கால்பந்து விளையாட்டில் பெண்களுக்கும் ஆண்களுக்கு நிகரான ஊதியம் - பிரேசில் முடிவு

பிரசுரிக்கப்பட்டது

பிரேசில் நாட்டின் மகளிர் கால்பந்து அணிக்கு அந்த நாட்டின் ஆடவர் கால்பந்து அணிக்கு நிகரான ஊதியம் வழங்கப்படும் என்று பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இனிமேல் ஆண் மற்றும் பெண் வீரர்களுக்கு தினசரி ஊதியம் மற்றும் பரிசுத்தொகை ஆகியன சரி சமமாக இருக்கும் என்று அந்தக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

இந்த முடிவு கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்டதாக பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ரொஜேரியோ கபாக்லோ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ள காரணத்தால் பிரேசில் மகளிர் அணி மார்ச் மாதம் முதல் எந்த போட்டியிலும் இதுவரை விளையாடவில்லை.

ஆண்கள் மற்றும் பெண்கள் கால்பந்து அணிக்கான பரிசுகள் மற்றும் தினசரி ஊதியங்களை சரிசமமாக வழங்க கடந்த மார்ச் மாதம் பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு முடிவெடுத்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

பெண் வீரர்களுக்கு சம ஊதியம் வழங்கும் பிற நாடுகள்

இதே மாதிரியான ஏற்பாடு கடந்த ஜனவரி மாதம் முதல் இங்கிலாந்திலும் நடைமுறையில் உள்ளது.

இங்கிலாந்து அணிக்காக விளையாடும் பெண்களுக்கும் ஆண்கள் அளவே போட்டிக்கான ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இங்கிலாந்து கால்பந்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் அப்போது தெரிவித்திருந்தார்.

ஆஸ்திரேலியா, நார்வே, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டுக்காக விளையாடும் சர்வதேச விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஆண்கள் அளவுக்கு சமமான ஊதியம் வழங்க இதற்கு முன்னதாக முடிவெடுத்துள்ளன.

உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பெறும் வெற்றிக்கான பரிசுத் தொகைக்கும் இந்த முடிவு பொருந்தும் என்று ரொஜேரியோ கபாக்லோ தெரிவித்துள்ளார்.

"பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு ஆண்கள் மற்றும் பெண்களை சமமாகவே நடத்துவதால் இனிமேல் பாலின ரீதியான பாகுபாடு இருக்காது," என்கிறார் அவர்.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பெறும் வெற்றிக்கு ஆண்கள் எந்த அளவுக்கு பரிசு பெறுவார்களோ அதே அளவுக்கு பெண்களும் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: