காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
75 வயதான சோனியா காந்திக்கு ஜூன் 2ஆம் தேதி கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்ததால் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது
வணக்கம்.
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து நேரலைப் பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
இது வரையிலான இன்றை முக்கிய நிகழ்வுகள்.
- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் ஜூன் 21ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு இந்திய அமலாக்கத்துறை அழைப்பு விடுத்துள்ளது. அவரது தாயார் சோனியா காந்தி ஜூன் 23ஆம் தேதி விசாரணைக்கு வருமாறும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
- பஞ்சாப் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இரண்டு சந்தேக நபர்களை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இத்துடன் இந்த வழக்கில் டெல்லி, பஞ்சாப், புணே காவல்துறையினர் மொத்தம் 10 பேரை கைது செய்துள்ளனர்.
- "தலைமைப்பண்பு, அணி செயல்பாடு போன்ற திறன்கள், அக்னிவீரர்களை சந்தையிலுள்ள தொழில்துறைகளின் தேவைக்கேற்ப தயார் நிலையில் இருக்க வைக்கிறது." என்று ஆனந்த் மஹிந்த்ரா தெரிவித்துள்ளார்.
- அக்னிபத் திட்டத்தையும் ராகுல் காந்தியை விசாரணை என்ற பெயரில் அழைத்து துன்புறுத்துவதாகவும் கூறி காங்கிரஸ் கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- தமிழ்நாடு அரசின் முடிவு மற்றும் மக்கள் எதிர்ப்பு காரணமாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
- அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ், இபிஎஸ் இன்றும் தனித்தனியாக ஆலோசனை. அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- சென்னையில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் 31 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டன.
- சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து இந்து சமய அறநிலையத் துறையிடம் பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் மனு அளித்து வருகின்றனர். கோயிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள். நன்றி.
அக்னிபத்: திட்டம் பற்றி எழும் கேள்விகளும் அரசு தரும் விளக்கமும்
சிறுவாணி ஒப்பந்தம்: தமிழ்நாடு - கேரளா இடையே என்ன சிக்கல்?
ராகுல் காந்தி மீண்டும் ஜூன் 21இல் விசாரணைக்கு வர அமலாக்கத்துறை அழைப்பு

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ராகுல் காந்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் இன்று நான்காவது நாளாக அமலாக்க இயக்குநரகம் (ED) விசாரணை நடத்திய நிலையில், ஜூன் 21ஆம் தேதியும் அவர் விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
ஹெரால்டு நாளிதழ் தொடர்புடைய பணப்பரிவர்த்தனை வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை ஏற்கெனவே அழைப்பாணை அனுப்பியிருந்தது.
இதில் ராகுல் காந்தியிடம் 4 நாட்களில் சுமார் 40 மணி நேரத்துக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம், திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை ராகுல் காந்தியிடம் 30 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இன்று மீண்டும் விசாரணை தொடங்கும் முன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமது தாயார் சோனியா காந்தியை சந்தித்து விட்டு வர அனுமதிக்கப்பட்டார்.
சோனியா காந்தி, கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக கடந்த வாரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அவர் இன்று மாலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் ஜூன் 23ஆம் தேதி விசாரணைக்கு வருமாறஉ அமலாக்கத்துறையால் அழைக்கப்பட்டுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியின் பங்கு குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. காங்கிரஸின் ஆதரவு நாளிதழான நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை நடத்தி வந்த ஏஜேஎல் (அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்) நிறுவனத்தை யங் இந்தியன் கையகப்படுத்தியது. இந்தப் பணப் பரிவர்த்தனையில் சில மோசடியாக நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
சித்து மூசேவாலா கொலை வழக்கில் சந்தேக நபர்கள் கைது - புலனாய்வில் அதிர்ச்சித் தகவல்கள்
அசாம் பெருவெள்ளத்தில் 11 பேர் பலி - நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அசாம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அசாம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
அசாமில் வெள்ள நிலைமை மோசமாக உள்ளது. இதன் காரணமாக 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 43 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஐ கடந்துல்ளது. இதில் இரண்டு போலீசாரும் அடங்குவர்.
நாகோன் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் பொறுப்பாளர், காணாமல் போனவர்களை தேடிச் சென்றபோது அவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில், மாநிலத்தில் நிலவும் மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை திங்கள்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி நிலைமையை கேட்டறிந்தார்.
இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலை மூட்டைகள் பறிமுதல்

படக்குறிப்பு, காவல்துறையினர் சேகரித்த பீடி இலை மூட்டைகள் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சமீப காலமாக மஞ்சள், பீடி இலை, களைக்கொல்லி மருந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக வரும் தகவல்களையடுத்து, தமிழ்நாடு காவல்துறையின் க்யூ பிரிவு போலீசார், கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி தருவைகுளம் அருகே உள்ள கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் விஜயஅனிதா தலைமையில், போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கடற்கரையில் இருந்த ஒரு படகு வேகமாக கடலுக்குள் புறப்பட்டு சென்றது. இதைத் தொடர்ந்து மீனவர்களின் உதவியுடன் மற்றொரு படகில், போலீசாரும் படகை விரட்டி சென்றனர்.
அப்போது அந்த படகில் இருந்தவர்கள், மறைத்து வைத்து இருந்த மூட்டைகளை தூக்கி கடலில் வீசி விட்டு, அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்று விட்டனர். கடலில் மிதந்து 38 மூட்டைகளை போலீசார் சேகரித்தனர்.
அந்த மூட்டைகளில், மொத்தம் 1,700 கிலோ பீடி இலைகள் இருந்தன. இதன் இலங்கை மதிப்பு சுமார் ரூ.17 லட்சம் என்று கூறப்படுகிறது.
சிதம்பரம் கோயில் விவகாரம்: அறநிலையத்துறையிடம் பொதுமக்கள் மனு

சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து இந்து சமய அறநிலையத் துறையிடம் பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் மனு அளித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் புகார் அளித்தனர். இதையடுத்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை நியமித்தது.
இந்த குழு கடந்த 7, 8ஆ தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் விசாரணைக்காக சென்றது. இரண்டு நாட்களிலும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள பொது தீட்சிதர்கள் ஆய்வுக்கு ஒத்துழைக்காமல், எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பித்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர். சிதம்பரம் கோயில் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்படப்பட்டது.
இதையடுத்து கடலூர் புதுப்பாளையம் பகுதி உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் இன்றும் நாளையும் கோயில் சம்மந்தமான மனுக்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, காலையில் இருந்து பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் தங்களுடைய மனுவை வழங்கி வருகின்றனர். இதில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அரசின் செயல் அலுவலரை நியமிக்க வேண்டும்.
கோயிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்றும் மனுக்கள் அளித்துள்ளனர்.மேலும், பொதுமக்கள் தங்கள் மனுவை இணையதளம் மூலம் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
வந்துகொண்டிருக்கும் செய்தி, சோனியா காந்தி டிஸ்சார்ஜ் ஆனார் - காங்கிரஸ்

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்புக்குப் பிந்தைய சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் ஊடகப்பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹெரால்டு நாளிதழ் பணப்பரிவர்த்தனை தொடர்புடைய வழக்கில் அவர் இந்திய அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையை எதிர்கொள்ளவிருந்தார்.
அந்த வழக்கில் அவரை ஜூன் 23ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது.
அவருடன் அவரது மகனும் காங்கிரஸ் முன்னாள் தலைருமான ராகுல் காந்தியை கடந்த வாரம் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை அழைப்பானை அனுப்பியிருந்தது. அதன் பேரில் இரு தினங்கள் விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்தி, மூன்றாம் நாள் விசாரணையின்போது தமது தாய்க்கு உடல் நலமில்லாததால் அவருடன் இருக்க விரும்புவதாகவும் ஜூன் 20ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாகவும் கூறி அனுமதி பெற்றார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜரானார். அவரது தாயார் ஜூன் 23ஆம் தேதி விசாரணைக்கு செல்வாரா அல்லது கூடுதல் அவகாசம் கேட்பாரா என்பது குறித்து அவரது தரப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்குமா? தீவிரமாகிறது ஓபிஎஸ், இபிஎஸ் 'தலைமை சர்ச்சை'
தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற தலைமைக் காவலர் மகள்

பட மூலாதாரம், ㅤ
படக்குறிப்பு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவி துர்காவை பாராட்டும் பள்ளி ஆசிரியர்கள் தமிழ்மொழிப் பாடம் எளிமையாக இருப்பதாக பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி துர்கா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் துர்கா என்ற மாணவி 100 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.
முதல் மதிப்பெண் பெறுவதற்கு ஆசிரியர்கள் குடும்பத்தினர் உடன் படித்த நண்பர்கள் அனைவரும் ஊக்கப்படுத்தியதாக தெரிவித்தார். இந்த மாணவியின் தந்தை ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
அக்னிபத் திட்டம் என்றால் என்ன? இளைஞர்கள் போராடுவது ஏன்?
அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ், இபிஎஸ் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

படக்குறிப்பு, ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக பிரமுகர் பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அவரது மனுவில், 'கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உட்கட்சி தேர்தலில் அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட போதிய அவகாசம் வழங்கவில்லை.
ஒருங்கிணைபாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.' என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தாமோதரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அதிமுக, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமைப்பு செயலாளர் பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இது குறித்து வரும் 22ம் தேதி பதில் அளிக்க வேண்டும். என்று உத்தரவிட்டு, வழக்கை 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
பிரான்சில் இடதுசாரிகள், தீவிர வலதுசாரிகள் முன்னிலை: மக்ரோங் கட்சி பெரும்பான்மை இழந்தது
நம்பிக்'கை'யால் பிளஸ் 2 தேர்வில் வென்ற மாற்றுத்திறனாளி மாணவி

படக்குறிப்பு, மாணவி லட்சுமி ஆதரவு இல்லத்தில் வளர்ந்து இரண்டு கைகள் இல்லாத போதும், நம்பிக்கையுடன் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மயிலாடுதுறையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமி தேர்ச்சி பெற்றுள்ளார்.
மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் லெட்சுமி என்ற மாணவி இரண்டு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினார்.
பிறந்தபோது இரண்டு கைகளும் இல்லாத குழந்தை என்பதால் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு, மயிலாடுதுறையில் உள்ள ஆதரவற்றோர் காப்பகமான அன்பகத்தில், இரண்டு வயதிலிருந்து வளர்ந்து வருகிறார்.
மனம் தளராமல், தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதிய மாணவி லட்சுமி 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவியை காப்பக நிர்வாகி மற்றும் சக மாணவ, மாணவியர்கள் பாராட்டி இனிப்பு வழங்கினர்.

படக்குறிப்பு, மாணவி லட்சுமி அக்னிபத் ஆள்சேர்ப்பு திட்டம்: அறிவிக்கை வெளியிட்டது இந்திய ராணுவம்

பட மூலாதாரம், Getty Images
அக்னிபத் ஆள் சேர்ப்புத் திட்டத்துக்கான நடவடிக்கை தொடர்பான அறிவிக்கையை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
இதற்காக, விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும்.
அக்னிவீர் பொதுப்பணி (ஜெனரல் டியூட்டி), அக்னிவீர் (தொழில்நுட்பம்) டெக்னிகல், அக்னிவீர் டெக்னிகல் (விமானம்/வெடிமருந்து பரிசோதகர்), அக்னிவீர் கிளார்க்/ஸ்டோர் கீப்பர் டெக்னிகல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் போன்ற பதவிகளுக்கான நியமனத்திற்கான ஆன்லைன் பதிவு செயல்முறை ஜூலை, 2022 முதல் தொடங்கும்.
இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், சேவை நிலைமைகள், தகுதி, வெளியேற்றம் மற்றும் அக்னிபத் திட்டம் தொடர்பான பிற முக்கிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அக்னிவீர் சேர்க்கையுடன் அவரது நான்கு ஆண்டுகால பணிக்காலம் தொடங்கும் என ராணுவத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. நான்காண்டுகள் பணியின்போது அவர்களுக்குரிய விடுப்பு, சீருடை, ஊதியம், படிகள் ஆகியவை கிடைக்கும்.
நான்கு ஆண்டுகள் பணி முடிந்த பிறகு அவர்கள் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஓய்வூதியத் தொகுப்பு நிதி வழங்கப்படும். அவர்கள் எந்த வகையிலும் ஓய்வூதியம் மற்றும் கருணைத் தொகைக்கு தகுதி பெற மாட்டார்கள்.
முன்னாள் ராணுவ வீரர்களுக்குக் கிடைக்கும் சுகாதாரம், கேன்டீன் வசதிகள் போன்றவற்றுக்கு அவர்களுக்கு உரிமை இருக்காது. இவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர் அந்தஸ்து கிடைக்காது, அது தொடர்பான பிற வசதிகளும் கிடைக்காது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், INDIAN ARMY

பட மூலாதாரம், INDIAN ARMY
'மதிப்பெண்கள் அறிவுக்கு அளவீடல்ல' - ஐ.ஏ.எஸ் அதிகாரியின் கதை

பட மூலாதாரம், Awanish Sharan/Twitter
படக்குறிப்பு, துஷார் சுமேரா பத்தாம் வகுப்பில். ''ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 தான் நான் பெற்ற மதிப்பெண்கள் கல்லூரி சேர்க்கைக்காக படிவம் நிரப்பும்போது, என் சொந்தப் பெயரை எழுதுவதில் கூட பிழை செய்தேன்.
ஆனால், உறுதியான நம்பிக்கையும் கடின உழைப்பும் என்னை ஐஏஎஸ் ஆக்கின''. குஜராத் மாநிலம் பரூச் மாவட்ட ஆட்சியர் துஷார் சுமேராவின் வார்த்தைகள் இவை.
இவரைப் பொறுத்தவரை ''உங்கள் மதிப்பெண்களுக்கும் வாழ்க்கையின் வெற்றிக்கும் ஒருபோதும் தொடர்பில்லை'' என்கிறார்.
ஊக்கமளிக்கும் இந்த செய்தியைப் முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்.
காவிரி மேகேதாட்டு அணை: மேலாண்மை ஆணைய தலைவர் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

படக்குறிப்பு, திருச்சியில் விவசாயிகள் போராட்டம் மேகேதாட்டு அணை கட்ட ஆதரவாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் இருப்பதாக கூறி, அதைக் கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும். மேகத்தாட்டு அணைக்கட்டாமல் இருக்கவும், அணைக்கட்ட ஆதரவாக இருக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பெயரிலும் உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கினை பதிவு செய்ய வேண்டும்.
கோடை காலத்தில் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காததால் தான் 100 நாட்கள் வேலை திட்டத்தை கொண்டு வந்தார்கள். ஆனால், தற்பொழுது ஆண்டு முழுவதும் 100 நாட்கள் வேலை திட்டத்தை விரிவு படுத்தியதால், மழை காலங்களில் நடவு நட, களை எடுக்க, ஆட்கள் கிடைக்க வில்லை.
எனவே, 6 மாதம் விவசாய பணிக்கும் 6 மாதம் மற்ற பணிக்கும் ஒதுக்க வேண்டும். என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

படக்குறிப்பு, திருச்சியில் விவசாயிகள் போராட்டம் விற்பனைக்கு வந்தது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை
