You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ஆப்கன் அதிபர் மாளிகையை கைப்பற்றிய தாலிபன்கள் - என்ன நடக்கிறது?

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய படைகள் பெருமளவில் வெளியேறிவிட்ட நிலையில் நாட்டின் முக்கியமான நகரங்கள் அனைத்தையும் கைப்பற்றிவிட்ட தாலிபன்கள் ஞாயிற்றுக்கிழமை தலைநகர் காபூலில் நுழைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. மின்னல் வேகத்தில் தாலிபன்: வெளியேறும் திட்டத்தில் மாற்றமில்லை என்கிறது அமெரிக்கா

    10 நாள்களில் ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும்பகுதியை பிடித்துவிட்டு இப்போது தலைநகர் காபூலை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது தாலிபன் அமைப்பு. ஆனாலும், செப்டம்பர் மாத மத்தியில் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக படையினரைத் திரும்பப் பெறும் முந்தைய திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக தெரிவித்துள்ளது ராய்டர்ஸ் செய்தி முகமை.

    தங்கள் தூதரக ஊழியர்களை வெளியேற்றும் திட்டத்தில் தாலிபன்கள் தலையிட்டால் மட்டுமே அமெரிக்கப் படையினர் எதிர்வினையாற்றுவார்கள் என்றும் பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி கூறியுள்ளார்.

    அமெரிக்கர்கள் தாலிபன்களால் இடர்ப்பாட்டுக்கு உள்ளானால் விரைவான, தீவிரமான அமெரிக்க ராணுவ நடவடிக்கை இருக்கும் என்று அமெரிக்கா முன்னதாக எச்சரித்திருந்தது.

    அமெரிக்க அதிகாரியின் இந்தக் கூற்று, சமீபத்தில் அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட கருத்துக்கு ஏற்பவே அமைந்துள்ளது. அமெரிக்காவின் பெருமளவு படையினர் வெளியேறிவிட்ட நிலையில், தாலிபன்கள் வெகு விரைவாக ஆப்கானிஸ்தான் நாட்டின் பிராந்தியங்களை கைப்பற்றிய நிலையில் இது பற்றிப் பேசிய பைடன், அமெரிக்கத் துருப்புகளை முழுமையாகத் திரும்பப் பெறும் தனது முடிவை நினைத்து தான் வருந்தவில்லை என்று கூறியிருந்தார்.

    ஆப்கானிஸ்தான் படைகளுக்கு செய்வதாக கூறிய உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து செய்து வந்தது என்றும், ஆனால், அவர்கள்தான் போராடவேண்டும் என்றும் அவர் கூறினார்.

    • காபூல் சுற்றிவளைக்கப்பட்டது: தாலிபன் அறிவிப்பு

      ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றிவளைத்துவிட்டதாக தாலிபன் அமைப்பு கூறியுள்ளது. காபூல் நகரில் தாலிபன்கள் நுழைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகத் தொடங்கிய பிறகு அவர்கள் விடுத்த முதல் பொதுவெளி அறிவிப்பு இது. ஆப்கானிஸ்தானின் பிற நகரங்கள் அனைத்தையும் கைப்பற்றிய பிறகு ஞாயிற்றுக்கிழமை காபூல் நகரில் நுழையத் தொடங்கினார்கள் தாலிபன்கள்.

      தலைநகரைத் தவிர பிற நகரங்கள் அனைத்தையும் பிடிப்பதற்கு அவர்களுக்கு வெறும் 10 நாள்கள்தான் ஆனது. காபூல் நகரைக் கைப்பற்றிய பிறகு கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது என்று போராளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தாலிபன் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆப்கன் ராணுவ வீரர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

      விமான நிலையங்கள், மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும் என்றும், அவற்றுக்கான சப்ளைகள் நிறுத்தப்படாது என்றும் அந்த அதிகாரி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

      வெளிநாட்டவர்கள் வெளியேற விரும்பலாம். அல்லது அவர்கள் தங்களை தாலிபன் அதிகாரிகளிடம் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

      இன்னும் ஆப்கானிஸ்தானில் உள்ள 5 ஆயிரம் அமெரிக்கப் படையினர் உதவியுடன் தங்கள் தூதரக ஊழியர்களை வெளியேற்றுவதை அமெரிக்கா விரைவுபடுத்துகிறது.

    • பாக்ரம் விமான தளம், சிறைச்சாலையை கைப்பற்றியதாக கூறும் தாலிபன்

      ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு வெளியே உள்ள மிகப்பெரிய விமான தளமான பாக்ரம் விமான தளத்தையும், சிறைச்சாலையையும் கைப்பற்றிவிட்டதாக தாலிபன் கூறுகிறது.

      20 ஆண்டுகள் இருந்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் பயன்பாட்டில் இருந்தது இந்த தளம்.

      அல் காய்தா, தாலிபன் ஆகிய அமைப்புகளுக்கு எதிராக நேட்டோ படைகள் மேற்கொண்ட படையெடுப்பின் கேந்திரமாக இந்த தளம் விளங்கியது.

      ஆனால், கடந்த மாதம் இந்த தளத்தை நள்ளிரவில் சொல்லிக்கொள்ளாமல் விட்டுவிட்டுச் சென்றது அமெரிக்கா.

      டிசம்பர் 2001ல் இந்த தளத்தை கைப்பற்றிய அமெரிக்கா தலைமையிலான படைகள், இதை 10 ஆயிரம் துருப்புகள் தங்கக்கூடிய மிகப்பெரிய தளமாக மாற்றின

      ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகியோர் தாங்கள் அமெரிக்க அதிபராக இருந்தபோது இந்த தளத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

      பாக்ரம் தளத்தில் உள்ள சிறைச்சாலையில் சுமார் 5 ஆயிரம் தாலிபன் சிறைவாசிகள் உள்ளனர். இந்த சிறைவாசிகளை தற்போது விடுவித்துள்ளதாக தாலிபன் வட்டாரங்கள் கூறுகின்றன.

      மனித உரிமை மீறல்களால் அவப்பெயர் பெற்ற அமெரிக்கச் சிறையான குவான்டனாமோ சிறைச்சாலையை ஒத்த ஆப்கன் சிறைச்சாலை என்று இந்த சிறை வருணிக்கப்பட்டது. முதலில் அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட இந்த சிறைச்சாலை 2013ல் ஆப்கானிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • ஐ.நா சிறப்புப் பிரதிநிதியுடன் அதிபர் அஷ்ரஃப் கானி அவசர ஆலோசனை

      ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா சிறப்புப் பிரதிநிதியுடன் அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கானி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், அமைதியான வழியில் ஆப்கானிஸ்தானில் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைக்க அங்குள்ள அமைச்சர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

      இது தொடர்பாக டோலோ டிவி என்ற உள்ளூர் தொலைக்காட்சியில் தோன்றிய ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர், "அமைதியான வழயில் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்படும்," என்று கூறினார். காபூல் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

      இதற்கிடையே ஆட்சி ஒப்படைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்காக தாலிபன் பிரதிநிதிகள் அதிபர் மாளிகை நோக்கி சென்றுள்ளதாக ஆப்கன் அதிகாரியை மேற்கோள்காட்டி அசோசியேட்டட் பிரஸ் என்ற சர்வதேச செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

      முன்னதாக, காபூல் நகர எல்லைகளில் காத்திருக்குமாறு தமது போராளிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தாலிபன்கள் தெரிவித்திருந்தனர்.

    • காபூல் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது - அரசாங்கம்

      ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் பல திசைகளில் இருந்து தாலிபன்கள் நுழைவதாக செய்திகள் வருகின்றன. காபூல் நகரில் அவர்களுக்கு பெரிதாக எதிர்ப்பு இல்லை என்கிறார் பிபிசியின் யால்தா ஹக்கிம். ஆனால், காபூலில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ஆப்கானிஸ்தான் அதிபரின் டிவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காபூலில் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு நடப்பதாகவும், ஆனால், காபூல் நகரம் தாக்கப்படவில்லை என்றும் நாட்டின் பாதுகாப்புப் படையினரும், வெளிநாட்டுக் கூட்டாளிகளும் இணைந்து நகரின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிமுக பெயரில் சசிகலா வாழ்த்து போஸ்டர்கள்

      ஆகஸ்ட் 18ல் பிறந்தநாள் கொண்டாடும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்து 'தூத்துக்குடி வடக்கு மாவட்ட அஇதிமுக சார்பில்' கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான இடங்களில் போஸ்டர் ஒட்டி உள்ளனர். ‘தியாகம் வெல்லும் சின்னம்மா தலைமையில் கழகம் செல்லும்’, ‘திராவிட இயக்கத்தின் ஐந்தாவது அத்தியாயமே', 'அஇஅதிமுக வின் மூன்றாவது தலைமுறையே, ஆகஸ்ட் 18 இல் பிறந்தநாள் காணும் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் தியாக தலைவி சின்னம்மா’ என்றெல்லாம் விளிக்கிறது அந்த சுவரொட்டி.இறுதியில் 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கோவில்பட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்டம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஆப்கன் தலைநகர் காபூலில் நுழைகிறார்கள் தாலிபன்கள்

      ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் கைப்பற்றிய தாலிபன்கள், தலைநகர் கபூலில் அனைத்து பக்கங்களில் இருந்தும் நுழைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று தங்கள் போராளிகளுக்கு சொல்லப்பட்டிருப்பதாகவும், யார் யார் வெளியேற விரும்புகிறார்களோ அவர்களுக்கு பாதுகாப்பான வெளியேறும் வழியை ஏற்படுத்தித் தரும்படி கூறப்பட்டிருப்பதாகவும் தோஹாவில் உள்ள தாலிபன் தலைவர் ஒருவர் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது ராய்டர்ஸ் செய்தி முகமை.

    • டெல்லி விவசாயிகள் போராட்டம் - தமிழ்நாடு விவசாயிகள் பங்கேற்பு

      டெல்லி எல்லைகளில் நடந்துகொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்றுள்ளனர். இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டிராக்டர் பேரணியை அறிவித்தனர். ஆனால், எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் பகுதிகளில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பகுதிகளில் யாரும் நடந்து செல்வது கூட சாத்தியமில்லை என்னும் அளவுக்கு அங்கே போலீஸ் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது. கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் ஏற்பாடு செய்த டிராக்டர் பேரணி டெல்லியின் நடுப்பகுதி வரை வந்துவிட்டது. அப்போது போலீசுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இந்த முறை அப்படி விவசாயிகள் டிராக்டர் பேரணியை முன்னெடுக்க முடியாதபடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

      தமிழ்நாட்டில் இருந்து சென்றிருந்த மதுரையை சேர்ந்த விவசாயி வெள்ளைச்சாமி, பிபிசி தமிழிடம் பேசும்போது, விளைபொருள்களுக்கு விவசாயிகள் விலை நிர்ணயிக்கும் நிலை வரவேண்டும், கூலி, இடுபொருள்கள் விலை அதிகரித்துவிட்ட நிலையில் விவசாய விளைபொருள்களின் விலை உயரவேண்டும், இலவச மின்சார இணைப்புகளை விவசாயிகள் கேட்டவுடன் உடனடியாக வழங்கும் நிலை வேண்டும் என்ற கோரிக்கைகளை தாங்கள் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டார். விவசாயிகள் இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்துவது தங்களுக்குப் பெருமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    • 'எல்லை பாதுகாப்புப் படை எதற்கும் தயார்'

      நாங்கள் இருதரப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடந்து கொள்கிறோம். ஆனால், எப்படிப்பட்ட சூழலையும் எதிர்கொள்ள இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) தயார் நிலையில் உள்ளது என்று பி.எஸ்.எஃப். தலைமை இயக்குநர் எஸ் எஸ் தேஸ்வால்.தெரிவித்துள்ளார். ட்ரோன் தாக்குதல் குறித்தும், ட்ரோன் மூலம் ஆயுதம், போதை மருந்து கடத்தப்படுவது குறித்தும் பேசும்போதுதான் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

      "தொழில் நுட்ப உதவியோடு, எங்களால் எல்லைப் பகுதிகளில் எப்படிப்பட்ட தாக்குதலையும் தடுத்து நிறுத்த முடியும்" என்று அவர் தெரிவித்தார்.அதே போல தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் முன்னேறி வருவது குறித்து கேள்வி எழுப்பிய போது “நாங்கள் எல்லை பாதுகாப்புத் திட்டத்தை தயாரிக்கும் போது, எல்லைப் பகுதியில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் கருத்திக் கொண்டு தான் தயாரிக்கிறோம்” என விடையளித்தார் எஸ் எஸ் தேஸ்வால்.

    • நாடாளுமன்றத்தில் சட்டமியற்றும்போது தரமான விவாதம் நடப்பதில்லை: தலைமை நீதிபதி என்.வி.ரமணா

      நாடாளுமன்றத்தில் சட்டமியற்றும்போது தரமான, போதிய விவாதங்கள் நடப்பதில்லை. இதனால், இந்த சட்டங்களின் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் நடக்கின்றன என்று கருத்துத் தெரிவித்தார் இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா. இந்திய சுதந்திர தின விழாவை ஒட்டி மூவண்ணக் கொடியேற்றும் ஒரு நிகழ்வில் பங்கேற்கும்போதுதான் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

      தரமான விவாதங்கள் இல்லாத நிலையில், நீதிமன்றங்களால் புதிய சட்டங்களின் பின்னணியில் உள்ள நோக்கங்களையும், இலக்குகளையும் புரிந்துகொள்ளமுடிவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். நடாளுமன்றத்தில் போதிய விவாதங்கள் நடத்தாமல், நிலைக்குழுக்களுக்கு விவாதிக்க அனுப்பாமல், முக்கிய சட்டங்களைக்கூட மின்னல் வேகத்தில் நிறைவேற்றுவதாக நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைக்கும் நிலையில் தலைமை நீதிபதி ரமணா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

    • வணக்கம் நேயர்களே!

      தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை இந்தப் பக்கத்தில் நேரலையாக வழங்குகிறோம். நிகழ்வுகளைப் பற்றி உடனடியாக அறிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.