You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கள்ளக்குறிச்சி அருகே பட்டாசுக் கடை தீ விபத்தில் 5 பேர் பலி

கள்ளக்குறிச்சி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கள்ளக்குறிச்சி அருகே பட்டாசுக் கடை தீ விபத்தில் 5 பேர் பலி, நடராஜன் சுந்தர்

    கள்ளக்குறிச்சி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் நகர பகுதியில் உள்ள பிரதான சாலையில் செல்வகணபதி என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை உள்ளது.

    இந்த ஜவுளிக்கடைக்கு பின்புறம் பட்டாசு கடையை இயக்கி வருகிறார். குறிப்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை மற்றும் குடோனில் ஏராளமான பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையிலிருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிழம்புடன் சிதறியது.

    அப்போது அருகே இருந்த இனிப்புக்கடை வைக்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த கடைக்கு அருகே இருந்தவர்கள் தீயில் சிக்கியுள்ளனர். மேலும் இந்த தீ விபத்து பட்டாசுக் கடையில் வெடித்ததில் அருகருகே இருந்த ஜவுளிக்கடை, இனிப்புக்கடை, டீக்கடை, செல்போன் கடைகளில் கடைகளில் தீ பரவத் தொடங்கியது.

    அப்போது பட்டாசு மற்றும் இனிப்பு கடை அருகே இருந்தவர்கள் மீது பட்டாசு வெடித்து சிதறியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக கூறப்படுகிறது.

    தீ விபத்து குறித்து தகவலறிந்ததும் சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீ விபத்தில் சிக்கி காயமடைந்த 7 நபர்களை மீட்பு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் தீ விபத்தில் சிக்கிய கடைகள் இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவத்தன்று பட்டாசுகள் வெடித்து சிதறியதால் கடை அமைந்திருக்கும் பகுதியிலிருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஸ்ரீதர், காவல் கண்காணிப்பாளர் ஜியாஹூல் ஹக் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியன் நேரில் பார்வையிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஹூல் ஹக்கை பிபிசி தொடர்பு கொண்டு பேசியது.

    அப்போது பதிலளித்த அவர், "துணிக்கடைக்கு பின்புறம் இருந்த பட்டாசுக் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதன் மூலம் துணிக்கடையில் தீப்பரவியதில் தீ விபத்து மேலும் அதிகரித்துள்ளது. இந்த தீ விபத்தில் பட்டாசுக் கடை மற்றும் ஜவுளிக்கடை முழுவதுமாக எறிந்துவிட்டது. மேலும் அருகே இருந்த செல்போன் கடை உட்பட மூன்று கடைகள் தீ பரவியதால் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக பட்டாசுக் கடையை கடந்த 10 ஆண்டுகளாக உரிய அனுமதியுடன் கடை உரிமையாளர் நடத்தி வருகிறார். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என்று விசாரணை மேற்கொண்டு வருகிறோம்," எனக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

  2. பாலியல் தொந்தரவு: அரசு மருத்துவர் போக்சோவில் கைது

    அரச ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடன் பணியாற்றிய பெண்களுக்குக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசு மருத்துவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் குருசாமி வயது 50.

    இவர் அங்கு பணிபுரியும் இளம் பெண் ஒருவருடன் மருத்துவமனையில் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மற்றொருவர் குருசாமி மீது காவல் நிலையத்தில் ஆஜராகி புகார் மனு அளித்தார். இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி மருத்துவர் குருசாமி மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  3. கள்ளக்குறிச்சி அருகே பட்டாசுக் கடையில் தீ விபத்து: 3 பேர் பலி, 7 பேர் காயம்

    கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட‌ தீ விபத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசுக் கடையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இதனால் பட்டாசுக்‌ கடைக்கு அருகே உள்ள இனிப்பகம், செல்போன் கடைகள் அடுத்தடுத்து தீ பரவியது. தகவலறிந்து தீயணைப்பு படையினர் உள்ளே சிக்கியவர்களை மீட்டனர்.

    இந்த தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர். மேலும் 7 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சம்பவ இடத்தில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

  4. 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி

    மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வெற்றி பெற 144 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 10 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அந்த அணி இலக்கை எட்டியது.

    மார்க்ரம் 51 ரன்களையும் வான்டர் டஸன் 43 ரன்களையும் எடுத்தனர்.

    முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீசத் தீர்மானித்தது.

    மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் லீவிஸ் 56 ரன்களும், பொலார்ட் 26 ரன்களும் அடித்தனர். 20 ஓவர்களில் அந்த அணி 143 ரன்கள் எடுத்தது.

    தென்னாப்பிரிக்க அணியின் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டுகளையும், கேஷவ் மகராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    4 ஓவர்களில் 14 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து ரஸ்ஸலின் விக்கெட்டை வீழ்த்திய நோர்க்யா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

  5. தென்னாப்பிரிக்க அணிக்கு 144 ரன் இலக்கு

    மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 144 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீசத் தீர்மானித்தது.

    மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் லீவிஸ் 56 ரன்களும், பொலார்ட் 26 ரன்களும் அடித்தனர். 20 ஓவர்களில் அந்த அணி 143 ரன்கள் எடுத்தது.

    தென்னாப்பிரிக்க அணியின் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டுகளையும், கேஷவ் மகராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  6. பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதாக காஷ்மீர் மாணவர்கள் மீது வழக்கு

    இந்தியாவுக்கு எதிரான டி-20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதைக் கொண்டாடியதாக மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

    கரண் நகர் அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்ரீநகர் ஷேர்-இ-காஷ்மீர் மருத்துவக் கல்லூரி ஆகியோர் போட்டியின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியதாக மாணவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

    இந்தத் தகவலை காஷ்மீர் ஐ.ஜி. விஜயகுமார், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

  7. மேற்கு இந்தியத் தீவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு

    உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீசத் தீர்மானித்திருக்கிறது.

    தென்னாப்பிரிக்க அணியில் குயின்டன் டி காக் இடம்பெறவில்லை. ரீஸா ஹென்ட்ரிக்ஸ் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். இதேபோல் மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் மெக்காய்க்கு பதிலாக ஹேடன் வால்ஷ் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்

  8. பெகாசஸ் வேவு பார்ப்பு: உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு

    பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் செல்பேசி மூலம் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சுயாதீன விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட பல மனுக்கள் மீதான உத்தரவை வரும் புதன்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

    இஸ்ரேல் நாட்டிலுள்ள என்.எஸ்.ஓ எனும் நிறுவனத்தின் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் மூலம் உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் தனி நபர்கள் வேவு பார்க்கப்பட்டனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

    இந்தியாவில் த வைரஸ் இணையதளம் அவர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. நாடுகளின் அரசுகளின் ஓர் அங்கமாக இருக்கும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கே தங்கள் மென்பொருள் விற்கப்படுவதாக என்.எஸ்.ஓ கூறியிருந்தது.

    ஆனால், அப்படி யாரும் வேவு பார்க்கப்படவில்லை என்று இந்திய அரசு மறுத்தது.

  9. காவிரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு

    கர்நாடகாவில் அணைகள் திறக்கப்பட்டுள்ளதால், காவிற்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கர்நாடகம் - தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரியில் நீர் வரத்து வினாடிக்கு 20,000 கன அடியிலிருந்து 32,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

  10. லக்கிம்பூர் கேரி வழக்கில் உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

    உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் மோதி கொல்லப்பட்ட நாளன்று, அதே நிகழ்வில் உயிரிழந்த ஊடகவியலாளர் ரமன் காஷ்யப் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையில் தங்கள் தரப்பு பதிலை தாக்கல் செய்யுமாறு மாநில காவல் துறைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விபத்து நடந்ததைக் காட்டும் காணொளிகளின் உண்மைத்தன்மையை ஆராயும் தடயவியல் ஆய்வகங்களும் தங்கள் அறிக்கையை விரைவில் வழக்கை வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

  11. அதிகரிக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் லாபம்

    நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஃபேஸ்புக் நிறுவனம் 900 (சுமார் 68,000 கோடி இந்திய ரூபாய்) கோடி அமெரிக்க டாலர் லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இந்த லாபம் 780 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.

    அமெரிக்காவுக்கு வெளியே உள்ள நாடுகளின் ஃபேஸ்புக் மூலம் பரவும் போலிச் செய்திகள், பாலியல் தொழிலுக்காக நடக்கும் கடத்தல்கள் குறித்த செய்திகளைக் கட்டுப்படுத்த அந்த நிறுவனம் போதுமான நடவடிக்கை எடுப்பதில்லை என்று முன்னாள் ஊழியர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்பார்த்த அளவைவிட அதிகம் லாபமீட்டியுள்ளது ஃபேஸ்புக்.

  12. அரச குடும்ப அந்தஸ்தை விட்டுக் கொடுத்து காதலனை கரம் பிடித்த ஜப்பான் இளவரசி

    ஜப்பானின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மகோ தன் வகுப்புத் தோழரும், சாமானியருமான கெய் கொமுரு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

    ஜப்பானிய சட்டப்படி, அந்நாட்டின் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள், பொது மக்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அப்பெண் தன் அரச குடும்ப தகுதியை இழந்துவிடுவார்.

    ஆனால் ஓர் அரச குடும்பத்து ஆண், ஒரு வெகுஜனப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால், அவர் தன் அரச குடும்பத் தகுதியை இழக்கமாட்டார்.

    ஜப்பானிய அரச குடும்பத்து வழக்கப்படி, அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவோருக்கு 150 மில்லியன் யென் (சுமார் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்) பணம் கொடுப்பது வழக்கம். அத்தொகையைப் பெற மகோ மறுத்துள்ளார்.

    அதே போல அவரது திருமணத்தில் ஜப்பானிய அரச குடும்பத்தின் வழக்கங்கள் சடங்குகள் பின்பற்றப்படவில்லை.

    இந்த இரண்டையும் மறுத்த முதல் அரச குடும்பத்துப் பெண் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் மகோ.

    இளவரசி மகோ செவ்வாய்கிழமை ஜப்பானிய நேரப்படி காலை 10 மணியளவில் டோக்யோவில் உள்ள தன் வீட்டிலிருந்து, தன்பெற்ரோருக்கு பல முறை தலைகுனிந்து வணக்கம் கூறி, தன் திருமணத்தை பதிவு செய்யப் புறப்பட்டார்.

    தன் இளைய சகோதரியையும் கட்டியணைத்து விடைபெற்றதாக க்யோடோ முகமையில் செய்தி வெளியானது. கொமுரு மற்றும் இளவரசி மகோ கடந்த 2018ஆம் ஆண்டே திருமணம் செய்து கொள்ள தீர்மானித்திருந்தனர்.

    ஆனால் கொமுருவின் குடும்பம் சில நிதி சார் பிரச்னைகளை எதிர்கொண்டதால் திருமணம் ஒத்திப் போனது.

    கொமுரு மற்றும் இளவரசி மகோ கடந்த 2012ஆம் ஆண்டு, டோக்யோவில் உள்ள சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருமணத்துக்குப் பிறகு இவர்கள் அமெரிக்காவில் குடியேறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு கொமுரு வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார்.

  13. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவது விக்னேஷ். அ மற்றும் கெளதமன் முராரி.