வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை அரசின் கூட்டணிக் கட்சி விலகல் - செந்தில் தொண்டமான் அறிவிப்பு
இலங்கை அரசின் கூட்டணிக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், பிபிசி தமிழுக்கு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்றைய தினம் விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தது. மலையகத்திற்கான பல்கலைக்கழகம் அமைப்பதற்கான திட்டம், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினை, ஆசிரியர் உதவியாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
இவ்வாறு கலந்துரையாடப்பட்ட விடயங்களுக்கு சாதகமான பதிலை ஜனாதிபதி வழங்கியதாக செந்தில் தொண்டமான் கூறினார். எவ்வாறாயினும், ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் நேற்றிரவு கலந்துரையாடியுள்ளனர்.
இதையடுத்து, அரசாங்கத்திலிருந்து விலகி, நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். இந்த நிலையில், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலக, ஜீவன் தொண்டமான் தீர்மானித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஜீவன் தொண்டமான் மற்றும் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கு தலைசாய்த்தே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த தீர்மானத்தை எட்டியதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

பட மூலாதாரம், CWC MEET PRESIDENT - PMD



