இரானில் பிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்கள் - வெளியுறவுத் துறை அமைச்சர் சொன்னது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலுக்கு தொடர்புடையதாக கூறி, இரானால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - இரான் இடையேயான மோதல் போக்கின் காரணமாக, இஸ்ரேலிய தொழிலதிபருக்கு சொந்தமான கப்பலை கடந்த சனிக்கிழமையன்று இரான் சிறைபிடித்தது.
இந்த கப்பலில் பணியாற்றும் குழுவில் 17 இந்தியர்கள் அடங்கியுள்ள நிலையில், இவர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அதில், இரானின் வெளியுறத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு பேசியதாக, சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் மாட்டியுள்ள 17 இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றமான சூழலை வைவிட்டு, பேச்சுவார்த்தையின் மூலமான பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதையும் இரானிய அமைச்சரிடம் கூறியதாக தனது பதிவில் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி இரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக இந்த கப்பல் சிறைபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ இன்றையும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

