You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

மகாராஷ்டிராவில் 2,510 கொரோனா பாதிப்புகள் - தமிழகத்தில் இரட்டிப்பாகும் பரிசோதனைகள்

இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. புதுச்சேரியில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத திமிங்கிலம், நடராஜன் சுந்தர்

    புதுச்சேரி மீனவர் வலையில் சுமார் 2.5 டன் எடையுள்ள ராட்சத திமிங்கிலம் சிக்கியது.

    புதுச்சேரி வீராம்பட்டிணத்தை சேர்ந்த மீனவர் சரவணன். இவருக்கு சொந்தமான விசைப்படகில், மீனவர்களுடன் நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்றனர். சுமார் 20 நாட்டிக்கல் தூரத்தில், அவர்களது வலையில் பெரிய அளவிலான மீன் சிக்கியது. தேங்காய்த்திட்டு துறைமுகத்திற்கு இழுத்து வந்தனர்.

    சுமார் 50 மீனவர்கள் இணைந்து கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது, இறந்த நிலையில் 20 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம் சிக்கி இருப்பது தெரியவந்தது. இரண்டரை டன் எடை கொண்ட, இந்த திமிங்கலம் காம ராசி இனத்தைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது.

    கால்நடை மருத்துவர்கள் மூலமாக திமிங்கலத்தை அங்கேயே உடற்கூறாய்வு செய்து, துறைமுகத்தில் புதைத்தனர்.

  2. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டனில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

    அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தி்னசரி ஒரு லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.

    அமெரிக்காவின் நோய்கள் மற்றும் தடுப்பு மையத்தின் தகவல்படி, திங்கள்கிழமை புதிதாக 4.40 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி தொற்று விகிதம் ஒரு லட்சத்திற்கும் மேல் தொடர்கிறது.

    இதே போல் ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸில் அதிகம் தொற்று பதிவாகியுள்ளாது. நேற்றைய தினம் மட்டும் அங்கு 1.79 லட்சம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது சுகாதாரத்துறை அமைச்சர் ஆலிவர் வேரன்.

    "தினசரி தொற்று எண்ணிக்கை ஜனவரியில் 2.50 லட்சமாகும்." என்று தெரிவித்துள்ளார்.

    பிரிட்டனில் நேற்றைய தினம் மட்டும் புதிதாக 1.17 லட்சம் பேருக்கு தொற்று என அதிகபட்ச அளவாக பதிவாகியுள்ளது.

  3. இந்தியாவில் 143 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி

    இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோன வைரஸ் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 143 கோடியாகியுள்ளது என்று இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    முதல் டோஸ் மட்டும் செலுத்தப்பட்டுள்ளது, இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டது ஆகிய இரண்டும் இதில் அடங்கும்.

  4. ஈலோன் மஸ்க் நிறுவனம் மீது ஐ.நா-வில் சீனா புகார்

    ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக ஏவப்பட்ட செயற்கை கோள்களுடனான மோதலைத் தவிர்க்க, சீனாவின் விண்வெளி நிலையம் நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது என சீனா புகார் கொடுத்துள்ளது.

    இதன் பின் ஈலோன் மஸ்க் சீன சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

    இந்த ஆண்டில், சீனாவின் விண்வெளி நிலையம் இரண்டு முறை ஸ்டார்லிங்க் செயற்கை கோள்களுடன் மோதும் நிலை ஏற்பட்டது என்கிறது சீனா.

  5. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி, நடராஜன் சுந்தர், பிபிசி தமிழுக்காக

    புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் ஏற்பாடு தொடர்பாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அதன்படி புத்தாண்டு கொண்டாட்டத்தின் மேற்கொள்ள இருக்கும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • பொது இடங்களில் கூடும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பதைக் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்களை மட்டுமே விடுதிகள் ஓட்டல்கள் மற்றும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் அனுமதிக்கவேண்டும்.
    • புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
    • புத்தாண்டு நிகழ்ச்சிகளை உரிய‌ முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனை அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
    • மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், டிரோன் கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்பட வேண்டும்.
    • புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கொரோனா விதிமுறைகள் மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
  6. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகள் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குவது விக்னேஷ்.அ, ஜோ மகேஸ்வரன். எங்களோடு இணைந்திருங்கள்.