You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

மாநிலங்களுக்கான தடுப்பு மருந்தின் விலையை 400ரூபாயிலிருந்து 300ரூபாயாக குறைப்பதாக சீரம் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக உள்ளது. முன்பை விட பாதிப்புகளும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. அதோடு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலர் உயிரிழந்துள்ள செய்திகளும் வெளியாகின. கடந்த நான்கு நாட்களாக இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து 3 லட்சத்தை தாண்டியுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. வாக்கு எண்ணிக்கையின்போது கட்டுப்பாடுகள்

    தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்த நடவடிக்கையில் பங்கேற்கும் நபர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் மூத்த முதுநிலை செயலாளர் சுமித் முகர்ஜி தேர்தல் நடைபெறும் ஐந்து மாநில தலைமைச் செயலாளர்கள், தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆகியோருக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை ஆணையம் ஏற்கெனவே விதித்துள்ளதாகவும் அதன் தொடர்ச்சியாக மேலும் சில கட்டுப்பாடுகளை வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுளளதாகவும் கூறியுள்ளார்.

  2. அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள், மெய்யம்மை, பிபிசி தமிழுக்காக, மதுரையில் இருந்து

    பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட உள் நோயாளிகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

    ஏப்ரல் 21ம் தேதியிலிருந்து கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டவர்கள், என்கிறார் அரசு சித்த மருத்துவக் கல்லூரி அதிகாரி ஒருவர்.

    முதல் நாள் 10 நோயாளிகள் இருந்தனர். இப்போது எண்ணிக்கை 100-ஐ எட்டிவிட்டது என்று கூறும் அவர், நோயாளிகளுக்கு தொற்றின் தீவிரத்தை பொறுத்து சீந்தில் கசாயம், ஆடாதோடை, நிலவேம்பு அல்லது கபசுர குடிநீர் இருவேளை கொடுக்கப்படுகிறது என்கிறார். அத்துடன் சுண்டல், பொங்கல், முருங்கைக்கீரை சூப், மதிய உணவுக்கு சோறுடன் துவரம் பருப்பு சாம்பார், காய், கீரை முதலியவை அங்கேயே சமைத்துப் பரிமாறப்படுகிறது. கசாயமும் அங்குள்ள மருந்து தயாரிப்பு மையத்தில் தயாரிக்கப்படுகிறது.

    மொத்தம் 265 படுக்கைகள் கொண்ட பாளையங்கோட்டை அரசு சித்த கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் இல்லை.

  3. கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா ஊசி போட்டுக் கொள்ளலாமா?

    மாதவிடாய் காலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? கர்ப்பிணிப் பெண்கள் இதனை போட்டுக் கொண்டால் என்னவாகும்? மருத்துவர்கள் சொல்வது என்ன?

  4. கள்ளச் சந்தையில் ரெம்டெசிவீர் - தீர்வு தருமா தமிழக அரசின் முடிவு?, ஆ. விஜயானந்த், பிபிசி தமிழுக்காக

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவீர் மருந்துக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. `மருந்து விநியோகஸ்தர்களை கண்காணித்தால் மட்டுமே விவகாரம் முடிவுக்கு வரும்,' என்கின்றனர் மருத்துவர்கள். என்ன நடக்கிறது?

  5. காஷ்மீரில் கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?, மாஜித் ஜஹாங்கிர், பிபிசி இந்திக்காக

    செவ்வாயன்று, காஷ்மீரில் 3,164 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது கொரோனாவின் இரண்டாவது அலையில் இதுவரை பதிவானதில் மிக அதிக எண்ணிக்கையாகும்.

    காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் 2,134 தொற்றுகள் பதிவாகியுள்ளன. 25 கொரோனா நோயாளிகள் செவ்வாய்க்கிழமை இறந்துள்ளனர். இறந்தவர்களில் 10 பேர் காஷ்மீருடன் தொடர்புடையவர்கள்.

    கடந்த ஒரு மாதத்தில், ஜம்மு-காஷ்மீரில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    ஸ்ரீநகர் மாவட்டத்தில், கொரோனா பரவுவதைத் தடுக்க நிர்வாகம், செவ்வாய்கிழமை அன்று, 144வது பிரிவின் கீழ் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

    காஷ்மீரில் மருத்துவர்களின் அமைப்பான, காஷ்மீர் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நிசார்-உல்ஹசன், காஷ்மீரில்அதிகரித்துவரும் கொரோனா இறப்புகள்,உண்மையில் மக்கள் மருத்துவமனைக்கு வருவதை தாமதப்படுத்தியதன் விளைவாகும் என்று கூறியுள்ளார்.

    " மிகவும் நோய்வாய்ப்படும்போதுதான் அவர்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள்," என்று அவர் தெரிவித்தார்.

    "காஷ்மீரில் உள்ள மருத்துவமனைகளில் ஐ.சி.யு படுக்கைகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. இதனால் நோயால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன,” என்று டாக்டர் நிசார் விளக்குகிறார்.

    கடந்த சில நாட்களாக காஷ்மீரில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

    ஜம்மு காஷ்மீர் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நேரம் மாலை எட்டு மணி முதல் காலை ஆறு மணிவரை இருப்பினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு-காஷ்மீரில், நாள் முழுவதும் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

  6. ஊரடங்கால் முடங்கிய சேலம் மாம்பழ சீசன், சுதாகர், பிபிசி தமிழுக்காக, சேலத்தில் இருந்து

    உலகப் புகழ் பெற்ற சேலம் மாம்பழத்தின் இந்த ஆண்டு சீசன் தொடங்கியுள்ளதால் மாம்பழப்பிரியர்கள்மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ஆனால் வியாபாரிகளோ பெரும் சோகத்தில் உள்ளனர் .

    ஏன் இப்படி? இந்த மாழ்பழ சீசனில் என்னதான் நடக்கிறது?

    முக்கனிகளில் முதல் கனியான மாம்பழம், பழங்களின் ராஜா என்று போற்றப்படுகிறது.மா ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா முக்கிய இடம் வகிக்கிறது.

    ஆண்டுக்கு சுமார் 1.10 கோடி டன்கள் மாம்பழம் இந்தியாவில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

    இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம்தான் அதிகளவில் மாங்கனிகளை உற்பத்தி செய்கிறது என்றாலும் தென்னிந்திய அளவில் ருசியும், வாசனையும் மிகுந்த மாம்பழங்கள் சேலம் மாவட்டத்தில் இருந்து மட்டுமே உற்பத்தியாகின்றன.

    மாவில் 60-க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தபோதிலும் அதிகளவில் விளையும் தோத்தாபுரி எனப்படும் பெங்களூரா (கிளி மூக்கு) மாங்காய்களே அதிகமானவர்களால் அறியப்பட்டுள்ளது. இந்த வகை பழங்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகளவில் விளைகின்றன.

    ஆனால் சேலம், சுற்றுப் பகுதிகளான கருமந்துறை, தும்பல், பேளூர், வாழப்பாடி, சன்னியாசிகுண்டு, மல்லூர்,வரகம்பாடிபனைமரத்துப்பட்டி, சங்ககிரி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், மேட்டூர், மேச்சேரி ஓமலூர், ஏற்காடு அடிவாரம், ஆடையூர் சுற்று வட்டார பகுதிகளில் விளையும்

    சேலம் பெங்களூரா, குண்டு (எ) அல்போன்ஸா, மல்கோவா, இமாம்பசந்த், நடுசாளை, செந்தூரா, குதாதத், மல்லிகா ஆகிய வகையான மாம்பழங்கள் மட்டுமே பொதுமக்கள், குழந்தைகளால் விரும்பி உண்ணப்படுபவைகளாக உள்ளன.

    எந்த பகுதி மாங்கனிக்கும் இல்லாத சிறப்பாக சுவையுடன் கூடிய மணமும் கொண்டிருப்பவை சேலம் மாங்கனிகள் ஆகும். வீட்டுக்குள் மாம்பழம் வைத்திருந்தால் அதன் வாசனை வீதி வரை நுழைந்துவிடும் என்று கூறுவது வழக்கம். சேலத்தில் நிலவும் தட்பவெப்பநிலையும், மண் வளமுமே இதற்கு காரணம் என்று கருதப்படுகிறது.

    இந்த வகை மாம்பழங்கள் சேலத்தில் ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் டன் விளைகின்றன.

    ஆனால் வழக்கத்துக்கு மாறாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கொரானா வைரஸ் தாக்கத்திதால் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது .

    இருப்பினும் ருசி மிகுந்த மாம்பழங்கள் சேலம் கடை வீதியில் உள்ள மொத்த விற்பனை நிலையங்களுக்கு வரத்தொடங்கியுள்ளன.

    அதே சமயம் தருமபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் வெளி மாநில மாம்பழங்களும் வரத் தொடங்கியுள்ள நிலையில் ஞாயிறு மற்றும் புதிய இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால் மாம்பழ வியாபாரிகளை இது சோகத்தில்ஆழ்த்தியுள்ளது.

    இது குறித்து சேலம் மாங்காய், பழ வியாபாரிகள் சங்கத் தலைவர் சீனிவாசன்கூறுகையில், “வழக்கமாக மார்ச் மாதத்தில் மாம்பழ சீசன் தொடங்கும். இந்த ஆண்டு தாமதாகத் தொடங்கினாலும் மே மாதத்தில் வரத்து மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு , தினசரி இரவு ஊரடங்கு ஆகியவை அமலில் உள்ளதால் , மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் , வடமாநிலங்களுக்கும் , மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்க முடியவில்லை .

    சேலம் அருகேயுள்ள வரகம்பாடியில் விளையும் ருசியும் வாசனையும் மிகுந்த மாம்பழங்கள் பிரிட்டிஷ் காலத்தில் இங்கிலாந்து அரண்மனைக்கு அனுப்பப்படுவது வழக்கமாக இருந்துள்ளது.

    மேலும் மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் விளையும் மாம்பழம் குண்டு (எ) அல்போன்ஸா மாம்பழம்தான் சிறப்பு வாய்ந்தவை.

    அந்தரத்தினகிரிக்கே மாங்கன்றுகள் சேலத்தில் இருந்துதான் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுச் செல்லப்பட்டன.

    இப்படிபல்வேறு பெருமைகள் கொண்ட சேலம் மாம்பழங்களின் விற்பனை கடந்த ஆண்டு கொரானாவால் பாதிக்கப்பட்டது இந்த ஆண்டாவதுஅமோகமாக விற்றனையாகும் என்று வியாபாரிகளும் , விவசாயிகளும் நம்பினோம் .ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளஊரடங்கால் வியாபாரம் முடங்கி பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது” என்றார் .

  7. கோவிட் 2ஆம் அலையின் தாக்கத்தை மறைக்கிறதா மத்திய அரசு?

    கொரோனா தொற்றின் 2ஆம் அலையால் மயானங்களில் குவியும் சடலங்கள் - கோவிட் உண்மையான தாக்கத்தை மறைக்கிறதா மத்திய அரசு?

  8. மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகரம், முரளிதரன் காசிவிஸ்வநாதன், பிபிசி தமிழ், சென்னை

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் அதன் பாதிப்பு மிகத் தீவிரமாக இருக்கிறது.

    தமிழ்நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் தினமும் புதிய நோயாளிகள் கண்டறியப்படும் மாவட்டமாக சென்னை இருந்து வருகிறது.

    ஏப்ரல் 27ஆம் தேதி மட்டும் 4,640 பேர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டனர். சென்னையில் மட்டும் 31,136 பேர் இந்நோய்க்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மாநிலத்திலேயே இங்குதான் அதிகமாக - இரட்டை இலக்கத்தில் - உள்ளது.

    ஏப்ரல் 27ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 77 பேர் உயிரிழந்த நிலையில், சென்னையில் மட்டும் 27 பேர் உயிரிழந்தனர்.தமிழ்நாட்டில் நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் புதிதாக ஆக்சிஜன் வசதிகொண்ட 12 ஆயிரம் படுக்கைகளை ஏற்படுத்தும் பணியை மாநில சுகாதாரத்துறை செய்து வருகிறது.

    இதற்கிடையில் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதில் பிரச்சனை இருந்தால், அவற்றை பெற்றுக்கொள்ளும் விதத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாநில அரசு கவுன்டர் ஒன்றைத் திறந்திருக்கிறது.

    போதுமான சான்றுகளுடன் நோயாளிகளின் உறவினர்கள் வந்து, உரிய கட்டணத்தைச் செலுத்தி அந்த மருந்தைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "ரெம்டெசிவிர் என்பது உயிர்காக்கும் மருந்தல்ல. மருத்துவமனையில் தங்கும் நாட்களைக் குறைப்பதற்கான மருந்த மட்டுமே" என மாநில சுகாதாரத் துறைத் தெரிவித்தாலும் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் அந்த மருந்தைப் பெறுவதற்காக கீழ்ப்பாக்கத்தில் குவிந்து வருகிறார்கள்.

    மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி அளிக்கும் திட்டத்தைத் துவங்கவிருப்பதால், 1.5 கோடி தடுப்பூசிகளை வாங்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

  9. முற்றிலும் முடங்கிய தொழில்நுட்ப நகரம் பெங்களூரூ, இம்ரான் குரேஷி, பிபிசி நிருபர், பெங்களூரில் இருந்து

    அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக காலை 6 மணி முதல் 10 மணி வரையிலுமான நேரத்தைத் தவிர்த்து, 14 நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலம். ஒரே நாளில் 31,830 புதிய நோயாளிகள் அங்கு கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஒரு நாளில் 17,550 புதிய நோயாளிகள் என்ற மிக அதிகபட்ச புள்ளிவிவரத்தை பெங்களூரு பதிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதிலுமிருந்த உயிரிழப்புகளான 180-ல் பாதிக்கும் மேற்பட்டதான 97 உயிரிழப்புகள் இந்த நகரில் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவை ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியால் நிர்வகிக்கப்படும் இந்த மாநிலம், தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (டிஏசி), நிபுணத்துவம் பெற்றவைராலஜிஸ்டுகள், தொற்றுநோயியல் நிபுணர்கள் ஆகியோரின் குழு, இவற்றின் பரிந்துரையைஏற்று இந்த முடக்கத்தை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. முதல் அலையை ஒப்பிடும் போது இப்போது ஏற்பட்டுள்ள பரவல் விகிதம் கட்டுக்கடங்காமல் போனதே இதற்குக் காரணம்.

    ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் தேவை குறைந்தது 500 முதல் 700 பேருக்கு ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன்,ஐ சி யு- வில் உள்ள நோயாளிகளின் உயிர் காக்கும் முக்கியமான மருந்துகள் ஆகியவற்றின் பற்றாக்குறை நிலவுவதாகத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அரசுத்தரப்பும் கூட கூறுகிறது.

    இதற்கிடையில், ஜெனோமிக் சீக்வென்சிங் ஆய்வகம் பெங்களூரு மற்றும் கலபுராகியில் 20 நோயாளிகளுக்கு இந்த வைரஸின் இரட்டைப் பிறழ்வு வகை தாக்கியுள்ளதாகக் கண்டறிந்துள்ளது.

    இந்தப் பொது முடக்க அறிவிப்பையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில், கர்நாடகாவின் பெரு நகரங்களிலிருந்து சிறுநகரங்களுக்கும் கிராமங்களுக்கும் மக்கள் வெளியேறிய வண்ணம் இருக்கின்றனர்.

  10. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் என்ன நிலை?

    சேலம் மாவட்டத்தில் கொரொனா பாதிப்பின் முதல் அலையை விட இரண்டாவது அலையில் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை15 மடங்கு அதிகமாக உள்ளது.

    கடந்த ஆண்டு இதே நாளில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 31 மட்டுமே. ஆனால், நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கைமட்டும் 456.

  11. RT-PCR டெஸ்ட் தவறான?முடிவுகளை காட்டுகிறதா?

    கொரோனா அறிகுறிகள் இருந்தும் பரிசோதனையில் நெகடிவ் என முடிவு வருவது ஏன்? - நிபுணர்கள் விளக்கம்

  12. டெல்லியில் உடல்களை எரிக்க இடமில்லை - தொடரும் அவலம்

    டெல்லியில் கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை எரிக்க இடமில்லாததால் திறந்த வெளிகளில் தற்காலிக தகன மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால் டெல்லி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு நிரம்பிவிட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. திங்கள்கிழமை ஒருநாளில் மட்டும் டெல்லியில் 380 பேர் உயிரிழந்தனர்.

  13. இலவச உணவு, உறைவிடம் மருந்துகள் - கடுமையான காலத்திலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

    கோவிட் பெருந்தொற்று பரவல் நாடு முழுவதிலும் தனது கோரத் தாண்டவத்தை அரங்கேற்றி வரும் இந்தச் சோதனையான காலத்தில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித நேயர்களின் குழு ஒன்று, ரோஹ்தக்கில் 200 படுக்கை கொண்ட தனிமைப்படுத்தும் மையத்தை உருவாக்க முன்வந்துள்ளது.

    ரோஹ்தக்கில் பிவானி சாலையில் உள்ள ஜன் சேவா சன்ஸ்தானில் (ஜே.எஸ்.எஸ்) இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

    ஜே.எஸ்.எஸ் தலைவர் சுவாமி பர்மானந்த், தனிமைப்படுத்திக்கொள்ள இட மற்றும் பொருள் வசதி இல்லாத கோவிட் நோயாளிகளுக்காக இந்த மையத்தை அமைத்துள்ளதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

    இங்கு நோயாளிகளுக்கு உறைவிடம், உணவு, மருந்துகள், புத்தகங்கள் மற்றும் வைஃபை வசதிகள் பதினைந்து நாட்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.

    தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு, உணவு சமைக்க வசதி இல்லாத கோவிட் நோயாளிகளுக்கு அவர்களின் இல்லத்துக்கே உணவைக் கொண்டு செல்லும் சேவையையும் இந்த அமைப்பு செய்து வருகிறது.

  14. சேலம்: சிறு கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா - எப்படி?, சக்திவேல், பிபிசி தமிழுக்காக, சேலத்தில் இருந்து

    சேலம் மாவட்டத்தில் கொரொனா பாதிப்பின் முதல் அலையை விட இரண்டாவது அலையில் தினசரி பாதிக்கப்படுபவர்களின்எண்ணிக்கை15 மடங்கு அதிகமாக உள்ளது.

    கடந்த ஆண்டு இதே நாளில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 31 மட்டுமே. ஆனால், நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கைமட்டும்456.

    ஓராண்டுக்குள் கொரோனா பாதிப்பு என்பது ஒரு நாளில் 15 மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 39,873. இதில் குணமடைந்தவர்கள் 35,837 பேர். இதுவரை500 பேர் உயிரிழந்துள்ளனர். 3536 பேர் சிகிச்சைதற்போது பெற்று வருகின்றனர்.

    கடந்த ஆண்டு, ஜூன் மாதம் வரை தினசரி பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 100-க்கு கீழே இருந்தது. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திலேயே கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர ஆரம்பித்தது.

    அக்டோபர் மாதத்தில் புதிய கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 ஆக இருந்தது. அதன்பின்பு, நவம்பர் மாதத்தில் புதியதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-க்கு கீழே குறைந்தது.

    கடந்த ஆண்டு ஊரடங்கின் போது மாவட்ட எல்லையில் காவல்துறை சோதனைச்சாவடி அமைத்துப் பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் குறிப்பாகச் சென்னையிலிருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    ரயில் நிலையங்களில் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது சோதனைச்சாவடிகளும் இல்லை, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து வருபவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை எதுவும் செய்யப்படுவதில்லை. இதனால், பெங்களூரு போன்ற பெருநகரங்களில் ஊரடங்கு அறிவித்தபின்பு அங்கிருந்து சொந்த ஊருக்குத் திரும்புகிறவர்களால் சேலம் மாவட்டத்தின் கிராமப்பகுதியிலும் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஊரகப்பகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்குச் செல்லும்போது கொரோனா பரிசோதனை செய்துவந்தனர். இப்போது ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்குச் செல்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்துகின்றனர்.

    பேருந்துகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதால் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்து பொதுவெளியில் செல்கின்றனர். சமூக இடைவெளி என்பது பெரிய அளவில் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

    கொரோனா தொற்றினால் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் அதிகளவில் அரசு மருத்துவமனையே நாடுகின்றனர். தடுப்பூசி அறிமுகப்படுத்தியபின்பு தற்போது தனியார் மருத்துவமனையை நாடுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுவரை சேலம்மாவட்டத்தில்மருத்துவமனையில் இடமில்லை, ஆக்சிஜன் இல்லை என்பது போன்ற பிரச்னைகள் எதுவும் எழவில்லை.

  15. ராமநாதபுரத்தில் வெறிச்சோடிய சுற்றுலா தளங்கள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான தொழில் மீன்பிடித்தொழில். அடுத்தது சுற்றுலா தொழில். ராமேஸ்வரத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவது வழக்கம்.

    தற்போது கொரோனா இரண்டாம் அலையால் அவை அனைத்தும் முடங்கியுள்ளன.

  16. ’’என் சொத்தை விட மக்கள் உயிர் முக்கியம்’’

    பல லட்சம் மதிப்புள்ள தனது காரை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தில் இலவசமாக ஆக்சிஜன் விநியோகித்து வருகிறார் ஷாநவாஸ் என்ற இளைஞர்.

  17. மருந்து நிறுவனத்தில் தீ விபத்து

    மகாராஷ்டிராவில் உள்ள எம்.ஆர் ஃபார்மா என்ற மருந்து நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு வண்டிகள் இதனை கட்டுக்குள் கொண்டு வந்தன. இதில் எந்த உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

  18. குஜராத் அகமதாபாத் மருத்துவமனையில் நிரம்பி வழியும் நோயாளிகள், தேஜஸ் வைத்யா, பிபிசி குஜராத்தி, அகமதாபாதில் இருந்து

    குஜராத்தின் முக்கிய நகரமான அகமதாபாத் கோவிட் -19 தொற்றுநோயின் பிடியில் கடுமையாகச் சிக்கியுள்ளது. கடந்த வார புள்ளிவிவரங்களின் படி,அகமதாபாத்தில் தினசரி சராசரியாக 5,500 கோவிட் -19 தொற்றுகள் கண்டறியப்பட்டு வந்தன. நாளொன்றுக்குச் சராசரியாக 20 முதல் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

    ஆனால், உண்மையான புள்ளிவிவரங்கள் மறைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கூறப்படுகின்றன.

    நகரின் சிவில்மருத்துவமனைக்கு வெளியே நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வரிசை நீண்டு காணப்படுகிறது.மாநில அரசு படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்த போதிலும் அதுவும் போதுமானதாக இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ள நிலையில் மருத்துவமனைகளில் காணப்படும் காட்சி மிகவும் கோரமானதாகவும் குழப்பம் நிறைந்ததாகவும் இருக்கிறது.

    இந்த நகரம் குஜராத்தின் மிகப்பெரிய நகரமாகும், இது பிரதமர் நரேந்திர மோடியால் திட்டமிடப்பட்ட சபர்மதி ரிவர் ஃபிரண்டிற்குப் பிரபலமானது.

    தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளை இப்போதைக்கு இருக்கிறது.ஆனால் இதற்குப் பிறகு புதிய சப்ளை கிடைக்குமா என்பது குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள். உங்கள் ஆக்சிஜன் செறிவு நிலை 94-95க்குக் குறைவாக இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்க மாட்டோம் என்று முன்னதாகவே நோயாளிகளுக்குத் தெளிவாகக் கூறிவிடும் மருத்துவமனைகளும் உள்ளன.

    அகமதாபாத்தில் உள்ள சில சந்தைகள், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை வணிகத்தைத் தடை செய்து வைக்க முடிவு செய்துள்ளன. நகரின் காலுபூர் பகுதியில் உள்ள தங்க்ஷல் சந்தை ஏப்ரல் 30 முதல் மே 2 வரை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அகமதாபாத் நகரில் உள்ள அனைத்து குடிமை மையங்களும் மே 4 வரை மூடப்படும். மருத்துவ ஆக்சிஜனின் 24 மணிநேர விநியோகத்தை உறுதி செய்வதற்காக நகரத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எது இருந்தாலும்,மருத்துவமனைகள் பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு தான் வருகின்றன.

  19. ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அள்ளித் தரும் கேரளா - எப்படி சாத்தியமானது?

    தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும்போது, தென் மாநிலமான கேரளா மட்டும் தேவைக்கும் அதிகமாகவே ஆக்சிஜனை வைத்துக் கொண்டு நிம்மதியாகச் சுவாசித்து வருகிறது. தேவைப்பட்டால் இன்னும் அதிகமாகவே தயாரிக்க முடியும் என்றும் நம்பிக்கை அளிக்கிறது.

  20. லேசான நம்பிக்கை தரும் புனேவின் புள்ளி விவரங்கள், ராகுல் கெய்க்வாட், பிபிசி மராத்திக்காக, புனேவிலிருந்து

    மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக புனே இருக்கிறது.

    மகாராஷ்டிராவில் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருக்க, ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் படுக்கையை பெறுவதற்கான போராட்டம் போன்ற சில மோசமான நாட்களை இந்த நகரம் கண்டது.

    ஆனால் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் நிலைமை மேம்பட்டு வருகிறது.

    குணமடைபவர்களின் எண்ணிக்கை புதிய தொற்று எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. இந்தப் போக்கு ஒரு வாரமாக தொடர்கிறது. தற்போது பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 54,000 லிருந்து 47,000 ஆக குறைந்துள்ளது

    ஏப்ரல் 19 ஆம் தேதி புள்ளி விவரங்களின்படி, புனேயில் 4587 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன, 6473 நோயாளிகள் குணமடைந்தனர்.

    ஏப்ரல் 26 ஆம் தேதி நகரத்தில் 2538 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர், அதேநேரம், 4351 நோயாளிகள் நலமடைந்தனர்.

    புனேயில் புதிய தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    எனவே குறைந்த எண்ணிக்கையிலான மக்களே இப்போது மருத்துவமனையில் அனுமதி பெறச் செல்கின்றனர்.

    ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகளைப் பெறுவது கடினமாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது.

    மண்டல ஆணையரின் ஏப்ரல் 27 தரவுகளின்படி, 227 ஆக்சிஜன் படுக்கைகளும், 1158 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளும் காலியாக உள்ளன.

    பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கோவிட் பராமரிப்பு மையங்களை திறந்துள்ள காரணத்தால் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த தொற்று நோய் காலகட்டத்தில் ரெம்டிசிவிர் ஊசிமருந்து விவாதங்களின் மையப்புள்ளியாக உள்ளது. புனேவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த மருந்துக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

    சில நாட்களுக்கு முன்பு நோயாளிகளின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் ஆர்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அதற்கான ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டது.

    சீரான விநியோகத்திற்காக ஒரு நோடல் அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆயினும் பிரச்சனை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை.