இலங்கையில் கோவிட்-19 வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கம் படிப்படியாக கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது.அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடுவோரை தவிர வேறு எந்தவொரு நபருக்கும், மாகாண எல்லைகளை கடந்த 13ம் தேதி முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.இந்த நிலையில், எதிர்வரும் 17ம் தேதி முதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ நடத்த முடியாது என கோவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.அத்துடன், இன்று (15) நள்ளிரவு முதல் மக்கள் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.உணவகங்களின், முழு பரப்பளவில் 50 வீதமானோரை மாத்திரமே இன்று முதல் அனுமதிக்க முடியும் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.இதேவேளை, இலங்கையில் நேற்று முன்தினம் (13) கோவிட் தொற்று காரணமாக 160 பேர் உயிரிழந்திருந்தனர்.இது நாளொன்றில் பதிவான அதிகளவிலான உயிரிழப்பு என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவிக்கின்றது.இலங்கையில் இதுவரையான காலம் வரை கோவிட் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,935 ஆக அதிகரித்துள்ளது.இலங்கையில் மூன்றாவது அலை பரவி வருகின்ற பின்னணியில், தற்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவிட் டெல்டா திரிபு அடையாளம் காணப்பட்டு வருகின்றது.இவ்வாறு அடையாளம் காணப்படும் டெல்டா திரிபு காரணமாகவே, உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.இலங்கையில் கோவிட் தொற்று காரணமாக 351,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 35,866 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.