'மீண்டும் மோதி ஆட்சி வந்தால் சமூகநீதிக்கு சவக்குழி' - முதல்வர் மு.க.ஸ்டாலின்
விழுப்புரத்தில் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "இந்தியா ஆபத்தில் உள்ளது, இட ஒதுக்கீடு மற்றும் சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது" என்று பேசியுள்ளார்.
"மீண்டும் மோதி ஆட்சிக்கு வந்தால் சமூகநீதிக்கு சவக்குழி" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு செயலாளர்களில் 3% கூட ஓபிசி பிரிவினர் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பாஜகவிற்கு பாமக பல்லக்கு தூக்குகிறது என்றும் தாக்கிப் பேசியுள்ளார். இந்தியாவை பாதுகாக்க இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை உதவும் என்றும் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பானை சின்னத்தில் ரவிக்குமார், கடலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஷ்னுபிரசாத் ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.