சிஎஸ்கே அணி ரன் ரேட்டில் முன்னேற்றம்: டெல்லிக்கு எதிரான வெற்றி கை கொடுக்குமா?

    • எழுதியவர், பிரசாந்த் முத்துராமன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பிளே ஆஃபுக்குள் நுழையும் வாய்ப்பை ஏற்கெனவே சிஎஸ்கே அணி இழந்துவிட்டதாக சொல்லப்பட்டபோதும், டெல்லி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமான இந்த ஆட்டத்தில், தன் அதிரடி ஆட்டத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

நடப்பு தொடரின் 55ஆவது போட்டி டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நவிமும்பையில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்த டெல்லி அணிக்கு எதிராக தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே.

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடத்தொடங்கிய ருதுராஜ்-கான்வே கூட்டணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 5 சிக்ஸர்கள் உட்பட 12 பவுண்டரிகளுடன் 49 பந்துகளில் 87 ரன்களை கான்வேயும், 33 பந்துகளில் 41 ரன்களை ருதுராஜும் எடுத்து அணிக்கு வலுவான தொடக்கத்தை தந்தனர். 10.5 ஓவர்களில் 110 ரன்கள் வரை முதல் விக்கெட்டை கூட இழக்காமல் தொடர்ந்தது இந்தக் கூட்டணி.

ருதுராஜை அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அணியின் ரன்களை உயர்த்தினார்.

பின்னர் களமிறங்கிய அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா ஆகிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இடையில், ராயுடு விக்கெட்டுக்குப் பின் களமிறமிங்கிய தோனி தன் பாணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்தது சென்னை அணி. 

பாய்ந்து வந்த பந்துவீச்சு

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின், தொடக்க வீரர்களான டேவிட் வார்னரும், ஸ்ரீகர் பரத்தும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து களமிறங்கியவர்களில் மிச்சல் மார்ஷ் மற்றும் ரிஷப் பண்ட் முறையே 25 மற்றும் 21 ரன்கள் எடுத்தனர். ஷர்துல் தாக்கூர் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். மற்றபடி எந்தவீரரும் பெரிதாக சோபிக்கவில்லை.

இறுதியில், 17.4 ஒவர்களில் 117 ரன்களுடன் 10 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது டெல்லி அணி.

டெல்லி அணிக்கு எதிராக, மொய்ன் அலி எடுத்த 3 விக்கெட்டுகள் சென்னை அணியின் வெற்றிக்குக் கூடுதல் காரணமாக அமைந்தன.  

கவனம் ஈர்த்த டெவான் கான்வே:

27 பந்துகளில் அரை சதத்தை எட்டிய டெவான் கான்வே நேற்றைய ஆட்டத்தில் கவனிக்கப்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தார்.

மூன்றாவது முறையாக தொடர்ந்து அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார் டெவான் கான்வே.

2021இல் ஃபாப் டூ ப்ளெசிஸ் 4 முறை தொடர்ந்து அரைசதம் அடித்தார். பின்னர் 2020ஆம் ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் 3 முறை அரைசதம் அடித்தார். இந்த வரிசையில், தற்போது 3 தொடர் அரைசதங்களை விளாசி டெவான் கான்வேயும் இணைந்துள்ளார்.

டெல்லி அணியில் பந்து வீச்சாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அணி மொத்தமும் சோதனை செய்யப்பட்டு பிறகே இந்த ஆட்டம் நடந்தது. இதையடுத்து உளவியல் ரீதியாக எப்படி தயாராக இருந்தது டெல்லி அணி என்பதும் கவனிக்க வேண்டிய அம்சம்.

புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்: தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் 8 ஆவது இடத்தை வகிக்கிறது சென்னை அணி. இதுவரை 11 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்ற நிலையில், இனிவரும் 3 போட்டிகளில் வெற்றிபெற்றால் மொத்தம் 14 புள்ளிகளை பெற முடியும். பிளே ஆஃப் செல்ல 16 புள்ளிகள் தேவை என்ற நிலையில், 14 புள்ளிகளுடன் அதிக நெட் ரன் ரேட் இருந்தால், மற்ற அணிகளின் தோல்விகளைப் பொறுத்து சிஎஸ்கே பிளே ஆஃபுக்குள் நுழைய வாய்ப்பு கிடைக்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :