சென்னையில் சொகுசு விடுதிகளில் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு சென்னை மாநகர காவல்துறை தடைவிதித்துள்ளது.
ஒமிக்ரான் தொற்று அதிகரிக்கும் சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் காவல்துறை விதித்துள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் கடைவீதிகளில் மக்கள் அலைமோதுகின்றனர்.
இந்நிலையில், புத்தாண்டை ஒட்டி சென்னையில் டிசம்பர் 31 அன்று இரவு பொதுமக்கள் கூடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் விதித்துள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், `சென்னையில் சொகுசு விடுதிகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் புத்தாண்டை கொண்டாடுவதற்கு மக்கள் கூட வேண்டாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த அறிவிப்பில், ` டிசம்பர் 31 அன்று பொதுஇடங்களில் மக்கள் கூட வேண்டாம். அன்று இரவு 9 மணி முதல் மெரினா கடற்கரை, எலியட்ஸ் பீச், நீலாங்கரை, ஈ.சி.ஆர் சாலை ஆகியற்றையொட்டியுள்ள கடற்கரைப் பகுதிகளில் மக்கள் கூட வேண்டாம்' எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், `டிசம்பர் 31 அன்று இரவு 9 மணி முதல் மெரினா கடற்கரை, போர் நினைவுச் சின்னம் முதல் காந்தி சிலை வரையிலான சாலைகள் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டியுள்ள சாலைகள் ஆகியவற்றில் வாகனங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்படும்' என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
`கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை, ராஜாஜி சாலை, அண்ணாசாலை, ஜி.எஸ்.டி சாலை ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தி புத்தாண்டை கொண்டாடக்கூடாது' எனவும்
`பண்ணை வீடுகள், ரிசார்ட்டுகள், அரங்குகள், கிளப்புகள் ஆகியவற்றிலும் வர்த்தரீதியாக புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது எனவும் அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஆகியவற்றிலும் மக்கள் ஒன்றுகூடி புத்தாண்டு நிகழ்ச்சிகளை கொண்டாடக் கூடாது' எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தங்கும் விடுதிகள், தங்கும் வசதியுள்ள உணவகங்கள் ஆகியவற்றில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறையின்படி இரவு 11 மணி வரையில் செயல்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பண்ணைகள், பொதுஇடங்களில் நடன, இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி ஆகியவற்றைப் பின்பற்றவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
டிசம்பர் 31 அன்று முக்கிய சாலைகளில் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.