நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது.
திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று அந்தக் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
இது தொடர்பாக இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் தேர்தல் விதிகளின்படி இரண்டு தொகுதிகளுக்கு குறைவாகப் போட்டியிடுவதாலும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் இல்லாததாலும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலமாக மதிமுக தரப்பு வழக்கறிஞர்களுக்கு தெரிவித்துள்ளது.
கடந்த 23.3.2024 சனிக்கிழமை அன்று திருச்சியில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் அமைச்சர் நேரு, அன்பில் மகேஷ், துரை வைகோ முன்னிலையிலேயே மேடையில் பேசிய திமுக நிர்வாகி திமுக சின்னத்தில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதை அங்கிருந்த திமுக தொண்டர்களும் கூச்சலிட்டு வரவேற்பது போல் செய்தனர். இதனை தொடர்ந்து பேசிய துரை வைகோ ஒருகட்டத்தில் உடைந்து அழத் தொடங்கிவிட்டார்.
“உயிரே போனாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். அப்படி முடியாவிட்டால் விலகிக்கொண்டு திமுகவே நிற்கட்டும், நாங்கள் ஆதரவு தருகிறோம். ஆனால், ஒருபோதும் சின்னத்தை விடமாட்டோம்” துரை வைகோ பேசியிருந்தார்.
தற்போது சின்னம் கிடைக்காத நிலையில், வேறு சின்னத்திலோ, உதய சூரியன் சின்னத்திலோ போட்டியிட வேண்டிய நிலை மதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் முடிவு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வரும்போது மீண்டும் முறையிடுவோம் என மதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனால், வேறு சின்னத்தில் போட்டியிடும் திட்டம் உள்ளதாகவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் எனவும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.