சென்னை, காஞ்சிபுரம் உள்பட 18 மாவட்டங்களில் மழை நீடிக்கும் - வானிலை மையம்

சென்னையின் மத்திய பகுதிகளில் கன மழை பெய்ததால் பல இடங்களில் சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீரை அகற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இலங்கையில் பால்மா தேநீர் இனி கிடையாது, ரஞ்சன் அருண் பிரசாத், இலங்கையிலிருந்து பிபிசி தமிழுக்காக

    இலங்கை உணவகங்களில், பால்மாவில் தயாரிக்கப்படும் தேநீர் விற்பனையை நிறுத்துவதற்கு சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

    பால்மாவின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருகின்ற பின்னணியிலேயே, இந்த தீர்மானத்தை எட்டியதாக பிபிசி தமிழிடம் பேசிய சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், தெரிவித்தார்.

    இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை நாளை (31) முதல் அதிகரிப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

    இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 150 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 60 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இந்த விலை அதிகரிப்பை அடுத்து, ஒரு கிலோகிராம் பால் மாவின் புதிய விலை 1,345 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகின்றது.

    அத்துடன், 400 கிராம் பால்மாவின் புதிய விலை 540 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறான பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தமக்கு பால்மாவினால் தயாரிக்கப்படும் தேநீரை விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

    ஒரு வருடத்திற்கு முன்னர், 30 முதல் 35 ரூபாவாக காணப்பட்ட பால்மா தேநீரின் தற்போதைய விலை 60 முதல் 70 ரூபாவாக காணப்படுகின்றது.

    இந்த விலையேற்றத்திற்கு அமைய, ஒரு கோப்பை தேநீரை 80 முதல் 100 ரூபாவிற்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

    கொரோனா பரவல் காரணமாக, பிளாஸ்டிக் கோப்பைகளிலேயே தேநீரை வழங்க வேண்டியுள்ளதாகவும், பிளாஸ்டிக் கோப்பை ஒன்றின் விலை 10 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

    இவ்வாறான காரணங்களை அடிப்படையாகக் கொண்டே தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அசேல சம்பத் தெரிவிக்கின்றார்.எவ்வாறாயினும், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் விரும்பும் பட்சத்தில், வாடிக்கையாளர்களுக்கு தேநீரை வழங்க முடியும் என கூறிய அவர், அதற்கான விலையை தீர்மானிக்கும் உரிமை, அவர்களுக்கே காணப்படுவதாகவும் குறிப்பிடுகின்றார்.

  2. நம்மாழ்வார் பெயரில் இயற்கை விவசாய ஆராய்ச்சி மையம் - விவசாயிகள் கோரிக்கை

    இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு விவசாயிகள் அஞ்சலி

    பட மூலாதாரம், P R Pandian

    படக்குறிப்பு, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு விவசாயிகள் அஞ்சலி.

    வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மன்னார்குடியில் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    அப்போது, "தமிழ்நாட்டில் மறந்து போன பாரம்பரிய விவசாய முறைகளை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமில்லாமல், இந்தியா முழுவதிலும் அதனை இயக்கமாகக் கொண்டு செல்ல முயற்சி எடுத்தவர் நம்மாழ்வார். அவரது கொள்கையை உலக நாடுகள் பலவற்றிலும் இன்று பின்பற்றுகிற நிலையை உருவாக்கியவர்." என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    பின்னர் விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நம்மாழ்வாரின் கொள்கையை பின்பற்றி பாரம்பரிய விவசாயம், இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    நம்மாழ்வார் வழியை பின்பற்றி, தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தவும் உர தயாரிப்பு குறித்தான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். தஞ்சாவூரை மையமாக வைத்து, நம்மாழ்வார் நினைவாக இயற்கை விவசாய ஆராய்ச்சி மையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.

  3. டெல்டாவில் சாகுபடியை அதிகரிப்பதில் மாபெரும் வெற்றி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    தஞ்சாவூரில் ரூ. 894 கோடியில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல்

    பட மூலாதாரம், CMOTamilnadu -Twitter

    படக்குறிப்பு, தஞ்சாவூரில் ரூ. 894 கோடியில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல்

    தமிழ்நாட்டில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் முயற்சியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது ரூ. 894.56 கோடி மதிப்பில் 134 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ. 98.77 கோடியில் முடிவுற்ற 90 பணிகளையும் தொடங்கி வைத்தார்,

    பின்னர் அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் முயற்சியில் அரசு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

    கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவாக, அதிக பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சம்பா சாகுபடி 3.12 லட்சம் ஏக்கர் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக 3.42 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது." என்றார்.

  4. நகைக்கடன் தள்ளுபடியில் "தி.மு.க நம்பிக்கை துரோகம்"- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை, விஜயானந்த், பிபிசி தமிழ்

    தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பின் மூலம் 35 லட்சம் பேர் கடனாளியாகியுள்ளனர் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தலின்போது 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆனால், நகைக்கடன் பெற்றவர்களில் 75 சதவீத பயனாளிகளுக்குத் தள்ளுபடி கிடையாது என அரசு இப்போது அறிவித்துள்ளது. இதனால், 35 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கடனாளியாகயுள்ளனர். . இதற்கு தி.மு.க அரசுதான் காரணம். இது நம்பிக்கை துரோகத்தின் உச்சகட்டம்.

    நகைக்கடன் பகுப்பாய்வு செய்யப்படும் என தேர்தல் அறிக்கையிலோ, மேடைப் பிரசாரத்திலோ ஏன் சொல்லவில்லை?. என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, "தேர்தல் வாக்குறுதிப்படி நகைக்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்." என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. ஓரே நபர் 672 நகைக்கடன்கள் - கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

    கூட்டுறவு நகைக்கடனில் முறைகேடுகள் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கூட்டுறவு நகைக்கடனில் முறைகேடுகள் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

    கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக் கடனில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி விவகாரம் குறித்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    "நகைக்கடன் குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. மொத்தம் 48 லட்சம் நகைக்கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், 5 பவுனுக்கு மேற்பட்ட நகைக்கடன்களும் அடங்கும்.

    வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் அட்டையைப் பயன்படுத்தி அடகுக் கடைக்காரர்கள் பலர் கடன் பெற்றுள்ளனர். அவர்களுக்கெல்லாம் தள்ளுபடி கொடுக்கலாமா?." என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், " நகையே இல்லாமல் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரத்தன்லால் என்கிற ஒருவர் மட்டும் 672 நகைக்கடன்கள் பெற்றுள்ளார். அத்தனையும் 5 பவுனுக்குக் கீழ்தான். ஒரே குடும்பத்து உறுப்பினர்கள் தனித்தனியாக 5 பவுனுக்குக் கீழ் வைத்திருந்தால் தள்ளுபடி கிடையாது. குடும்பத்துக்கு 5 பவுன் என்பதுதான் கணக்கீட்டு முறை." என்றார்.

  6. புதுக்கோட்டையில் சாலை மறியல் - சி.ஐ.எஸ்.எப் பயிற்சியின் போது சிறுவன் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு

    துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கிராம மக்கள் கோரிக்கை

    புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே அம்மாசத்திரம் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இங்கு மத்திய துணை ராணுவப் படையினர் (சி.ஐ.எஸ்.எப்) இன்று காலை பயிற்சி செய்தனர். அப்போது வெளிப்பட்ட குண்டு, எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள கிராமத்தில் வீட்டில் இருந்த சிறுவன் புகழேந்தி(11) தலையில் பாய்ந்தது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன், தற்போது மேற்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், சிறுவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுக்கோட்டை - திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள அரசு துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  7. '150 உடல்களை அடக்கம் செய்ய மட்டுமே இடமுண்டு', மப்ரூக், இலங்கையிலிருந்து, பிபிசி தமிழுக்காக

    இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளான உடல்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி பகுதியில் இன்னும் 150 உடல்களை மட்டுமே அடக்கம் செய்ய முடியும் என, ஓட்டமாவடி உள்ளுராட்சி சபை தெரிவித்துள்ளது.

    கோவிட் தொற்றால் மரணிப்பவர்கள், மட்டக்களப்பிலுள்ள ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்படுகின்றனர்.

    கோவிட்டினால் மரணிப்பவர்களை எரிக்கும் நடைமுறைஇருந்து வந்தபோது, அவ்வாறான உடல்களை தங்களது பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கு தாங்கள் இடம்தருவதாக ஓட்டமாவடி உள்ளுராட் சபை அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் அங்கு தற்போதுவரை சுமார் 3300 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 150 உடல்களை மாத்திரமே அடக்கம் செய்ய முடியும் எனவும் ஓட்டமாவடி உள்ளுராட்சி சபைத் தலைவர் அறிவித்துள்ளார்.

    இடற்காக ஒதுக்கப்பட்டுள்ள குறித்த இடத்தில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

    கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள், இலங்கையில் இங்கு மட்டுமே அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  8. காஷ்மீரில் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொலை - பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூட்டில்

    படை

    பட மூலாதாரம், Getty Images

    காஷ்மீரில் நேற்று இருவேறு இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் நவ்காம், அன்ந்த்நாக், மிர்ஹமா உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு படையினர் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், பாகிஸ்தான் நாட்டினர் இருவர் உட்பட 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். காவல்துறையை சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

    இது குறித்து, காஷ்மீர் மண்டல காவல்துறை ஐ.ஜி விஜய்குமார் கூறுகையில், "இது எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி. ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 6 பேர் இருவேறு இடங்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இருவர் உள்ளூர் நபர்கள். மற்ற இருவர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது." என்றார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. புதுக்கோட்டையில் சிறுவன் தலையில் பாய்ந்த குண்டு - துணை ராணுவப் படை பயிற்சியின் போது

    புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே காவல் துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (சி.ஐ.எஸ்.எப்) பயிற்சியின் போது வெளிப்பட்ட குண்டு, அருகில் உள்ள கிராமத்தில் வீட்டில் இருந்த சிறுவன் புகழேந்தி(11) தலையில் பாய்ந்தது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொத்தமங்கலம் கலைச்செல்வன் மகன் புகழேந்தி, பள்ளி விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு சென்றிருந்த போது, நடைபெற்றுள்ளது. இது குறித்து வெள்ளனூர் காவல் நிலைய போலீசார் விசாரணை.

  10. “டெல்டா மற்றும் ஒமிக்ரான் சேர்ந்து கோவிட் – 19 பேரலையை உருவாக்கி வருகிறது”

    டெல்டா மற்றும் ஒமிக்ரான் திரிபுகள் ஒன்று சேர்ந்து, ஆபத்தான வகையில், கோவிட்-19 பேரலையை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், டெட் ரோஸ் அதானோம் கெப்ரேசேயஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

    தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக, ஐரோப்பாவின் அதிகபட்ச தினசரி எண்ணிக்கையாக, பிரான்ஸ் நாட்டில் 20,8000 பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

    ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல் படி, கடந்த வாரத்தில் அமரிக்காவில் ஒரு நாளைக்கு சராசரியாக 2 லட்சத்து 65 ஆயிரத்து 427 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

  11. பைடன் - புதின் தொலைப்பேசியில் உரையாடவுள்ளனர்

    Biden and Putin

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரைன் தொடர்பான பதற்றங்களை குறைக்கும் நோக்கில் இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன் உரையாடவுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

    இன்று இருநாட்டு தலைவர்களும் தொலைப்பேசியில் உரையாடவுள்ளனர்.

    அவர்கள் வரக்கூடிய பாதுகாப்பு குறித்தான பேச்சுவார்த்தை மற்றும் ஐரோப்பில் நிலவும் சூழல் குறித்து பேசுவார்கள் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    யுக்ரைனின் எல்லையை ஒட்டி படைகளை குவித்துள்ளது ரஷ்யா. இருப்பினும் யுக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என ரஷ்யா தெரிவித்து வருகிறது.

    தனது படைகள் பயிற்சியின் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டுள்ளன என்றும், தங்களது மண்ணில் எங்குவேண்டுமானாலும் படைகளை நிறுத்தும் உரிமை தங்களுக்கு உள்ளது என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

  12. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    தமிழகம், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகள் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குவது விஷ்ணுப்ரியா ராஜசேகர். எங்களோடு இணைந்திருங்கள்.