IPL 2022 MI Vs KKR - கம்மின்ஸின் அதிரடியால் கலைந்த மும்பையின் கனவு

kolkatta

பட மூலாதாரம், BCCI/IPL

பிரசுரிக்கப்பட்டது

நடத்தப்படாத பாடத்தில் இருந்து கேள்வி வந்திருந்தால் தேர்வு எழுதும் மாணவருக்கு எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு. அந்தக் கேள்வி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட் கம்மின்ஸ். யாருக்கும் எதிர்பாராத வகையில் அவரது ஆட்டம் இருந்தது.

30 பந்துகளில் 35 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஒரே ஓவரில் ஆட்டத்தை முடித்துவிட்டார் கம்மின்ஸ். அதற்கு முந்தைய பும்ராவின் ஓவரில் அவர் அடித்த சிக்ஸரும் பவுண்டரியும் அவரது பழைய இன்னிங்ஸ் ஒன்றை நினைவுபடுத்தியிருந்தது. டேனியல் சாம்ஸ் வீசிய அடுத்த ஓவர் ஆட்டத்தை முடிப்பதற்கு கம்மின்ஸுக்கு போதுமானதாக இருந்தது.

14 பந்துகளில் அரைச் சதம் அடித்த கம்மின்ஸ், விரைவான அரைச் சதம் என்ற சாதனையைச் சமன் செய்தார். அவர் அடித்த 56 ரன்களில் ஆறு சிக்ஸர்களும் நான்கு பவுன்டரிகளும் அடங்கும்.

கம்மின்ஸ் இப்படியொரு ஆட்டத்தை காட்டுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். "பயிற்சியின்போது அனைத்துப் பந்துகளிலும் போல்டாகிக் கொண்டிருந்தார்" என்றார் வெங்கடேஷ் ஐயர் .

ஏன் கம்மின்ஸுக்கே இது வியப்புதான். போட்டி முடிந்த பிறகு பேசிய கம்மின்ஸ் "இது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை" என்று கூறினார்.

குறைவான ரன் இலக்கு, வெங்கடேஷ் ஐயரின் அரைச் சதம் என காரணங்கள் இருந்தாலும், கம்மின்ஸின் அதிரடி இல்லையென்றால் கொல்கத்தா அணி வெற்றி பெறாமல் போவதற்கும் வாய்ப்பிருந்தது.

என்ன நடந்தது?

நடப்பு சீசனில் முதல் வெற்றிக்கான தாகத்தோடு மும்பை இண்டியன்ஸ் அணியும், மூன்றாவது வெற்றிக்கான வேட்கையில் கொல்கத்தா அணியும் புனே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. 5 முறை சாம்பியனாக வலம் வந்த மும்பை இந்த சீசனில் விளையாடி இருந்த முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருந்தது.

இத்தகைய சூழலில் ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்றுள்ள நேர்மறையான மனநிலையுடன் அந்த அணியைச் சந்தித்தது மும்பை இந்தியன்ஸ். மறுபுறம் மறுகட்டமைப்பு செய்த அணியுடன் மும்பைக்கு நெருக்கடி கொடுக்க தயாராக இருந்தது கொல்கத்தா.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி ஈரப்பதம் உள்ளிட்ட சில காரணிகளைக் கருத்தில் கொண்டு பந்து வீச்சை தேர்வு செய்தது. இமாலய ஸ்கோர்களே இந்த சீசனில் எளிதில் எட்டப்பட்டு வரும் நிலையில் மிகப்பெரிய ஸ்கோருக்கான முனைப்பில் கேப்டன் ரோகித் ஷர்மாவும், இஷான் கிஷனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஏமாற்றிய தொடக்க வீரர்கள்

ஆனால் மும்பை அணிக்கு தொடக்கம் அவ்வளவு சாதகமாக அமையவில்லை. அணியின் கேப்டன் ரோகித் 12 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்களை மட்டுமே எடுத்து உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். நடைபெற்று வரும் 15 ஆவது சீசன் ஐபிஎல்லில் பவர் பிளேவுக்குள் குறைந்தது ஒரு விக்கெட்டையாவது சரித்து வருகிறார் உமேஷ் யாதவ்.

MI Vs KKR

பட மூலாதாரம், BCCI/IPL

ரோகித்தின் விக்கெட்டிற்குப் பிறகு களமிறங்கினார் தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ். இவருக்கு ஐபிஎல்லில் முதல் ஆட்டம் இது. ஆட்ட நுணுக்கத்தில் ஏபிடிவில்லியர்ஸ் உடன் ஒப்பிடப்படும் இவர், மளமளவென ரன்களைச் சேர்த்தார். 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டர்களை விளாசிய பிரெவிஸ் 19 பந்துகளில் 29 ரன்களைச் சேர்த்தார்.

ஆட்டத்தை விறுவிறுப்பாக நகர்த்திய அவர் வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். இதையடுத்து மும்பை அணியை பல போட்டிகளில் சரிவிலிருந்து மீட்ட பெருமைக்குரிய சூர்யக்குமார் யாதவ் களமிறங்கினார்.

தனது வழக்கமான பாணியில் அவர் ரன்களைச் சேர்த்துக் கொண்டிருந்த போதிலும் மறுமுனையில் இஷான் கிஷன் ரன்களைச் சேர்க்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

21 பந்துகளை எதிர்கொண்ட இஷான், 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸிடம் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து நடப்பு சிசனில் அதிகம் பேசப்படும் வீரர்களில் ஒருவரான திலக் வர்மா களமிறங்கினார். சூர்யமாருடன் வலுவான கூட்டணி அமைத்த அவர் 27 பந்துகளில் 38 ரன்களை விளாசினார். ஆட்டமிழந்தார்.

அரை சதம் விளாசிய சூர்யக்குமார் 52 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து இறுதி ஓவர்களில் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் பொல்லார்டு களமிறங்கினார்.

கடைசி ஓவரில் 5 பந்துகள் எஞ்சியிருந்த போது களமிறங்கிய அவர் அவற்றில் 3 பந்துகளில் சிக்ஸரை விளாசினார். இன்னிங்ஸில் ஒரு கட்டத்தில் திணறிய மும்பை, சூர்யக்குமார், திலக் மற்றும் பொல்லார்டின் அதிரடிகள் மூலம் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் என்ற சராசரியான ஸ்கோரை எட்டியது.

தடுமாறிய கொல்கத்தா

இதனையடுத்து நடப்பு சீசனில் சேஸ் செய்த இரண்டு போட்டிகளிலும் வெற்றியை வசப்படுத்திய பாசிட்டிவ் இண்டெண்ட் உடன் இலக்கை துரத்த தயாரானது கொல்கத்தாவ் நைட் ரைடர்ஸ். தொடக்க வீரர்களாக ரஹானேவும், இளம் வீரர் வெங்கடேஷும் களமிறங்கினர்.

mumbai indians

பட மூலாதாரம், BCCI/IPL

7 ரன்கள் எடுத்திருந்த போது அனுபவ வீரர் ரஹானே ஆட்டமிழந்தது கொல்கத்தா அணிக்கு சறுக்கலாக அமைந்தது. பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அவரை தொடர்ந்து வந்த சாம் பில்லிங்ஸ் 17 ரன்கள், நிதிஷ் ரானா 8 ரன்கள் எடுத்து பெவிலியனுக்கு திரும்பினர். 11.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 83 ரன்கள் மட்டும் எடுத்து தடுமாறியது கொல்கத்தா.

கம்மின்ஸின் சூறாவளி ஆட்டம்

இத்தகைய சூழலில் களமிறங்கினார் அந்த அணியின் முக்கிய துருப்புச் சீட்டுகளில் ஒருவரான ஆண்ட்ரே ரசல். 5 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஆனால் மறுமுனையில் தொடக்கவீரர்களில் ஒருவரான வெங்கடேஷ் நிதானமாக ரன்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார். இக்கட்டான கட்டத்தில் அவருடன் ஜோடி சேர்ந்தார் அந்த அணியின் முன்னாள் கேப்டனான பேட் கம்மின்ஸ்.

யாரும் கணித்திராத வகையில் தொடக்கம் முதலே மட்டையைச் சுழற்றினார் கம்மின்ஸ். மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சிக்ஸர் மழை பொழிந்தார். 15 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில் கடைசி 5 ஓவர்களில் 35 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

டேனியல் சாம்ஸ் வீசிய 16 ஆவது ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உள்பட 35 ரன்களை விளாசினார் கம்மின்ஸ். 14 பந்துகளில் அரை சதத்தையும் பூர்த்தி செய்ததோடு ஆட்டத்தையும் கொல்கத்தாவுக்கு வெற்றிகரமாக வசப்படுத்தினார்.

மேலும் ஐபிஎல்லில் குறைந்த பந்துகளில் அரை சதம் விளாசிய வீரர்களின் பெருமை மிகு பட்டியலின் முதலிடத்தை கே.எல்.ராகுலுடன் பகிர்ந்துள்ளார் கம்மின்ஸ். 15 பந்துகளில் 56 ரன்கள் விளாசி கம்மின்ஸும், 41 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து வெங்கடேஷும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அதிரடியான இந்த வெற்றியின் மூலம் நடப்பு சீசனில் 3 ஆவது வெற்றியைப் பதிவு செய்து கொல்கத்தா புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. புனே மைதானத்தில் 7 போட்டிகளில் களம் கண்ட கொல்கத்தா அணி அவை அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.

மறுபுறம் நடப்பு சாம்பியனான சென்னை அணியை தொடர்ந்து, மும்பையும் ஹாட்ரிக் தோல்வியைக் கண்டுள்ளது. இவ்விரு அணிகளும் வரும் சனிக்கிழமை தங்களது 4 ஆவது போட்டிகளை விளையாடவுள்ளன. ஐபிஎல்லில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற பெருமைக்குரிய இவ்விரு அணிகளில் யாருக்கு முதல் வெற்றி கிடைக்கப் போகிறது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: