தமிழ்நாட்டில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை தொடங்க உள்ளது என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னை சைதாப்பேட்டையில் இஒன்று ஞாயிற்றுக்கிழமை 17 ஆவது தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது என மக்களின் ஒத்துழைப்பு அவசியம்" என்றார்.
தமிழ்நாட்டில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 33.46 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில பொது சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாக, மாவட்டங்களில் உள்ள துணை சுகாதார இயக்குநர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, 2007 ஆம் ஆண்டு, அதற்கு முன்பிறந்தவர்கள் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்குத் தகுதியானவர்களாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பான பட்டியலை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், தனியார் பள்ளிகள் தயார் செய்து வைக்க வேணடும்.
கோவின் செயலியில் பத்தாம் வகுப்பு அடையாள அட்டை, ஆதார் கார்டு மூலம் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசிப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் சிறப்பு அலுவலராக ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும், கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்குப் பள்ளிகளில் போதிய இடவசதியை ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும், மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாளை தொடங்கி ஆறு நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடைய உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.