கள்ளக்குறிச்சி அருகே பட்டாசுக் கடையில்
ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள்
குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் நகர
பகுதியில் உள்ள பிரதான சாலையில் செல்வகணபதி என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை
உள்ளது. இந்த ஜவுளிக்கடைக்கு பின்புறம் பட்டாசு கடையை இயக்கி வருகிறார். குறிப்பாக
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை மற்றும் குடோனில் ஏராளமான பட்டாசுகள்
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில்
திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையிலிருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர
சத்தத்துடன் வெடித்து தீப்பிழம்புடன் சிதறியது.
அப்போது அருகே இருந்த இனிப்புக்கடையில் வைக்கப்பட்ட
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த கடைக்கு அருகே இருந்தவர்கள்
தீயில் சிக்கியுள்ளனர். மேலும் இந்த தீ விபத்து பட்டாசுக் கடையில் வெடித்ததில்
அருகருகே இருந்த ஜவுளிக்கடை, இனிப்புக்கடை,
டீக்கடை,
செல்போன் கடைகளில் தீ பரவத் தொடங்கியது.
தீ விபத்து குறித்து தகவலறிந்ததும்
சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம்
உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில்
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீ விபத்தில்
சிக்கி காயமடைந்தவர்களை மீட்பு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு
அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தீ விபத்தில் சிக்கிய கடைகள் இடிந்து
விழுந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் காவல் துறையினர்
ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தன்று பட்டாசுகள் வெடித்து
சிதறியதால் கடை அமைந்திருக்கும் பகுதியிலிருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பகுதி
பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விபத்தின் போது பட்டாசு மற்றும் இனிப்பு கடை
அருகே இருந்தவர்கள் மீது பட்டாசு வெடித்து சிதறியதில் 5 பேர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 10 பேர் காயம்
காரணமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக சம்பவ இடத்திற்கு கள்ளக்குறிச்சி
ஆட்சியர் ஸ்ரீதர், காவல் கண்காணிப்பாளர் ஜியாஹூல் ஹக் ஆகியோர்
நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்
செந்தில்குமார் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியன் நேரில்
பார்வையிட்டனர்.
இந்த சம்பவம் குறித்துபிபிசி தமிழிடம் பேசிய கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஹூல் ஹக்,"துணிக்கடைக்கு பின்புறம் இருந்த பட்டாசுக்
கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதன் மூலம் துணிக்கடையில் தீப்பரவியதில் தீ
விபத்து மேலும் அதிகரித்துள்ளது. இந்த தீ விபத்தில் பட்டாசுக் கடை மற்றும்
ஜவுளிக்கடை முழுவதுமாக எறிந்துவிட்டது. மேலும் அருகே இருந்த செல்போன் கடை உட்பட
மூன்று கடைகளுக்கு தீ பரவியதால் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டது.
குறிப்பாக பட்டாசுக் கடையை கடந்த 10 ஆண்டுகளாக உரிய அனுமதியுடன் கடை உரிமையாளர்
நடத்தி வருகிறார். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும் எவ்வாறு தீ விபத்து
ஏற்பட்டது என்று விசாரணை மேற்கொண்டு வருகிறோம்,"
எனக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்து குறித்து இரங்கல் தெரிவித்த தமிழக
முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஐந்து
லட்ச ரூபாய்நிவாரண உதவி
வழங்கவும், தீவிர
சிகிச்சையில் இருப்பவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.