டெல்லி பேரணி: அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி பிரதமர் நரேந்திர மோதி குறித்துப் பேசியது என்ன?

டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் பேரணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பேரணிக்கு ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான பேரணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி என்ன பேசினார்?

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாளில் மிகப்பெரிய முடிவு - பிரதமர் மோதி பேசியது என்ன?, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாளில் பெரிய முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் மோதி பேச்சு

    நாடாளுமன்ற தேர்தல், மோதி

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாளில் முக்கிய முடிவு - மோதி பேச்சு

    மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்த பிறகு, முதல் 100 நாட்களில் பெரிய முடிவுகளை எடுப்போம் என்று பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற பாஜக அவர் உரையாற்றினார். எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், “ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறேன், அதனால்தான் சிலர் பொறுமை இழந்துள்ளனர். ஊழலை ஒழிப்போம் என்பது மோதியின் தாரக மந்திரம், ஆனால் அவர்கள் (எதிர்க்கட்சிகள்) ஊழல் செய்பவர்களைக் காப்பாற்றுங்கள் என்று கூறுகிறார்கள். இந்த மக்களவைத் தேர்தல் இரண்டு குழுக்கள் இடையேயான போட்டி. ஒரு பக்கம் ஊழலுக்கு எதிராக செயல்படும் ஒரு குழு, மறுபுறம் ஊழல்வாதிகளை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணும் குழு. இந்திய கூட்டணியை உருவாக்கி, மோதியை பயமுறுத்தலாம் என்று நினைக்கிறார்கள்." என்றார்.

    “பாஜகவின் மூன்றாவது பதவிக்காலத்திற்கான ஆயத்தங்களைத் தொடங்கி விட்டோம். மீண்டும் ஆட்சியமைத்த பிறகு, முதல் 100 நாட்களில் பெரிய முடிவுகளை எடுக்கவுள்ளோம்” என்றும் அவர் கூறினார்.

    இன்று காலை, கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது தொடர்பாக வெளியாகியிருக்கும் தரவு ஒன்றின் அடிப்படையிலான கட்டுரையை தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தள பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோதி, காங்கிரஸை நம்பகத்தன்மை அற்ற கட்சி என்று கடுமையாக விமர்சித்திருந்தார். “கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது தொடர்பான அந்தத் தரவுகள் என்னை திகைக்க வைக்கிறது.

    காங்கிரஸ் கட்சி எப்படி கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது என்ற புதிய உண்மை அதில் வெளிப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு இந்தியரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் நம்பமுடியாது என்று மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தரவு அமைந்திருக்கிறது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களைப் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது” என்று அவர் கூறியிருந்தார்.

  2. டெல்லி பேரணி: அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி பிரதமர் நரேந்திர மோதி குறித்துப் பேசியது என்ன?

    டெல்லி பேரணி: அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி பிரதமர் நரேந்திர மோதி குறித்துப் பேசியது என்ன?

    பட மூலாதாரம், AAP

    டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் பேரணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பேரணிக்கு ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான பேரணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பேரணி நடத்தப்படுகிறது.

    இந்தப் பேரணியில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், “எனது கணவரை சிறையில் அடைத்த பிரதமர் நரேந்திர மோதி செய்தது சரியா? கேஜ்ரிவால் சிறையில் இருக்கிறார், அவர் பதவி விலக வேண்டும் என்று பாஜகவினர் கூறுகிறார்கள். அவர் ராஜினாமா செய்ய வேண்டுமா?”

    மேலும், உங்கள் கேஜ்ரிவால் சிங்கம், அவரை நீண்ட நாட்கள் சிறையில் அடைக்க முடியாது என்றார். அவரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராக இருந்து நாட்டிற்கு அளித்த ஆறு உத்தரவாதங்களையும் சுனிதா கேஜ்ரிவால் குறிப்பிட்டார்.

    “24 மணிநேர மின்சாரம், ஏழைகளுக்கு இலவச மின்சாரம், நல்ல பள்ளிகள், மொஹல்லா கிளினிக்குகள் ஆகியவை அதில் அடங்கும்.”

    இந்தப் பேரணியில், மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், சரத் பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், திமுக சார்பில் திருச்சி சிவா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த பேரணியில் சிவசேனா (யுபிடி), சமாஜ்வாதி கட்சி, என்சிபி (சரத் பவார்), திரிணாமுல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் திமுக தலைவர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

  3. கச்சத்தீவு பற்றி அண்ணாமலை ஆர்.டி.ஐ மூலம் பெற்ற தகவல் என்ன? நேரு பற்றி என்ன பேசினார்?

    கச்சத்தீவு பற்றி அண்ணாமலை ஆர்.டி.ஐ மூலம் பெற்ற தகவல் என்ன? நேருவை பற்றி என்ன பேசினார்?

    பட மூலாதாரம், @ANNAMALAI_K TWITTER

    கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதி பகுதிகளில் அண்ணாமலை இன்று பரப்புரையைத் தொடங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கச்சத்தீவை யார் தாரை வார்த்தார்கள் என்ன நடந்தது என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலைப் பெற்றுள்ளதாகச் சில ஆவணங்களை வெளியிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது அவர், “கச்சத்தீவைப் பற்றித் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். 1968இல் பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் இலங்கை பிரதமராக இருந்த செனாயக்கும் ரகசிய ஒப்பந்தம் போட்டனர்.

    அதைத் தொடர்ந்து 1974இல் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. எதற்காக கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்ற ஆவணங்களை ஆர்டிஐ மூலம் பெற்றுள்ளோம். இதைப் படித்தால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரத்தம் கொதிக்கும்,” என்று கூறினார்.

    மேலும், நேரு பிரதமராக இருந்தபோது ‘இந்தக் குட்டித் தீவுக்கு நான் எந்தவிதமான மரியாதையும் தரப் போவதில்லை. வேறு ஒரு நாட்டிற்குத் தரத் தயாராக இருக்கிறேன்’ என்று நேரு 10-05-1961 அன்று எழுதிய ஃபைல் நோட்டில் இருப்பதாகத் தெரிவித்தார் அண்ணாமலை.

    அதோடு, “முழுமையாக கச்சத்தீவு நம்மிடம்தான் இருக்க வேண்டும் எனப் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தும், இலங்கையில் அரசியல் சுழ்நிலை சரியில்லை என்பதால் இந்தப் பிரச்னையைத் தள்ளிப் போட்டுக்கொண்டே சென்றார்கள்.

    ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட கச்சத்தீவு பற்றிய தகவல்களின் முதல் பகுதி இன்று வெளியாகியுள்ளது. நாளை இதன் இரண்டாம் பகுதி வெளியாகும். அப்போது கலைஞர் கருணாநிதி கச்சத் தீவுக்குச் செய்த துரோகம் குறித்துப் பேசுவோம்,” என்று தெரிவித்தார் அண்ணாமலை.

  4. காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் அதிருப்தியில் இருக்கிறாரா? அறிக்கையில் கூறியது என்ன?

    காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் அதிருப்தியில் இருக்கிறாரா? அறிக்கையில் கூறியது என்ன?

    பட மூலாதாரம், Su.Thirunavukkarasar/X

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய திருச்சி தொகுதி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசருக்கு இந்த முறை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கவில்லை.

    இந்நிலையில், திருநாவுக்கரசர் இன்று காலையில் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில், “நான் நாடாளுமன்ர உறுப்பினராகத் தொடரக் கூடாதென, இந்தத் தேர்தலில் போட்டியிடக் கூடாதென வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவகளுக்கு எனது மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அந்த அறிக்கையில், “திருச்சியை இரண்டாவது தலைநகராக்கத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். திருச்சியை மையமாகக் கொண்டே எனது அரசியல் செயல்பாடுகள் தொடர்ந்து இருக்கும்.

    என் வாழ்நாளில் இல்லத்தில் நான் இருந்த நாட்களைக் காட்டிலும் மக்களோடு நான் இருந்த நாட்களே அதிகம். எனது மக்கள் பணி தொடரும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

    இத்தோடு, “நான் இந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாது என இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றும் திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்.

  5. அரவிந்த் கேஜ்ரிவால் கைதுக்கு எதிராக டெல்லியில் இந்தியா கூட்டணி இன்று பேரணி

    அரவிந்த் கேஜ்ரிவால் கைதுக்கு எதிராக டெல்லியில் இந்தியா கூட்டணி இன்று பேரணி

    பட மூலாதாரம், Getty Images

    பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், சமத்துவமின்மை, அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டது ஆகிய பிரச்னைகளுக்காக டெல்லி ராம்லீலா மைதானத்தில் ‘இந்தியா’ கூட்டணி இன்று (மார்ச் 31) பேரணி நடத்துகிறது.

    பேரணிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை தெரிவித்தார். டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் நடத்தும் முதல் பேரணி இது.

    இந்தப் பேரணியில் சிவசேனா(யுபிடி), சமாஜ்வாதி கட்சி, என்சிபி(சரத் பவார்), திரிணாமுல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, திமுக, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    அரவிந்த் கேஜ்ரிவால் கைதுக்கு எதிராக டெல்லியில் இந்தியா கூட்டணி இன்று பேரணி

    பட மூலாதாரம், Getty Images

    இது ஜனநாயகத்தை காப்பாற்றும் பேரணி என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார். “இது பணவீக்கம், வேலையின்மை, நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிரானது. இந்தப் பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்துக் கைது செய்வது குறித்தும் கேள்வி எழுப்பப்படும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

    பேரணிக்கு முன்னதாக, சனிக்கிழமையன்று, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோர் கேஜ்ரிவாலின் மனைவியைச் சந்தித்தனர்.

    இன்று நடைபெறும் பேரணியில் பங்கேற்பதாக உறுதியளித்த அவர், ஜார்கண்ட் போன்ற நிலை டெல்லியிலும் உருவாகியுள்ளதாகக் கூறினார்.

  6. ஆ.ராசா வாகனத்தை முறையாக சோதனை செய்யாத தேர்தல் அலுவலர் பணி நீக்கம்

    ஆ.ராசா வாகனத்தை முறையாக சோதனை செய்யாத தேர்தல் அலுவலர் பணி நீக்கம்

    பட மூலாதாரம், Getty Images

    கோத்தகிரி அருகே திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை முறையாகச் சோதனை செய்யாத தேர்தல் பறக்கும் படை அலுவலர் கீதா, இன்று தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மக்களவைத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை(25.03.2024), நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் 4வது முறையாக மீண்டும் போட்டியிடும் ஆ. ராசா மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட திமுக கழக செயலாளர் பா.முபாரக் உள்ளிட்டோர் உதகையிலிருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது கோத்தகிரி அருகே ராசாவின் வாகனம் சென்று கொண்டிருக்கும்போது, தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் வாகனத்தில் இருந்து இறங்கி, தேர்தல் அலுவலர்கள் சோதனை செய்ய அனுமதித்தனர்.

    ஆ.ராசா வாகனத்தை முறையாக சோதனை செய்யாத தேர்தல் அலுவலர் பணி நீக்கம்

    அப்போது இரண்டு பெட்டிகளை மட்டும் சோதனை செய்துவிட்டு மீதி சூட்கேஸ்களை சோதனை செய்யாமல் வாகனத்தில் எதுவும் இல்லை என, ஆ.ராசாவின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் அனுப்பி வைத்தனர்.

    தேர்தல் பறக்கும் படை அலுவலர் கீதா (குழந்தைகள் நலத் திட்ட அலுவலர்), ஆ.ராசாவின் வாகனத்தில் இருந்த சூட்கேஸ்களை முறையாக சோதனை செய்யவில்லை என மாற்றுக் கட்சிகள் குற்றம் சாட்டின.

    இதையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான அருணா தலைமையிலான குழுவினர் கீதாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் உரிய முறையில் ஆ.ராசாவின் வாகனத்தை சோதனை செய்யாதது உறுதிபடுத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 134இன் கீழ் (RP Act 1951 Section 134) தேர்தல் பறக்கும் படை அலுவலர் கீதாவை இன்று முதல் (30.03.2024) தற்காலிக பணியிடை நீக்கம் செய்வதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டார்.

  7. மதிமுக-வுக்கு தீப்பெட்டி சின்னம், விசிக-வுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

    மதிமுக-வுக்கு தீப்பெட்டி சின்னம், விசிக-வுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

    பட மூலாதாரம், Getty Images

    விடுதலை சிறுத்தைகள் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சின்னம் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். 24வது மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மதிமுக மற்றும் விசிக ஆகிய கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி திருச்சியில் போட்டியிடும் மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னமும், விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் விசிகவிற்கு பானை சின்னமும் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக இரு கட்சிகளுமே தங்களது வழக்கமான சின்னமான பம்பரம்(மதிமுக) மற்றும் பானை(விசிக) ஆகிய சின்னங்களையே ஒதுக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    இந்த வழக்கில் பதிலளித்த தேர்தல் ஆணையம், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பழைய சின்னத்தை ஒதுக்க முடியும் என்று கூறிவிட்டது. இந்நிலையில் இன்றோடு வேட்புமனுத் தாக்கலை திரும்பப் பெறுவதற்குக் கடைசி நாள் முடிவடைவதால் இன்னும் சின்னம் வழங்கப்படாத அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

    அதில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தையும், ஒரு தொகுதியில் போட்டியிடும் மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னத்தையும் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

  8. கோவையில் பாஜகவினரை வாக்கு சேகரிக்க விடாமல் கற்களை வீசிய இளைஞர் கைது, கோவையில் பாஜகவினரை வாக்கு சேகரிக்க விடாமல் கற்களை வீசிய இளைஞர் - என்ன நடந்தது?

    கோவை, பாஜக, கல் வீச்சு
    படக்குறிப்பு, கோவையில் வாக்கு சேகரிக்கச் சென்ற பாஜகவினர் மீது இளைஞர் கல் வீசியதால் காயமடைந்த நபர்

    கோவையில் வாக்கு சேகரிக்க சென்ற பாஜகவினர் மீது கற்களை வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கோவை மாநகரம், கண்ணப்பா நகர் அருகே உள்ள சண்முகா நகருக்கு பாஜக பிரமுகர் அர்ஜுனன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர், நேற்றிரவு வாக்கு சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது, கண்ணப்பா நகரைச் சேர்ந்த 18 வயது இளைஞர் குடிபோதையில் இருந்துள்ளார். ​​

    "எங்கள் பகுதிக்கு எதுக்கு, வாக்கு சேகரிக்க வருகிறீர்கள்" என்று கேட்டு, பாஜகவினர் மீது , அவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் லேசான காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. பிரபு என்பவர் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தங்களது பகுதிக்குள் பிரச்சாரத்திற்கு அனுமதிக்க மாட்டேன் என்று பாஜகவினரிடம் அந்த இளைஞர் கூறியுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நெளசாத் என்ற இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரணையில் அவர், பாஜகவினர் மீது கல் வீசியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

  9. அண்ணாமலை ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்தாரா? விசாரணைக்கு உத்தரவிட்ட தேர்தல் அதிகாரி

    அண்ணாமலை ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்தாரா? விசாரணைக்கு உத்தரவிட்ட தேர்தல் அதிகாரி

    பட மூலாதாரம், X

    நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திர்ன், பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் கோவை முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், பிரசாரத்திற்குச் சென்ற தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனக்கு ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுப்பது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தக் காணொளி வைரலனாதை தொடர்ந்து அதன் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேர்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான கிரந்திகுமார் தெரிவித்துள்ளார்.

    அண்ணாமலை ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்தாரா? விசாரணைக்கு உத்தரவிட்ட தேர்தல் அதிகாரி

    பட மூலாதாரம், X

    இந்த வீடியோ குறித்து விளக்கமளித்துள்ள பாஜக தரப்பு, இந்த வீடியோவுக்கும் தற்போதைய நாடாளுமன்ற தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

    “அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அவருக்கு ஒரு சகோதரி ஆரத்தி எடுத்தார். அதற்குப் பதில் மரியாதையாகக் கொடுக்கப்பட்ட பணத்தைக்கூட வைத்து இப்படி அரசியல் செய்ய முடியுமென சிலர் நினைக்கிறார்கள்.

    இந்தத் தவறான செய்தியைப் பரப்புவோரின் உள்நோக்கத்தைக் கண்டறிந்து தேர்தல் நடத்தும் அலுவலர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்,” என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  10. பாஜகவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்தது ஏன்? - மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

    பாஜகவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்தது ஏன்? - மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

    பட மூலாதாரம், DAILYTHANTHI

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணி மற்றும் கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து, தருமபுரியில் வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது, "சமூக நீதி பேசும் பாமக நிறுவனர் ராமதாஸ், அதற்கு எதிரான பாஜகவுடன் கைகோர்த்த மர்மம் என்ன?

    பாமக வலியுறுத்தும் ஒரு கொள்கைக்குக்கூட ஆதரவு தெரிவிக்காத, அதற்கு முற்றிலும் எதிரானதுதான் பாஜக. இது மூத்தத் தலைவரான ராமதாஸுக்கு தெரியாதா?" என்று கேள்வியெழுப்பினார்.

    மேலும், "இதைக் கண்டு பாமக தொண்டர்களும் வேதனையுடன் இருக்கின்றனர். மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தியபோது, நாட்டில் பாஜக எப்படி திட்டமிட்டு கலவரம் செய்தது. சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் ஆட்சியை பாஜக கலைத்தது.

    இப்போதும் பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை இல்லாமல் ஆக்குவதற்கு பாஜக எத்தனை வேலைகளைச் செய்தது? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாமக பாடுபடும் என ராமதாஸ் சொல்கிறார். ஆனால், பாஜக ஆட்சியில் ஏன் இதைச் செய்யவில்லை என்பதை அவர் கேட்டாரா?

    சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவோம் என அவருக்கு பிரதமர் மோதி உறுதி தெரிவித்தாரா? ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பைக்கூட வெளியிடாமல் முட்டுக்கட்டை போட்டதுதான் பாஜக அரசு," என்று பேசினார்.

  11. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து ஐ.நா சபை கருத்து – என்ன கூறியது?

    அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து ஐ.நா சபை கருத்து – என்ன கூறியது?

    பட மூலாதாரம், AND

    டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மனி மற்றும் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கைகளைத் தொடர்ந்து இப்போது ஐக்கிய நாடுகள் சபையும் கருத்து தெரிவித்துள்ளது.

    அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டனி குட்டரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் ஜாரிக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்குப் பதிலளித்த அவர், “தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில், மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் அரசியல், சிவில் உரிமைகள் மற்றும் அனைத்து மக்களின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் சுதந்திரமான, நியாயமான சூழலில் அனைவரும் வாக்களிக்க முடியும் என்று உலகம் நம்புகிறது,” என்று தெரிவித்தார்.

    டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை மார்ச் 21ஆம் தேதி கைது செய்தது.

    அரவிந்த் கேஜ்ரிவால் கைது தொடர்பாக ஐ,நா தெரிவித்துள்ள கருத்து திட்டமிடப்பட்டதைப் போல் உள்ளதாக இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளரும் துருக்கி, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கான தூதராகச் செயல்பட்டவருமான கன்வால் சிபல் விவரித்துள்ளார்.

    அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கேஜ்ரிவாலுக்கு கிடைக்கும் இந்த ஆதரவு ஏதாவது சொல்கிறதா? உறுப்பு நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஐ.நா சாசனம் தடை செய்கிறது. ஆனால், ஐ.நா பொதுச் செயலாளரின் அலுவலகமே அதை மீறுகிறது. ஐ.நா. அதன்மீதான அனைத்து நம்பகத்தன்மையையும் இழந்துவிட்டது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

  12. ஏன் பாஜகவை விமர்சிப்பதில்லை ? – எடப்பாடி விளக்கம்

    Edappadi Palaniswamy campaign

    பட மூலாதாரம், PTI

    தேர்தல் பரப்புரையின்போது அதிமுகவின் பொதுச் செயலாளர் பாஜகவையும், பிரதமர் மோதியையும் விமர்சிப்பதில்லையே என்று தொடர்ந்து திமுக குற்றம் சாட்டி வருகிறது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது, அதற்கான விளக்கத்தை அவர் வழங்கினார்.

    “ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கூட்டணியில் கடைசி வரை இருக்கிறோம். கடைசியில் வெளியே வந்து விடுகிறோம். வெளியே வந்த பிறகு என்ன பேச முடியும்? கூட்டணி தர்மத்தை மதிப்பவர்கள் அதிமுக. நாங்கள் வெளியே வந்த பிறகு தவறு செய்தால் கண்டிப்பாக கேட்போம். அதற்கு முன்பு பேசினால் அது தவறு. கூட்டணியில் இருந்துகொண்டே உள்ளடி வேலை செய்கிறார்கள் என்று அர்த்தம். எங்களுக்கு நம்பி கூட்டணி செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் கடைசி வரை நாங்கள் விசுவாசமாக இருப்போம்” என்று எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

  13. யாதவர் போட்ட கையெழுத்தே என்னை வேட்பாளராக்கியது- டி ஆர் பாலு

    TR Baalu in Sriperumbudur

    திமுகவின் பொருளாளர் டி ஆர் பாலு, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு அவர்,ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில், யாதவர் சமூக மக்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசினார்.

    அப்போது யாதவ் ஒருவர் போட்ட கையெழுத்தாலேயே தான் இன்று வேட்பாளராக இருப்பதாக கூறினார்.

    “எனது எல்லா வேட்பு மனுக்களிலும் கையெழுத்திட்ட ஒருவர் என்றால் யாதவ் குலத்தை சேர்ந்த தம்பி ராமானுஜம் தான் (கூட்டத்தில் இருந்த நபரை கை காட்டி பேசுகிறார் டி ஆர் பாலு). எப்படி எல்லா வேட்பு மனுக்களிலும் ஒருவரே கையெழுத்திட முடியும் என்று கேட்கலாம். அப்படி போட்டால் செல்லாதே என்று கேட்கலாம். ஆனால், அவர் போட்டதால் தான் அது செல்லுபடியாகியது. ஏனென்றால் அவர் நோட்டரி பப்ளிக். இன்று உங்கள் முன்பு வேட்பாளராக நிற்பதற்கு அந்த கையெழுத்து தான் காரணம். எனவே யாதவ் குலத்துக்கும் எனக்கு நெருங்கிய சம்பந்தம் உள்ளது” என்று பேசினார்.

  14. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை யார் பாதுகாக்கிறார்கள் என்பதே முக்கியம் – கனிமொழி

    Kanimozhi in coimbatore

    திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்தார்.

    அப்போது பேசிய அவர், “யாருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது இல்லை என்பது முக்கியமில்லை. கடவுள் நம்பிக்கை இருப்பவர்களை யார் பாதுகாக்கிறார்கள் என்பதை முக்கியம்” என்றார்.

    கோவை தொகுதியில் திமுகவை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை போட்டியிடுகிறார். “சொந்த தொகுதியில் நின்றால் விரட்டி விட்டுவிடுவார்கள் என்று புதிய தொகுதியில் போட்டியிடுகிறார் அண்ணாமலை.

    வானதியின் ஆதரவில் வெற்றி பெற்று விடலாம் என கணக்கு போட்டு களமிறங்குகின்றார். ஆனால், கணக்கு தப்பா போகி கோயம்புத்தூரில் மாட்டிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. திமுக வெற்றி அசைக்க முடியாத உண்மை. அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு போட்டியிடுகின்றார்” என்று கனிமொழி பேசினார்.

    மேலும், “இந்த தொகுதியில் நாம் தெளிவாக ஓட்டு போட வேண்டும்.

    தவறாக சென்றால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. ” என்றும் வாக்காளர்களை எச்சரித்தார்.

    “தவறான விஷயங்களை, பொய்களை பேட்டி மூலம் அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை. மருதமலையில் கரண்ட் தரவில்லை என்று சொன்னார் , ஆனால் அதற்கு முன்னதாகவே திமுக கரண்ட் தந்து விட்டது. கோட்டாவில் நல்ல புத்திசாலிகள், அறிவாளிகள் படித்திருக்கின்றார்கள்.

    தலைவர் கலைஞர் தந்த கோட்டாவில் தான் நீங்கள் படித்து இருக்கின்றீர்கள். இந்த உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள்” என்றார் .

    “பாஜகவின் ஆட்சியில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. பா.ஜ.க.வின் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபின் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள், பாலியல் கொடுமைகள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.”என்றார்.

    “திமுக அதிமுக இடையே தான் போட்டி. பிஜேபி பாவம் நானும் இருக்கேன் நானும் இருக்கேன் என சொல்லிக் கொண்டிருக்கிறது. இதுவரை எடப்பாடி பழனிச்சாமி ஒரு முறையாவது பிரதமரை எதிர்த்து பேசியிருக்கின்றாரா?சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகம் இருக்கக்கூடிய பகுதி இந்த கோயம்புத்தூர்; ஆனால், GST வந்தப்பிறகு கிட்டத்தட்ட 50,000 தொழிற்சாலைகளை மூடிய பெருமை எடப்பாடி பழனிசாமிக்கும், மோடிக்கும் உண்டு” என்றார்.

  15. எங்கள் கட்சி சின்னத்தை 'ஒலிவாங்கி' என்று தமிழில் சொல்ல முடியவில்லை' - பரப்புரையில் வருந்திய சீமான்

    சீமான்

    பட மூலாதாரம், Naam Thamizhar Katchi

    நாடாளுமன்ற தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுபயணம் செய்து பரப்புரை செய்து வருகிறார்.

    அந்த கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க மறுத்தது. பின்னர் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கு பொது சின்னமாக மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

    கன்னியாகுமரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் மரிய ஜெனிபரை ஆதரித்து சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

    தெற்காசிய முழுவதும் பரவி வாழ்ந்த தமிழர்கள் மத்தியில், மொழி மீது வைத்திருக்கும் பற்று குறைந்ததன் விளைவாக தாய் மொழியின் அடையாளத்தை இழந்து வருகிறோம் என சீமான் கூறினார்.

    "நாம் இப்போது 90 விழுக்காட்டிற்கு மேலாக ஆங்கிலம் கலந்து பேசி வருகிறோம். இதனால் என் கையில் இருக்கும் சின்னத்தை 'ஒலிவாங்கி' என்று சொன்னால் பெரும்பாலான நபர்களுக்கு புரியாது என்பதால் 'மைக்' என்று ஆங்கிலத்தில் சொல்ல வேண்டிய நிலை இருக்கிறது," என்று தனது பரப்புரையின் போது சீமான் தெரிவித்தார்.

  16. புகைப்படத்தைக் காட்டி பேசுவது பற்றி விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    பட மூலாதாரம், Getty Images

    மதுரை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தார்.

    அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    எடப்பாடி பழனிசாமி, தனது பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்களைக் காட்டுவது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, பெரியவர்களிடம் ஆசிவாங்குவது ஒன்றும் தப்பில்லை என்று அதற்கு பதில் அளித்தார்.

    "பெரியவங்க கிட்ட ஆசி வாங்குவது தப்பா, நான் ஒன்றும் மூன்றாவது நபரிடம் ஆசி எதுவும் வாங்கவில்லையே. திமுக தான் ஒருபக்கம் வீரவசனம் பேசுகிறது. மறுபக்கம் பிரதமர் வரும்போது கருப்பு குடை காட்டினால் பிரச்னை என்று வெள்ளைக் குடை காட்டுகிறார்கள். திட்டங்கள் தொடங்கி வைக்க ஓடோடி சென்று கலந்து கொள்கிறார்கள். இப்படித்தான் திமுக இரட்டை வேடம் போடுகிறது."

  17. அண்ணாமலையின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய திமுக, அதிமுக வலியுறுத்துவது ஏன்? என்ன நடந்தது?

    அண்ணாமலையின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய திமுக, அதிமுக வலியுறுத்துவது ஏன்? என்ன நடந்தது?

    பட மூலாதாரம், Annamalai/X

    நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று வரை தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று வேட்புமனு மறுபரிசீலனை செய்யப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார், மற்றும் அதிகாரிகள் தலைமையில்வேட்பாளர்கள், வழக்கறிஞர்கள் முன்னிலையில், இந்தப் பரிசீலனை நடைபெற்றது.

    இதில் அண்ணாமலை தரப்பில் இரண்டு வேட்புமனுக்கள் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒரு வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றொரு வேட்பு மனுவில் பிரமாண பத்திரத்தில் அண்ணாமலையின் ஆவணங்கள் முறையாகத் தாக்கல் செய்யப்படவில்லை எனவும், நம்பர்: 26 விண்ணப்பத்தில் வேட்பாளரின் குற்றப் பின்னணி வரிசைப்படுத்தப்படவில்லை எனவும் வேட்பாளரின் வாக்கு செலுத்தும் இடமானது முறையாகக் குறிப்பிடப்படவில்லை எனவும் பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளைச் சார்ந்த வழக்கறிஞர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியான கிராந்தி குமார் பாடி முன்னிலையில் தேர்தல் ஆணையத்தின் கையேடு புத்தகத்தை மேற்கோள் காட்டிப் புகார் தெரிவித்தனர். அண்ணாமலையின் வேட்பு மனுவை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனால் அறையில் சலசலப்பு ஏற்பட்டது.

    அதைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளைப் பிழைகளாக ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்து, அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.

    அண்ணாமலையின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய திமுக, அதிமுக வலியுறுத்துவது ஏன்? என்ன நடந்தது?

    இதுகுறித்துப் பேசிய அதிமுக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் , “பாஜக வேட்பாளர் அண்ணாமலை (வரிசை அண்: 17, 21)2 வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் (17) வேட்புமனுவில் பகுதி 3இல் கையெழுதிவிடவில்லை அதனால் நிராகரிக்கப்பட்டது.

    அஃபிடவிட் சொந்த பார்மெட்டில் தயாரித்துப் போட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் விதியில் தேர்தல் ஆணையத்தில் பரிந்துரைத்த வடிவத்தில் அஃபிடவிட் இல்லை என்றால் அதை நிராகரிக்கலாம் எனக் கூறியுள்ளது. இரண்டாது வேட்புமனு பகுதி 5ல், குற்ற வழக்குகள் குறித்த அட்டவணையில் தேர்தல் ஆணைய வழிமுறைப்படி அஃபிடவிட் போடவில்லை.

    தேர்தல் ஆணையம் பாஜகவின் கைக்கூலி என்பதால் சொந்தமாக வடிவமைத்துப் போட்டுள்ளனர். அதே நேரத்தில் சுயேச்சை வேட்பாளர்களின் சிறு சிறு தவறுகளுக்கும்கூட படிவம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்கூட வேட்புமனுவை தேர்தல் அலுவலர் ஏற்றுக்கொண்டதாகக் கூறிவிட்டார்.

    கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக, மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோது 5 நபர்களை தவிர யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனால்நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அண்ணாமலையுடன் சுமார் 10 பேர் இருந்தனர். தேர்தல் ஆணையம் பாஜக, அண்ணாமலைக்கு ஒரு சட்டம், அதிமுகவிற்கு ஒரு சட்டம் வைத்துள்ளதா? திமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அவர்கள் மீது சந்தேகம் உள்ளது. வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் நாங்கள் நீதிமன்றம் செல்லப் போகிறோம்.

    தேர்தல் விதிமீறல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம், மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கவுள்ளோம். கோவை மக்கள் அண்ணாமலையைப் புறக்கணிக்க வேண்டும்,” என்றார்.

  18. அரவிந்த் கேஜ்ரிவாலின் காவலை நீட்டிக்கக் கோரிய அமலாக்கத்துறை – நீதிமன்ற விசாரணையில் என்ன நடந்தது?

    அரவிந்த் கேஜ்ரிவாலின் காவலை நீட்டிக்கக் கோரிய அமலாக்கத்துறை – நீதிமன்ற விசாரணையில் என்ன நடந்தது?

    பட மூலாதாரம், YEARS

    டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் காவலை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் ஏப்ரல் 1ஆம் தேதி வரை காவலில் இருப்பார்.

    அமலாக்கத்துறை முதல்வர் கேஜ்ரிவாலை கைது செய்து ஒரு வாரத்திற்குப் பிறகு ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

    பிபிசி சட்ட விவகார நிருபர் உமாங் போத்தார் கூறுகையில், கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், டெல்லி அரசின் அமைச்சர் அதிஷி, சௌரப் பரத்வாஜ் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் நீதிமன்றத்தில் இருந்தனர்.

    கேஜ்ரிவாலின் காவலை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்குமாறு அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டது. இதன்போது, நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவதை எதிர்க்கவில்லை என்றும் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகல் தொடர்பான முழு விசாரணைக்கும் தான் தயாராக இருப்பதாகவும் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    அரவிந்த் கேஜ்ரிவாலின் காவலை நீட்டிக்கக் கோரிய அமலாக்கத்துறை – நீதிமன்ற விசாரணையில் என்ன நடந்தது?

    பட மூலாதாரம், Getty Images

    “அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகுதான் உண்மையான ஊழல் நடந்தது. ஆம் ஆத்மி கட்சி ஊழல் நிறைந்தது என்ற சூழலை உருவாக்குவது, ஆம் ஆத்மி கட்சியை நசுக்குவதே இதன் நோக்கம்,” என்று அவர் கூறினார்.

    தம்மைக் கைது செய்ததன் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியை ஒடுக்குவதே அமலாக்கத்துறையின் நோக்கம் என்று அவர் குற்றம் சாட்டினார்.

    நீதிமன்றத்தில் அவர் கூறுகையில், “ரூ.100 கோடி ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், பணத் தடம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறினார்.”

    கேஜ்ரிவால், “இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. முதல் சிபிஐ வழக்கு ஆகஸ்ட் 17,2022 அன்று பதிவு செய்யப்பட்டது. அமலாக்கத்துறி வழக்கு ஆகஸ்ட் 22 அன்று பதிவு செய்யப்பட்டது. எந்த நீதிமன்றமும் என்னைக் குற்றவாளி என்று அறிவிக்கவில்லை. எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை,” என்று கூறினார். சிபிஐ 31,000 பக்கங்களையும், அமலாக்கத்துறை 25,000 பக்கங்களையும் தாக்கல் செய்துள்ளது.

    அரவிந்த் கேஜ்ரிவாலின் காவலை நீட்டிக்கக் கோரிய அமலாக்கத்துறை – நீதிமன்ற விசாரணையில் என்ன நடந்தது?

    பட மூலாதாரம், YEARS

    குற்றம் சாட்டப்பட்ட 4 பேரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்கள் சாட்சிகளாக மாறி மன்னிக்கப்பட்டனர். அதேநேரத்தில் எந்த முதலமைச்சரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏஎஸ்ஜி எஸ்வி ராஜூ, அரவிந்த் கேஜ்ரிவாலின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் ஆனால் அவர் தெளிவற்ற பதில்களை அளித்து வருவதாகவும் விசாரணையின்போது அமலாக்கத்துறைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    காவலின்போது கேஜ்ரிவால் தனது கடவுச்சொல்லை வெளியிடவில்லை என்றும் இதன் காரணமாக அவரது டிஜிட்டல் தரவுகளை அணுகப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

  19. ராமநாதபுரத்தில் ஓ பி எஸ் -ஐ எதிர்த்து போட்டியிடும் நான்கு ஒபிஎஸ்!

    ராமநாதபுரத்தில் ஓ பன்னீர்செல்வம் போட்டி

    ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளான இன்று அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டது.

    தேர்தல் அலுவலரான விஷ்ணு சந்திரனிடம் 42வேட்பாளர்கள் 56வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

    வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை இறுதி செய்யும் பணி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆட்சியரகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரான விஷ்ணு சந்திரன், தேர்தல் பொது பார்வையாளர் பண்டாரா யாதவ்தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மனு பரிசீலிக்கப்பட்டு அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டது. அதனை தொடர்ந்து திமுக கூட்டணி வேட்பாளரான இந்திய முஸ்லிம்களின் கட்சியைச் சேர்ந்த நவாஸ் கனி அவரை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    இது மட்டுமல்லாமல், பன்னீர்செல்வம் என்ற பெயரில் சுயேச்சையாக போட்டியிட ஐந்து பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் அனைவரின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    எனவே தற்போது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை எதிர்த்து பன்னீர்செல்வம் பெயர் கொண்ட ஐந்து பேர் ராமநாதபுரத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதில் நான்கு பேர் ஒபிஎஸ் என்ற பெயர் கொண்டவர்கள்.

    யார் அந்த ஒபிஎஸ்-கள்?

    • ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூர் பகுதியை சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம்.
    • உசிலம்பட்டி மேக்கிழார்பட்டியைசேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம்.
    • திருமங்கலம் வாகைகுளம் சேர்ந்த ஒச்ச தேவர் மகன் பன்னீர்செல்வம்.
    • சோலைஅழகுபுரம் பகுதியைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வம்.
    • மதுரை கங்கை கொண்டான் பகுதியை சேர்ந்த மலையாண்டி மகன் பன்னீர்செல்வம்.
  20. 'விஜய்யுடன் இணைந்து பணியாற்ற தயார்' – ஓ.பி.ரவீந்திரநாத்

    விஜய்யுடன் பணியாற்ற விருப்பம் தெரிவிக்கும் ஓ பி ரவீந்திரநாத்

    தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ பி ரவீந்திரநாத் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய்யுடன் சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

    தேனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜனநாயக நாட்டில் அனைவரும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய் பல்வேறு நலத்திட்டங்களை, உதவிகளை செய்து வருகிறார். அடுத்த கட்ட முயற்சியாக அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இதை ஆசை என்று சொல்ல முடியாது. லட்சியம் என்று கூறலாம். அந்த பாதையில் அவர் பயணித்து தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல பாதையை வகுத்து தந்தால் அவரோடு நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறோம்” என்றார்.

    இந்த செய்தியாளர் சந்திப்பில் தேனி தொகுதியில் அவருக்கு இடம் கிடைக்காதது குறித்து கேட்ட போது, “டிடிவி தினகரன் தேனி மாவட்டத்தின் செல்லப்பிள்ளை என்று தற்போது திமுக வேட்பாளராக இருக்கும் தங்க தமிழ்செல்வன் கடந்த காலங்களில் கூறியுள்ளார். தேனி மக்களுக்கு மிகவும் அறிமுகமானவர் அவர். நான் வேறு, அவர் வேறு என்று பிரித்து பார்க்க வேண்டாம்” என்றார்.