மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாளில் மிகப்பெரிய முடிவு - பிரதமர் மோதி பேசியது என்ன?, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாளில் பெரிய முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் மோதி பேச்சு
மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்த பிறகு, முதல் 100 நாட்களில் பெரிய முடிவுகளை எடுப்போம் என்று பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற பாஜக அவர் உரையாற்றினார். எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், “ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறேன், அதனால்தான் சிலர் பொறுமை இழந்துள்ளனர். ஊழலை ஒழிப்போம் என்பது மோதியின் தாரக மந்திரம், ஆனால் அவர்கள் (எதிர்க்கட்சிகள்) ஊழல் செய்பவர்களைக் காப்பாற்றுங்கள் என்று கூறுகிறார்கள். இந்த மக்களவைத் தேர்தல் இரண்டு குழுக்கள் இடையேயான போட்டி. ஒரு பக்கம் ஊழலுக்கு எதிராக செயல்படும் ஒரு குழு, மறுபுறம் ஊழல்வாதிகளை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணும் குழு. இந்திய கூட்டணியை உருவாக்கி, மோதியை பயமுறுத்தலாம் என்று நினைக்கிறார்கள்." என்றார்.
“பாஜகவின் மூன்றாவது பதவிக்காலத்திற்கான ஆயத்தங்களைத் தொடங்கி விட்டோம். மீண்டும் ஆட்சியமைத்த பிறகு, முதல் 100 நாட்களில் பெரிய முடிவுகளை எடுக்கவுள்ளோம்” என்றும் அவர் கூறினார்.
இன்று காலை, கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது தொடர்பாக வெளியாகியிருக்கும் தரவு ஒன்றின் அடிப்படையிலான கட்டுரையை தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தள பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோதி, காங்கிரஸை நம்பகத்தன்மை அற்ற கட்சி என்று கடுமையாக விமர்சித்திருந்தார். “கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது தொடர்பான அந்தத் தரவுகள் என்னை திகைக்க வைக்கிறது.
காங்கிரஸ் கட்சி எப்படி கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது என்ற புதிய உண்மை அதில் வெளிப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு இந்தியரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் நம்பமுடியாது என்று மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தரவு அமைந்திருக்கிறது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களைப் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது” என்று அவர் கூறியிருந்தார்.