You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: சென்னையில் குறைந்த வாக்கு சதவீதம்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. சென்னையில் குறைந்த அளவிலான வாக்குகளே பதிவாகியுள்ளன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

விக்னேஷ். அ and க. சுபகுணம்

  1. “தோல்வி பயத்தால் அதிமுக செய்த நாடகம்” – முதலமைச்சர் ஸ்டாலின்

    சென்னை தேனாம்பேட்டையில் தனது வாக்கைப் பதிவு செய்துவிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

    அப்போது, கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கைது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “கோவையில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது, அக்கட்சியைச் சேர்ந்த ஓர் அமைச்சரின் அடவாடித்தனங்கள் பல நடந்தன. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

    நேற்றைய தினம் வேலுமணி அவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். ராணுவம் அங்கு வரும் வரை போராட்டம் நடைபெறும் என்று அடம்பிடித்தார். ராணுவம் வரும் அளவுக்கு எந்தப் பெரிய சம்பவமும் அங்கு நடக்கவில்லை. அதிமுக தோல்வி பயத்தால் செய்த நாடகம் அது” என்று கூறினார்.

    மேலும், அப்போது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “நாங்கள் செய்த தவறை ஆதாரத்தோடு கூறினால் நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம். கடந்த ஆட்சியில் போலி நகைகளை வைத்து பல முறைகேடுகளை நகைக்கடன்களில் செய்துள்ளார்கள். அதையெல்லாம் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தி முறையாகச் செய்து வருகிறோம்,” என்றார்.

    மேலும், “சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த ஆதரவைவிட அதிக ஆதரவை மக்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். வாக்களிக்காத மக்களும் தவறு செய்துவிட்டோமே என்று நினைக்கும் அளவுக்குச் செயல்பட்டுள்ளோம்,” என்று தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

  2. சாலிகிராமத்தில் தமிழிசை சௌந்தரராஜன் வாக்களித்தார்

    தமிழகத்தில் இன்று நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலைஒட்டி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கைச் செலுத்தினார்.

  3. வாக்களித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார்.

    பொது மக்களுடன் வரிசையில் நின்று ஸ்டாலினும் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலினும் சென்னை தேனாம்பேட்டையில் தங்களது வாக்குகளைச் செலுத்தினார்.

  4. கள்ளக்குறிச்சியின் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு

    கள்ளக்குறிச்சியில் உள்ள 3 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 141 பதவிகளுக்கு 522 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகளில் மொத்தமாக 141 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் 83,481 ஆண் வாக்காளர்களும் 88,322 பெண் வாக்காளர்களும் 38 மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர்களும் என மொத்தமாக 1,71,841 பேர் வாக்களிக்கின்றனர்.

    மாவட்டம் முழுவதும் 185 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 54 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தேர்தல் பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில், 3 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 7 துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் உள்பட 1,000க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் உதவி காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 5 போலீசார் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  5. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த விவரங்கள்: பிபிசி தமிழின் சிறப்பு நேரலை

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு குறித்த முழு விவரங்கள் மற்றும் சமீபத்திய நிலவரம்.

    களத்தில் இருந்து பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் வழங்கும் சிறப்பு நேரலை.

  6. பாளையங்கோட்டையில் தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர்

    பாளையங்கோட்டை ராம்நகர் வாக்குச் சாவடியில் இவிஎம் மிஷினில் தாமரை சின்னத்துக்கான பட்டன் வேலை செய்யாததால் பாஜக வேட்பாளர் தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதம்.

    நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 933 வாக்குச் சாவடிகளில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாநகராட்சி பொறுத்தவரை பாளையங்கோட்டை, நெல்லை, மேலப்பாளையம், தச்சநல்லூர் ஆகிய நான்கு மண்டலங்களில் மொத்தம் 55 வார்டுகளுக்கு 491 வாக்குச் சாவடியில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

    பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட ராம்நகர் பள்ளியில் உள்ள மொத்தம் 13 வாக்குச் சாவடிகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு அதிகளவில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    இதில் 316வது வாக்குச்சாவடியில் பொது மக்கள் வாக்களிக்கும் போது இவிஎம் மிஷினில் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டிய இடத்தில் உள்ள பட்டன் வேலை செய்யாததால் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

    இதுகுறித்து அங்கிருந்த ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பத்து நிமிடத்தில் இயந்திரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது. அதன் பிறகு மீண்டும் தற்போது வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

    திடீரென பாஜக சின்னத்துக்கான பட்டன் இயந்திரத்தில் வேலை செய்யாதது பரபரப்பை ஏற்படுத்தியது.

  7. தொடர்ந்து இணைந்திருங்கள்...

    வணக்கம் நேயர்களே!

    உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்குப்பதிவு தொடர்பான செய்திகளையும் இதர செய்திகளையும் இனி உங்களுக்குத் தொகுத்து வழங்கப்போவது க.சுபகுணம்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் ட்விட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

  8. வாக்குப்பதிவு செய்த நடிகர் விஜய்

    வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திரைப்பட நடிகர் விஜய் இன்று காலை வாக்களித்தார்.

    நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார்.

  9. கடலூர் மாவட்டத்தில் 1994 வேட்பாளர்கள், நடராஜன் சுந்தர், பிபிசி தமிழுக்காக

    கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருந்தாசலம், வடலூர், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள், மற்றும் 14 பேரூராட்சிகளில் உள்ள 447 பதவிகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில் மாவட்டம் முழுவதும் 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 437 பதவிகளுக்கு 1994 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    இந்த தேர்தலில் கடலூர் மாநகராட்சியில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 479 வாக்காளர்களும், 6 மாநகராட்சிகளில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 950 வாக்காளர்களும், 14 பேரூராட்சிகளிலும் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 383 வாக்காளர்கள் உள்ளனர் மொத்தம் 5 லட்சத்து 78 ஆயிரத்து 812 வாக்காளர்கள் உள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் 726 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில், 159 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 251 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்டறியப்பட்டுள்ளது.

  10. சேலம் மாவட்டம் - 695 பதவிகளுக்கு தேர்தல், ஏ.எம். சுதாகர், பிபிசி தமிழுக்காக

    சேலம் மாவட்டத்தை பொருத்தவரை ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 699 பதவிகளுக்கு நான்கு பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

    மீதமுள்ள 695 பதவிகளுக்கு 1514 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 13 லட்சத்து 56 ஆயிரத்து 308 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

    தேர்தல் பணிகளில் 7267 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 276 வாக்குச்சாவடிகளில் 138 நுண் பார்வையாளர்கள் மூலமாகவும் மீதமுள்ள 138 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  11. மதுரை மாவட்டம் - களத்தில் 1702 வேட்பாளர்கள், பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக

    மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி ,3 நகராட்சி, 9 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு இன்று துவங்கியது.

    100 மாமன்ற பதவிகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் 815 வேட்பாளர்களும், 3 நகராட்சிகளில் 78 பதவிகளுக்கு 335 வேட்பாளர்களும், பேரூராட்சிகளில் 126 பதவிகளுக்கு 552 வேட்பாளர்கள் என ஒட்டுமொத்தமாக 313 பதவிகளுக்கு 1702 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    மாவட்டத்தில் 322 மாமன்ற பதவிகளில் பாலமேடு, வாடிப்பட்டி, டி.கல்லுப்பட்டி ஆகிய 3 பேரூராட்சிகளில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் 313 மாமன்ற பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மாவட்டம் முழுவதிலும் உள்ள 1,615 வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி மக்கள் பொருத்தப்பட்டுள்ளன, 338 பதற்றமான வாக்குச்சாவடிகளில் 127 வாக்குச்சாவடிகளை வெப் லைவ் கேமரா மூலமாக நேரடியாக மாநில தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்படுகிறது.

    211 மிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு பார்வையிடுகினாறனர். வாக்குப்பதிவு பணிகளில் 7,760 தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  12. கோயம்புத்தூர் தேர்தல் நிலவரம் - 3,366 வேட்பாளர்கள், மோகன், பிபிசி தமிழுக்காக

    கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கோவை மாநகராட்சியில் நூறு வார்டுகளுக்கும் 7 நகராட்சிகளில் 198 வார்டுகளுக்கும் 33 பேரூராட்சிகளில் 504 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

    இதில் 9 பேரூராட்சி பதவிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 802 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

    மொத்தமாக 3366 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 23,88,263 வாக்காளர்கள் உள்ளனர்.

    கோவையில் 2 ஆயிரத்து 303 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 424 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. கோவை உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் 6000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  13. மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் எப்படித் தேர்வுசெய்யப்படுவார்கள்?

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் தலைமை பதவிக்கு வருபவர்கள் எப்படித் தேர்வுசெய்யப்படுவார்கள்?

  14. ரஷ்யா யுக்ரேனை தாக்கும் - ஜோ பைடன்

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் யுக்ரேன் மீது படையெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளார் என்றும், வரும் நாட்களில் அந்த தாக்குதல் நடக்கலாம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க உளவுத்துறையின் கணிப்பின்படி, இந்த தாக்குதலில் யுக்ரேன் தலைநகர் கீவ் குறிவைக்கப்படும் என்றும் பைடன் கூறினார்.

    ரஷ்ய படைவீரர்கள் சுமா் 169,000-190,000 பேர் யுக்ரேனிலும் அதற்கு அருகிலும் குவிந்துள்ளனர் என்றும் இது கிழக்கு யுக்ரேனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் குடியரசுகளில் ரஷ்ய ஆதரவு போராளிகளை உள்ளடக்கியது என்றும் அமெரிக்கா கணித்துள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை இரவு, டொனெட்ஸ்கில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததாக யுக்ரேனின் ராணுவ புலனாய்வு சேவை கூறியது.

    மேலும் ரஷ்யா எதிரிகளை குற்றம் சாட்டும் நோக்கத்துடன் சில வேலைகளை செய்து வருகிறது என்கிறது யுக்ரேன்.

  15. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

    தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

    மாநிலம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

    வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்காளர்கள் வாக்கு செலுத்தலாம்.

    தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் இருக்கின்றன.

    138 நகராட்சிகளில் 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் இருக்கின்றன. 490 நகராட்சிகளில்7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் இருக்கின்றன.

    இன்று மொத்தமாக 12,838 நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்வுசெய்ய வாக்குப்பதிவு நடக்கிறது.

    இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22தேதி நாடக்கும்.

  16. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.நான் விக்னேஷ்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்.

    நேற்றைய நேரலைப் பக்கத்தின் சில முக்கியச் செய்திகள்:

    • யுக்ரேன் எல்லையில் ரஷ்ய படைக் குவிப்பு “இரண்டாம் உலக போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நிகழ்ந்த மிகப்பெரிய ராணுவ அணி திரட்டல்” என அமெரிக்கா கூறியுள்ளது
    • தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு எதிராக, சிபிஐ லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது
    • அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
    • இங்கிலாந்தின் ஐல் அவ் வைட் தீவில் ஒரு மணிநேரத்திற்கு 122 மைல் வேகத்தில் யூனிஸ் புயல் தாக்கியது.
    • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு நபர் ஆணையத்தின் சாட்சிகள் விசாரணை நேற்று நிறைவடைந்தது. இன்னும் மூன்று மாத காலத்துக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
    • பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை சந்தித்த புகைப்படத்தை, தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.