You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' - நயினார் நாகேந்திரன்
நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்தப் பகுதியில் காணலாம்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
தங்கம் விலை உயரும் நேரத்தில் நகை வாங்குவது நல்லதா?
சூரிய கிரகணத்தை பின்தொடர தயாராகும் நாசா விமானங்கள் - 50,000 அடி உயரத்தில் என்ன செய்யும்?
கடலில் மிதக்கும் 'விண்மீன்கள்' - நீங்கள் இந்த அற்புத காட்சியை எங்கே, எப்போது பார்க்கலாம்?
ஹர்திக் தலைமையில் மும்பைக்கு முதல் வெற்றி - ரோகித், பும்ரா புதிய மைல்கல்லை எட்டி அசத்தல்
மகன் காதல் மணம் புரிந்ததால் தாயின் ஆடைகளை கிழித்து அவமானப்படுத்திய கும்பல் - எங்கே, என்ன நடந்தது?
நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் வீட்டில் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல், நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் வீட்டில் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் - பறக்கும் படை நடவடிக்கை
நெல்லை மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான நபர் ஒருவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 2 லட்சம் ரூபாய் ரொக்க பணம், வேஷ்டி, பரிசு பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல், நிறுவனங்கள் மற்றும் அவரது உதவியாளர்களின் வீடுகள் என பல இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான நண்பர் என கூறப்படும் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் மணி என்பவரது வீட்டிலும் பறக்கும் படை அதிகாரி பொன்ராஜ், மாநகர காவல் துறை துணை ஆணையர் கீதா, மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் வாசிவம் மற்றும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் 2 லட்சம் ரூபாய் ரொக்கம், 100 வேஷ்டிகள், 44 நைட்டிகள், 25 மதுபான பாட்டில்கள், 16 டின் பீர்கள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், “பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடிக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. என்னை குறி வைக்கிறார்கள் என்பது மட்டும் எனக்கு தெரிகிறது. எனக்கு பல நிறுவனங்கள் இருக்கிறது. ஆனால் பிடிபட்ட பணம் என்னுடையது அல்ல” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
கோவை: பிரதமர் மோதியின் உருவபொம்மையை எரிக்க முயன்ற வட மாநில விவசாயிகள் - ஏன்?, கோவையில் பிரதமர் மோதியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற வடமாநில விவசாயிகள் கைது
கோவையில் முகாமிட்டு இருந்த கிசான் மஸ்தூர் மோர்ச்சா விவசாயிகள் சங்க நிர்வாகிகள், இன்று மாலை பிரதமர் மோதி மற்றும் ஹரியாணா முதல்வரின் உருவ பொம்மைகளை எரிக்க முயன்றதால் கைது செய்யப்பட்டனர்.
கிசான் மஸ்தூர் மோர்ச்சா என்பது டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்பு. இந்த அமைப்பின் சார்பில் ஹரியாணா மாநிலத்தில் விவசாயிகள் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 7ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் அறிவித்து இருந்தது.அதன் ஒரு பகுதியாக, துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான விவசாயியின் அஸ்தியை எடுத்துக்கொண்டு நாடு முழுவதும் சுற்றி வரும் இந்த அமைப்பின் தலைவர் சர்வன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கோவையில் முகாமிட்டுள்ளனர்.
தலைவர்களின் உருவபொம்மையை எரிக்கும் அவர்களது திட்டம் குறித்து அறிந்த காவல்துறையினர் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்று அவர்களை கைது செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கிசான் மஸ்தூர் மோர்ச்சா சங்கத்தின் தலைவர் சர்வன் சிங் உள்ளிட்ட வடமாநில விவசாயிகள் சங்க தலைவர்கள் 10 பேரை கோவை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது பா.ஜ.கவிற்கு எதிராக விவசாயிகள் முழக்கம் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
சூரிய கிரகணம்: பகலிலும் எங்கெல்லாம் 4 நிமிடம் இருள் சூழும்? இந்தியாவில் தெரியுமா?
சதம் அடித்த கோலியை ரசிகர்கள் விமர்சிப்பது ஏன்? அஸ்வின் பெயரும் ட்ரெண்டாக என்ன காரணம்?
'நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' - நயினார் நாகேந்திரன்
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை இரவு (ஏப். 06) சென்னையிலிருந்து சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் நோக்கங்களுக்காக எடுத்துச் செல்லப்படுவதாக பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தாம்பரம் ரயில் நிலையத்தில் அந்த ரயிலை நிறுத்தி பறக்கும் படையினரும் போலீசாரும் சோதனை செய்தனர். அப்போது, அதில் பயணித்த மூன்று பேரின் பைகளில் சுமார் ரூ.4 கோடி இருந்துள்ளது.
அதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த மூன்று பேரில் ஒருவர் பாஜகவை சேர்ந்தவர் என்றும் அவர் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமானவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும், பாஜக வேட்பாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் அளித்தார்.
இந்நிலையில், அதுகுறித்து தனக்குத் தெரியவில்லை என்றும் தனக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "உள்நோக்கம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால், என்னை குறிவைத்துள்ளனர் என்பது மட்டும் தெரிகிறது. பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதால் திமுக அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்து வருகிறது," என்றார். தனக்கு மறைமுகமாக நெருக்கடி அளிப்பதால் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
'ஆளுநரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறோம்' - மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஏப். 07) புதுச்சேரியில் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய மு.க. ஸ்டாலின், "புதுச்சேரி நிர்வாகத்தைச் சீர்குலைத்தது பாஜக. துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி, புதுச்சேரி நிர்வாகத்தைச் சீர்குலைத்தார். சட்டத்தை நிலைநாட்ட காவல்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த அவரே, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டார்.
அப்படியொரு ஆளுநர் தமிழ்நாட்டிலும் இருக்கிறார். அவரிடம் நாங்கள் மாட்டிக்கொண்டு முழிக்கிறோம். அவரே தொடர்ந்து ஆளுநராக இருக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து சொல்கிறோம். அவர் இருப்பதால் திமுகவுக்கு சாதகமான பிரசாரம் இருக்கிறது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் உட்கார வைத்துவிட்டு, பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. பிரதமர் மோதி மதத்தின் பெயரால் பிரசாரம் செய்கிறார். சாதியின் பெயரால் பிரசாரம் செய்கிறார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலையை அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்ததுதான் பாஜக அரசு,” எனப் பேசினார்.
உலக சுகாதார தினம்: மன அழுத்தம், மனச்சோர்வை கண்டறிவது எப்படி? அறிகுறிகள் என்ன?
சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை விளாச விடாமல் கட்டிப் போட்ட பேட் கம்மின்சின் வியூகம் - என்ன செய்தார்?
ஃபேமிலி ஸ்டார் விமர்சனம்: விஜய் தேவரகொண்டா நடிப்பு குடும்ப ரசிகர்களை கவர்ந்ததா?
இந்தியாவுக்கு நன்றி சொன்ன மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் – எதற்காக?
அதிகரித்த பதற்றங்களுக்கு மத்தியில், 2024-25ஆம் ஆண்டில் அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதி ஒதுக்கீட்டை அதிகரித்தமைக்காக இந்தியாவுக்கு மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கைக்கு தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மாலத்தீவு அமைச்சர் மூசா ஜமீர் சமூக ஊடகங்களில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மாலத்தீவு அமைச்சர் மூசா ஜமீருக்கு பதிலளித்து, “வரவேற்கிறோம். இந்தியா தனது அண்டை நாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைகளில் உறுதியாக உள்ளது,” என்று குறிப்பிட்டார்.
இந்தியா அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையின் கீழ், இந்தியா தனது அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நெருங்கிய உறவை ஊக்குவிக்கிறது.
மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கான ஒதுக்கீடு 1981 முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவின் வளர்ந்து வரும் கட்டுமானத் தொழிலுக்கான அத்தியாவசிய பொருட்களின் ஒதுக்கீடு 25% அதிகரித்து தற்போது 1 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது.
முட்டை, உருளைக் கிழங்கு, வெங்காயம், சர்க்கரை, அரிசி, மாவு, பருப்பு ஆகியவற்றின் ஒதுக்கீடு ஐந்து சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு சர்க்கரை, அரிசி, வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா முழு தடை விதித்தபோதும் மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
‘கச்சத்தீவு மீட்பு, சிஏஏ வாபஸ்’ – மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை அதன் பொதுச் செயலாளர் வைகோ இன்று திருச்சியில் வெளியிட்டார். 24 முழக்கம் என்ற தலைப்பில், வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை வைகோ வாசித்துக் காட்டினார்.
ஜி.எஸ்.டி வரி நீக்கம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சிஏஏ வாபஸ், கச்சத்தீவு மீட்பு, தேசிய நூலாக திருக்குறள் அறிவிக்கப்படும், ஹைட்ரோ கார்பனுக்கு நிரந்தரத் த்டை, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட 74 வாக்குறுதிகள் மதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்!
விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று காலையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1973ல் திமுக கிளைச் செயலாளராகப் பணியாற்றிய புகழேந்தி, 1980- 86இல் திமுக மாவட்டப் பிரதிநிதியாக இருந்தார். அவர் ஒன்றியத் தலைவராக 1996இல் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியின் எதிர்பாராத மறைவுஅதிர்ச்சியையும் வேதனையையும் தருவதாக” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பதஞ்சலி: பாபா ராம்தேவ் சிறை செல்ல வாய்ப்பா? உச்சநீதிமன்றத்தில் என்ன நடந்தது?
ஈரோடு: பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது வழக்குப் பதிவு - தேர்தல் கண்காணிப்புக் குழுவை மிரட்டினாரா?
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே கெட்டிச்செவியூர் குறிச்சி பிரிவில் ஈரோடு – திருப்பூர் மாவட்ட எல்லையில், இன்று தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட முயன்றனர்.
அப்போது, முருகானந்தம் வந்த கார் ஓரமாக நிறுத்தாமல் சாலை நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியதோடு சோதனைக்கு ஒத்துழைக்க அவர் மறுத்துள்ளார்.
மேலும், கண்காணிப்பு அதிகாரி முருகேசனிடம் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் கேட்டதுடன், "வாழ்நாள் முழுவதும் வழக்கு போட்டு நீதிமன்றத்துக்கு அலைய விட்டுவிடுவேன். மரியாதையாகப் பேசுங்கள்," எனக் கூறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
முருகானந்தம் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரியை மிரட்டும் காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா தனது எக்ஸ் (முன்பு டிவிட்டர்) பக்கத்தில், "இந்த விவகாரம் கவனத்தில் கொள்ளப்பட்டு குன்னத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது," எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு சார்பில், திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி முருகானந்தம் மீது குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம்
இந்தச் சம்பவத்திற்கு தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனது வாகனம் தினந்தோறும் சோதிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் வாகனத்தின் அனைத்துப் பகுதிகளும் முழுமையாகச் சோதிக்கப்படுகிறது.
அதிகாரிகளின் பணி அதுவே என்று அதை மதித்து முழுமையாக ஒத்துழைப்பது நமது கடமை. அந்தக் கடமையிலிருந்து நான் தவறுவதில்லை. ஒன்றிய அரசின் கைப்பாவையாகச் செயல்படும் அதிகாரிகள் வேண்டுமென்றே செய்வதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
ஆனால், இப்படி எந்த அதிகாரியையும் மிரட்டுவது ஒருபோதும் சரி அல்ல! அதிகார போதையில் பாஜகவினர் அதிகாரிகளை மட்டுமல்ல பொதுவாக மக்களையே மதிப்பதில்லை. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிலைமை என்ன ஆகும்? அதிகாரிகளின் நிலைமை என்னவாகும்? சிந்தியுங்கள்!,” எனப் பதிவிட்டுள்ளார்.