CSK முதல் வெற்றி: உத்தப்பா - ஷிவம் துபே அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணியை தோற்கடித்தது

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அஷ்ஃபாக்
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ஐ.பி.எல். 2022 தொடங்கியது முதல் 4 போட்டிகளில் தொடர் தோல்வி. பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் சொதப்பல்.. சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப்க்குள் நுழையுமா என்கிற ஐயம். ஜடேஜாவின் கேப்டன்சி குறித்து மிகப்பெரிய விவாதம். இவை அத்தனையையும் பெங்களுருவுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் தவிடு பொடியாக்கியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
நவி மும்பையில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுருவுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 23 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது
ஏமாற்றிய ருத்துராஜ் - தடுமாறிய சி.எஸ்.கே
டாஸில் தோற்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. ருத்துராஜ் 17 ரன்களிலும், மொயின் அலி 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
வழக்கம்போல் இந்த முறையும் தோல்விதான் என ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில்தான் அந்த அதிரடி ஆக்ஷன் அரங்கேறியது.
ராபின் உத்தப்பாவும் ஷிவம் துபேவும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் 10 ஓவர்களில் 60 ரன்கள் மட்டுமே எடுத்து திணறிக் கொண்டிருந்த சி.எஸ்.கேவை இருவரும் சேர்ந்து தூக்கி நிறுத்தினர்.
தொடங்கிய அதிரடி
11 முதல் 15 ஓவர்களுக்கு இடையில் மட்டும் 73 ரன்கள் குவித்தது இந்த ஜோடி. உத்தப்பா 33 பந்துகளில் அரைசதம், துபே 30 பந்துகளில் அரைசதம் எடுத்தனர். ஆடுகளத்தில் நங்கூரமிட்ட இருவரும் மிடில் ஓவர்களில் கிடைத்த பந்துகளையெல்லாம் அடித்து நொறுக்கினர். உத்தப்பா 50 பந்துகளில் 9 சிக்சர், 4 பவுன்டரிகளுடன் 88 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஐபிஎல் போட்டிகளில் தனது உச்சபட்ச ஸ்கோரை இன்றைய ஆட்டத்தில் பதிவு செய்திருந்தார் உத்தப்பா
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
பந்துவீச்சை நாலாபுறமும் பிளந்து கட்டிய இந்த ஜோடி 165 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டுமே 156 ரன்கள். ஐபிஎல் வரலாற்றிலேயே 3வது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி எனும் சாதனையை படைத்துள்ளனர் உத்தப்பாவும் - துபேவும்
46 பந்துகளை எதிர்கொண்டு அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 8 சிக்சர், 5 பவுன்டரிகளுடன் 95 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் சேர்த்தது
நம்பிக்கை அளித்த தீக்ஷனா
217 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த தொடக்க ஆட்டக்காரர்களான டு பிளெசிஸையும் இளம் வீரர் அனுஜ் ராவத்தையும் தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் வீழ்த்தினார் மஹீஷ் தீக்ஷனா. விராட் கோலி 1 ரன்னில் முகேஷ் சவுத்ரி பந்துவீச்சில் துபேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கடந்த போட்டிகளில் பவர் பிளேயில் விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய சி.எஸ்.கே இந்த முறை 3 விக்கெட்களை சாய்த்திருந்தது.
மேக்ஸ்வெல் 2 சிக்சர் 2 பவுன்டரிகள் விளாசி சென்னை அணியை அச்சுறுத்தத் தொடங்கிய சமயத்தில் கேப்டன் ஜடேஜாவின் சுழலில் சிக்கினார்.
வெற்றிக்கு போராடிய பெங்களூரு
பெங்களூரு அணி தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் ஷாபாஷூம் பிரபு தேசாயும் ஜோடி சேர்ந்து ரன் குவிக்கத் தொடங்கினர். 5வது விக்கெட்டிற்கு 50 ரன்களையும் தாண்டி விளையாடிக் கொண்டிருந்தது இந்த ஜோடி. இருவரையும் தீக்ஷனா பவுல்டாக்கி கச்சிதமாக வேலையை முடித்தார்.
6 ரன்கள் எடுத்திருந்தபோது தினேஷ் கார்த்திக்கின் கேட்சை சென்னை வீரர் முகேஷ் நழுவ விட. அதற்காக சி.எஸ்.கே கொடுத்த விலையோ 28 ரன்கள்..
கடைசி வரை ஆட்டத்தை கொண்டு செல்ல தீவிரம் காட்டிய தினேஷ் கார்த்திக், பிராவோ பந்துவீச்சில் கேப்டன் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து 34 ரன்களில் விடைபெற்றார். நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய ஆட்டங்களில் நாட் அவுட் பேட்ஸ்மேனாகவே திகழ்ந்த தினேஷ் கார்த்திக் சி.எஸ்.கேவிடம் முதல் முறையாக விக்கெட்டை பறிகொடுத்திருக்கிறார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. ஆட்டநாயகனாக ஷிவம் துபே தேர்வு செய்யப்பட்டார்
200வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய சி.எஸ்.கே, நடப்பு தொடரில் பலமிக்க அணியாக திகழும் பெங்களூரை சாய்த்து முதல் வெற்றியை ருசித்திருக்கிறது. சிறப்பான ஆட்டத்தின் மூலம் விமர்சனங்களுக்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. பேட்டிங்கில் அதிரடி காட்டியிருந்தாலும் ருத்துராஜ் கெய்க்வாட்டின் நிலை தொடர்ந்து கவலையளிக்கிறது. பந்துவீச்சில் தீக்ஷனா நம்பிக்கை அளிக்கிறார். தொடக்கத்தில் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசில முக்கிய கேட்ச்களை நழுவவிட்டதன் விளைவாக சி.எஸ்.கே கணிசமான ரன்களை காணிக்கை அளிக்க வேண்டியிருந்தது. இதனை எதிர்வரும் போட்டிகளில் சரி செய்வது அந்த அணிக்கு மிகவும் அவசியம். 4 தோல்விகளுக்குப் பிறகு வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ள சி.எஸ்.கே நடப்பு ஐபிஎல்லில் பலம் மிக்க அணியாக உருவெடுக்குமா, பிளே ஆஃப்புக்குள் நுழையுமா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு இனி வரும் ஆட்டங்களில்தான் விடை தெரியும்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்















