You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

'ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' - நயினார் நாகேந்திரன்

நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்தப் பகுதியில் காணலாம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை - தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு?

  2. அருணாச்சல பிரதேசத்தின் 30 இடங்களுக்கு புதிய பெயர்களை வைத்த சீனா - இந்தியா சொன்னது என்ன?

    அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர்களை வைத்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்குப் புதிய பெயர்களை வைக்க சீனா தொடர்ந்து அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அத்தகைய முயற்சியை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதுபோன்ற புதிய பெயர்களால் உண்மை மாறாது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும்,” என்றார்.

    முன்னர், இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சில இடங்களுக்கு சீனா புதிய பெயர்களை வைத்தது. அதன் நான்காவது பட்டியலில் 30 இடங்களின் புதிய பெயர்கள் இடம்பெற்றிருந்தன.அருணாச்சல பிரதேசம் மீதான தனது உரிமையை வலுப்படுத்தும் வகையில், சீனா இங்குள்ள இடங்களுக்கு புதிய பெயர்களை வெளியிட்டு வருகிறது. எனினும் இந்தியா அவற்றை நிராகரித்து வருகிறது.அருணாச்சல பிரதேசத்தித்கு சீனா ‘ஜாங்கன்’ என்று பெயரிட்டிடுக்கிறது. சீனாவின் அதிகாரபூர்வ செய்தித்தாளான 'குளோபல் டைம்ஸ்' ஒரு அறிக்கையில், சீனாவின் குடிமை விவகார அமைச்சகம் ஜாங்கனில் 30 இடங்களின் புதிய பெயர்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.2017-ஆம் ஆண்டு, அருணாச்சல பிரதேசத்தின் புதிய பெயர்களின் முதல் பட்டியலை சீனா வெளியிட்டது என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதில் ஆறு புதிய பெயர்கள் இருந்தன.அதைத்தொடர்ந்து, 2021-இல் 15 இடங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டப்பட்டன. அதன்பின் 2023-இல் 11 புதிய பெயர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோதியின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.ராணுவம் தொடர்பான சில திட்டங்களை மோதி அங்கு தொடங்கி வைத்தார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இந்தியா இதற்கு பதிலடி கொடுத்தது.

  3. மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டு பெண்களின் வாக்கு யாருக்கு? ஜெயலலிதாவின் வாக்கு வங்கி எந்தக் கட்சிக்குப் போகும்?

  4. ‘நடவடிக்கைக்கு தயாராக இருங்கள்’ - தவறான விளம்பரம் தொடர்பான வழக்கில் ‘பதஞ்சலி’ ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

    யோகா ஆசிரியரான ராம்தேவ் மற்றும் அவரது கூட்டாளி பால்கிருஷ்ணா ஆகியோர் நடத்தும் பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்கள் அளித்த விவகார தொடர்பான வழக்கில், அவர்கள் இருவரும் இன்று (செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 2) உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகினர்.அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவை பின்பற்றாததால், நடவடிக்கைக்குத் தயாராக இருக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.கடந்த மாதம் பதஞ்சலி நிறுவனம் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டிருந்தது. ஆனால் அந்நிறுவனம் கேட்ட மன்னிப்பு திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

    இவ்விவகாரத்தில் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா இருவரும் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக ராம்தேவின் வழக்கறிஞர் கூறினார்.ராம்தேவின் வழக்கறிஞர், “நாங்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம், நீதிமன்றம் என்ன சொன்னாலும் செய்ய தயாராக இருக்கிறோம்,” என்றார்.கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் பதஞ்சலியின் மருந்துகள் தொடர்பான அனைத்து தவறான விளம்பரங்களையும் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களில் இருந்து உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டது.இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசையும் உச்ச நீதிமன்றம் கண்டித்தது. இந்த விவகாரத்தை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாகக் கண்க்டித்தது.‘இது துரதிர்ஷ்டவசமானது’ என்று கூறிய நீதிமன்றம், ‘அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியது.

  5. போதைப்பொருள் வழக்கு விசாரணை - இயக்குநர் அமீர் நேரில் ஆஜர்

    போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் தற்போது கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணையில் உள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், வழக்கின் விசாரணைக்காக இயக்குநர் அமீரை நேரில் ஆஜராக டெல்லிக்கு வரும்படி சம்மன் அனுப்பியிருந்தனர். அமீருடன் மேலும் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

    ஜாபர் சாதிக் தயாரித்த 'இறைவன் மிகப்பெரியவன்' என்ற தமிழ் திரைப்படத்தை அமீர் இயக்கி இருந்தார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகி இருந்தது.

    மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அனுப்பியிருந்த சம்மனை அடுத்து, டெல்லியில் அந்த அமைப்பின் அலுவலகத்தில் இன்று காலை விசாரணைக்கு இயக்குநர் அமீர் ஆஜரானார்.

    முன்னதாக, சம்மன் விவகாரம் குறித்து ஆடியோ ஒன்றை அமீர் வெளியிட்டு இருந்தார். அந்த ஆடியோவில், "எந்த தயக்கமும் இன்றி எனது தரப்பில் உள்ள நியாயத்தையும், உண்மையையும் சொல்வேன்," என அமீர் கூறியிருந்தார்.

  6. 'பாரத் மாதா கி ஜெய்' முழக்கத்தை உருவாக்கியவர் ஓர் இஸ்லாமியரா? சுதந்திர போராட்டத்தில் என்ன நடந்தது?

  7. டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறப்போம்: அண்ணாமலை

    கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை இன்று (செவ்வாய், ஏப்ரல் 2) கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    இதன்போது அண்ணாமலை, அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக்கை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை குறித்துப் பேசினார். அப்போது “ஒரு டாஸ்மாக்கை எடுப்பதற்கு நாங்கள் அரசியலுக்கு வரவில்லை,எல்லா டாஸ்மாக்கையும் எடுக்க தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம்,” என்றார்.

    மேலும் அவர், “குடிப்பவர்களை குடிக்க வேண்டாம் என நம் கூற முடியாது. ஜனநாயக நாட்டில் குடிக்க உரிமை இல்லையா என்பார்கள். நானும் தான் குடிப்பேன்,” என்றார்.

    “டாஸ்மாக்கில் இருப்பவை ஸ்பிரிட். அவற்றை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறப்போம். குடி என்பது கிராமத்திற்குள் வந்து,பின்னர் வீட்டிற்குள் வந்து பெண்களுக்கு மன உளைச்சலாக உள்ளது. அதனால் தான் கள்ளுக்கடைகளை திறந்து டாஸ்மாக்கை மூடுவோம் என்கிறோம்,” எனத் தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், தடாகம் ஆனைக்கட்டி பகுதியின் செங்கல் சூளை விவகாரதில் தி.மு.க அரசு குழந்தையும் கிள்ளி விட்டு தொட்டிலும் ஆட்டி விடுகிறது என்று குற்றம் சாட்டினார். “இவர்களே பிரச்சனை ஆரம்பித்து வேறு ஒருவர் மீது பழி போடுகிறார்கள். மக்கள் வாழ்வாதாரமும் பாதிக்காமல் இயற்கையோடு ஒன்றி இருக்கும் பகுதி ஆனைகட்டி. இது போன்ற பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்றார்.

  8. டீக்கடையில் பணம் எண்ணிக்கொண்டிருந்த நபரிடமிருந்து ரூ.57,000 பறிமுதல் செய்த அதிகாரிகள்

    நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும்.

    இந்நிலையில், சிவகங்கைமாவட்டத்தில், டீக்கடையில் அமர்ந்து பணம் எண்ணிக்கொண்டிருந்த ஒரு நபரிடமிருந்து பறக்கும் படையினர் சுமார் ரூ.57,000-த்தை பறிமுதல் செய்திருக்கின்றனர்.

    சிவகங்கைமாவட்டம்திருப்பத்தூர்அருகேசெவ்வூர்கிராமத்தில்டீக்கடையில் அமர்ந்து பணத்தை எண்ணிக்கொண்டிருந்தராமன் (62) என்பவரிடம்இருந்து ரூ.56,950-யை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ராமன், கீரணிப்பட்டி மாரியம்மன்கோயில் திருவிழா முடிந்து வரவு செலவு கணக்குகளைதான் டீக்கடையில்அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்ததாக அதிகாரிகளிடம் கூறினார். மேலும் மக்களிடம் பணம் வசூல் செய்ததைப் பதிவு செய்தநோட்டுப் புத்தகத்தையும் அவர்களிடம்கொடுத்துள்ளார்.எனினும், வாக்காளர்களுக்கு கொடுக்க அவர் அந்தப் பணத்தை வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்அதை மாவட்டக் கருவூலத்தில்ஒப்படைத்தனர்.

    நீங்கள் ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்ற பணத்தை பறக்கும் படை பறிமுதல் செய்தால் அதை மீட்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள்.

  9. "எல்லை மீறக் கூடாது" - குர்பத்வந்த் சிங் வழக்கில் இந்தியா பற்றி அமெரிக்க தூதர் என்ன கூறினார்?

  10. 'அருணாச்சலப் பிரதேசத்தில் 30 இடங்களின் பெயரை சீனா மாற்றியுள்ளது' - மோதி மீது கார்கே விமர்சனம், 'அருணாச்சலப் பிரதேசத்தில் 30 இடங்களின் பெயரை சீனா மாற்றியுள்ளது' என கார்கே குற்றச்சாட்டு

    இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளதாக மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். சீனாவின் இந்த நடவடிக்கை ஆத்திரமூட்டும் செயல் என்றும் இச்செய்தியை தவிர்க்கவே, கச்சத்தீவு விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோதி கையிலெடுத்துள்ளதாகவும், அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ”டோக்லாம், கால்வான் சம்பவம் மற்றும் லடாக்கில் 2,000 சதுர கிலோமீட்டர் இந்திய பரப்பளவை ஆக்கிரமித்த பிறகும், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் பல அத்துமீறல்கள் நடந்த பிறகும் பிரதமர் மோதி, சீனா மீது எந்தத் தவறும் இல்லை என்றார்” என கார்கே அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

    மேலும், “56 இன்ச்’, ‘சிவந்த கண்கள்’-ஐ கொண்ட மோதி இவ்விவகாரத்தில் கண்களை கட்டிக்கொண்டார்” என கார்கே தெரிவித்துள்ளார்.

    ”திசைதிருப்ப பல முயற்சிகள் செய்தாலும், 20 இந்திய வீரர்கள் கால்வானில் உயிர் தியாகம் செய்த பிறகு, பிரதமர் மோதி சீனாவுக்கு ‘இலவச பாஸ்’ கொடுத்தார் என்ற உண்மையை மாற்ற முடியாது” என பதிவிட்டுள்ளார்.

  11. ஞானவாபி மசூதி அடித்தளத்தில் இந்துக்கள் வழிபாடு - உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?, ஞானவாபி மசூதி அடித்தளத்தில் இந்துக்கள் வழிபாடு - உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

    உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி வளாகத்தில் உள்ள வியாஸ் அடித்தளத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.தலைமை நீதிபதி டி.ஒய்.சந்த்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்கிய இந்தத் தீர்ப்பின் மூலம், ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் ஞானவாபி வளாகத்தின் அடித்தளத்தில் தொடங்கிய பூஜை தொடர்ந்து நடைபெறும்.மேலும் உச்சநீதிமன்றம் தனது அனுமதியின்றி இதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று கூறியுள்ளது.ஞானவாபி மசூதி கமிட்டியின் மனு மீது காசி விஸ்வநாதர் கோயிலின் அறங்காவலர்கள் மற்றும் பிறரிடம் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.இந்து தரப்புக்கு வழங்கப்படும் வழிபாட்டிற்கான அனுமதி அடித்தளத்திற்கு மட்டுமே என நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, இருசமூகத்தினரும் தொடர்ந்து வழிபடும் நிலை நீடிப்பதே பொருத்தமாக இருக்கும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

  12. காங்கிரசுக்கு ரூ.3,500 கோடி அபராதம் - உச்ச நீதிமன்றத்தில் வருமான வரித்துறை கூறியது என்ன?

    வருமான வரி கணக்கில் முரண்பாடு இருப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சி 3,500 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு கட்டாய நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று உச்ச நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஏ.ஜி. மாசி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பாக ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா இந்த உறுதியை அளித்தார்.

    இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என அவர் தெரிவித்தார்.

    "காங்கிரஸ் ஓர் அரசியல் கட்சி. தேர்தல் நடைபெற உள்ளதால் காங்கிரசுக்கு எதிராக கட்டாய நடவடிக்கை எடுக்க மாட்டோம்" என அவர் தெரிவித்தார்.

    காங்கிரஸ் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி இதனை வரவேற்று, கடந்த சில ஆண்டுகளாக அனுப்பப்பட்ட நோட்டீஸ்களில் மொத்தமாக ரூ.3,500 கோடி செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    வருமான வரித்துறை அளித்துள்ள இத்தகவலால், இந்த வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

  13. இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகு பதவி விலக நெருக்கடி - ஆயிரக்கணக்கானோர் திடீர் போராட்டம் ஏன்?

  14. கச்சத்தீவு விவகாரம்: பிரதமர் மோதிக்கு உதயநிதி எழுப்பிய கேள்விகள்

    கச்சத்தீவு விவகாரம் குறித்து திமுக மீது பிரதமர் மோதி எழுப்பிய விமர்சனத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, கச்சைத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோதி விமர்சித்திருந்தார்.

    இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி பிரதமர் மோதி சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்வினையாற்றியுள்ளார்.

    இந்நிலையில், பிரதமர் மோதி கருத்திற்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளங்களில் எதிர்வினையாற்றியுள்ளார்.

    ”மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை? தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர முடிகிற உங்களால், கஜா புயல், மிக்ஜாம் புயல்... என பேரிடர்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்ல ஒருமுறை கூட வராதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

    வேலைவாய்ப்பு, கருப்புப் பணம் ஒழிப்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக பல்வேறு கேள்விகளை உதயநிதி எழுப்பியுள்ளார்.

    ”அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்?” என்றும் அப்பதிவில் உதயநிதி தெரிவித்துள்ளார்.

  15. கச்சத்தீவு விவகாரம்: ‘திசைதிருப்பலில் ஈடுபடவேண்டாம்’ – மோதிக்கு ஸ்டாலின் பதில்

    கச்சத்தீவை ‘இலங்கைக்கு வழங்கியதாகக்’ கூறி காங்கிரஸ் மற்றும் திமுக-வை பிரதமர் நரேந்திர மோதி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட பாஜக தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார்.

    அதில், ‘பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்கள்’ என பாஜக-வினரை அவர் விமர்சித்துள்ளார்.

    மேலும், பிரதமர் நரேந்திர மோதியிடம் தமிழ்நாட்டு மக்கள் மூன்று கேள்விகள் கேட்பதாகவும் அவர் பதிவிட்டிருக்கிறார். “தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்? “இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

    “பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?” என்ற கேள்விகளைக் கேட்டு, “திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே,” என்று பதிவிட்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

  16. நரேந்திர மோதி போட்டியிட இருந்த தொகுதியை தனக்காக விட்டுக் கொடுத்ததாக ஓபிஎஸ் பேச்சு

    ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    பரப்புரையின் போது பேசிய அவர், "மோதி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோதி கடுமையாக பணியாற்றி வருகிறார். மோதி ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்." என்றார்.

    "அதிமுகவில் நான் தவறு செய்ததாக கூறினார்கள். என்ன தவறு செய்தேன் என கேட்டதற்கு இதுவரை அவர்களிடம் பதில் இல்லை. அதிமுகவில் இருந்து ஒதுக்கப்பட்டு நிராயுதபாணியாக இருந்த என்னை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்து நரேந்திர மோதி போட்டியிட இருந்த ராமநாதபுரம் மக்களவை தொகுதியை எனக்காக விட்டுக் கொடுத்து எனக்கு வாய்பளித்துள்ளார்." என்றார் அவர்.

    "தமிழகத்தில் பன்னீர் செல்வங்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. தேர்தலில் தான் விரும்பிய வாளி சின்னத்தையும், பலாப்பழ சின்னத்தையும் என்னிடம் இருந்து பிடுங்குவதற்காக பல முயற்சிகளை செய்து கடைசியாக முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் தனக்கு கிடைத்தது" என ஓபிஎஸ் தெரிவித்தார்.

  17. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்

    பிபிசி தமிழ் நேரலைக்கு நேயர்களை வரவேற்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான நிகழ்வுகள் உள்பட்ட முக்கியமான தகவல்களை இந்தப் பகுதியில் காணலாம்.