ம் ஆண்டுகளில் பிளே ஆஃப் சுற்று வரை வந்த ராஜஸ்தானுக்கு வெற்றி கைகூடவில்லை. இப்போது மீண்டும் சஞ்சு சாம்சன் தலைமையில் இறுதிப்போட்டிக்குள் கால் பதித்துள்ள ராஜஸ்தான், பலம் வாய்ந்த குஜராத் டைடன்ஸை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது.
குவாலிஃபயரின் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான், குஜராத்திடம் தோல்வியை தழுவியது கவனிக்கத்தக்கது.
புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்து பலம் வாய்ந்த அணிகளாக வலம் வரும் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஐபிஎல் இறுதி யுத்தம் ஞாயிற்றுக்கிழமை (மே 29) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெறுகிறது. கோப்பையை வெல்ல இரு அணிகளும் சம பலத்துடன் போராடும் என்பதால் ஆடுகளத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்