You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அறிவியல் கண்டுபிடிப்பு: தமிழகத்தில் 'ஊரக கண்டுபிடிப்பாளர்' விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு அறிவியல் நகரத்தில் பள்ளி, கல்லூரி மாணாவர்கள், அறிவியல் ஆய்வு மேற்கொள்பவர்கள், பொது மக்களிடையே அறிவியல் படைப்பாற்றலை மேம்படுத்தும் வகையில் கருத்தரங்கம், பயிற்சிப் பட்டறைகள், மாநாடுகள், பயிற்சி வகுப்புகள், சிறப்பு முகாம்கள், சிறப்பு அமர்வுகள், காட்சிகள் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. பல்வேறு பிரிவில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல் நகரம் (சயின்ஸ் சிட்டி) உள்ளது. இது ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனமாக செயல்படுகிறது.
அறிவியல் நகரத்தில் 60க்கும் மேற்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அறிவியல் நகரத்தின் உறுப்பு நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இதன் தலைவராக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளார். துணைத் தலைவராக ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் இந்த அமைப்பில் உள்ளனர்.
வழங்கப்படும் விருதுகள்
பள்ளி, கல்லூரி மாணவர்கள், அறிவியல் ஆய்வு மேற்கொள்பவர்கள், பொது மக்களிடையே அறிவியல் படைப்பாற்றலை மேம்படுத்தும் வகையில் கருத்தரங்கம், பயிற்சிப் பட்டறைகள், மாநாடுகள், பயிற்சி வகுப்புகள், சிறப்பு முகாம்கள், சிறப்பு அமர்வுகள், காட்சிகள் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன.
இத்துடன், அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பு அளித்து வரும் அறிவியலாளர்களை கெளரவிக்கும் விதமாக "தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது" வழங்கப்படுகிறது.
அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பினைப் புரிந்த முதுநிலை அறிவியலாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு "தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளர் விருது " வழங்கப்படுகிறது.
அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பினைப் புரிந்த இளநிலை அறிவியலாளர்களை மேற்கொண்டு ஆராய்ச்சியினை ஊக்குவிக்கும் விதமாக "தமிழ்நாடு இளம் அறிவியலாளர்கள் விருது" வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஊரகப்பகுதியில் வசிக்கும் அறிவியலாளர்களின் தனித்துவமான கண்டுபிடிப்புகளை கண்டறிந்து அவர்களுக்கு "ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
பள்ளி மாணாக்கர்களுக்கு அறிவியலில் வழிகாட்டியாக இருந்து சிறப்பாக ஊக்குவித்து பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு " சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுகள் வழங்கப்படுகிறது.
ஊரக கண்டுபிடிப்பாளர் விருது
குறிப்பாக, கிராமப்புறத்தில் முறையாக கல்விக் கற்காமலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பற்றி அதிகம் தெரியாமல் இருந்தாலும் சமூகத்திற்கு நன்மை தரும் பல அறிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளனர்.
கல்வி, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல தடைகளையும் கடந்து, சிறந்த கண்டுபிடிப்புகள் கிராமப்புற கண்டுபிடிப்பாளர்களால் கிடைத்து வருகின்றன. கிராமப்புற மக்களால், சமூகத்தின் நலனுக்காக குறைந்த செலவில் பல கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அறிவியல் நகரம் தெரிவித்துள்ளது.
அவர்களின் கண்டுபிடிப்புகள், பாரம்பரிய அறிவு மற்றும் படைப்பாற்றல் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு, ஊரக கண்டுபிடிப்பாளர் விருதை அறிவியல் நகரம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் ஊரக கண்டுபிடிப்பாளர்கள் இருவர் இவ்விருதிற்காக தேர்வு செய்யப்படுவார்கள். விருது பெறும் ஊரக கண்டுபிடிப்பாளர்கள் இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய், சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசும் வழங்கப்படுகிறது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தை, அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, மாவட்ட ஆட்சியரிடம் சேர்ப்பிக்க வேண்டும்.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விருது
இதேபோல், மாணவர்களின் புத்தாக்கத் திறனை மேம்படுத்தி, அவர்களை புதிய கண்டுபிடிப்பை நோக்கி வழிகாட்டும் ஆசிரியர்களுக்கு "அறிவியல் ஆசிரியர் விருது'' வழங்கப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர்கள் 10 பேரை தேர்வு செய்து, பொதுப்பிரிவைச் சேர்ந்த 5 ஆசிரியர்களுக்கும், தமிழ்வழிக் கல்விப் பிரிவில் 5 ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
விருதுக்கு தேர்வாகும் ஆசிரியர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வழியாக பள்ளிக் கல்வி இயக்குநர் மூலம் அறிவியல் நகரத்தில் சேர்ப்பிக்கபட வேண்டும்.
இணையதளத்தில் கிடைக்கும் விண்ணப்பம்
இந்த விருதுகள் குறித்த கூடுதல் விவரங்களை www.sciencecitychennai.in என்கிற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். இணைய தளத்திற்கு சென்று, முகப்பு பக்கத்தில், விருதுகள் என்ற பிரிவின் கீழ் சொடுக்கி, விபரங்களைப் பார்க்கலாம். விண்ணப்பத்தினையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, துறைசார் அதிகாரிகள் வழியாக மார்ச் 7ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவியல் நகரம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?
- யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி: நாடகத்தில் அதிபரானவர், நாட்டில் அதிபரான கதை
- யுக்ரேன் தலைநகர் கீயவ் தெருக்களில் கடும் சண்டை: வெடிகுண்டு சத்தம் - நேரலை செய்தி
- யுக்ரேனில் ரஷ்யாவின் நுழைவு குறித்து ரஷ்யர்களின் மனநிலை என்ன?
- யுக்ரேன்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்