பிகார் தேர்தல் முடிவுகள்: பாஜக கூட்டணி, காங்கிரஸ், இடதுசாரிகள் வெற்றி, முன்னிலை நிலவரம்
பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் வெல்லப் போவது யார்? அடுத்த பிகார் முதல்வர் யார்? நிதீஷ் குமார்? தேஜஸ்வி யாதவா? வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது. இந்தக் கேள்விகளுக்கு இன்னும் சில மணி நேரங்களில் விடை தெரியலாம்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
இடதுசாரிகள் எத்தனை இடங்களில் முன்னிலை?
இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் 'மகா கட்பந்தன்' கூட்டணியின் ஓர் அங்கமாக இடதுசாரிக் கட்சிகள் போட்டியிட்டன.
மதியம் 3.40 நிலவரப்படி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா மூன்று இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
பிகாரில் பெரிய இடதுசாரிக் கட்சியான மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் (விடுதலை) கம்யூனிஸ்ட் கட்சி 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
பிகாரில் யார் யார் முன்னிலை? யாருக்கு பின்னடைவு?
பட மூலாதாரம், Getty Images
பெருங்கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியிலும், அவரது அண்ணன் தேஜ் பிரதாப் யாதவ் ஹசன்பூர் தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
நிதிஷ் கட்சியில் இருந்தபோது சிறிதுகாலம் முதல்வராக இருந்தவரும், பிறகு பிரிந்து சென்று தனிக்கட்சி ஆரம்பித்து பாஜக கூட்டணியில் போட்டியிட்டவருமான ஜித்தன்ராம் மாஞ்சி தமது தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் வேட்பாளரும், ஷத்ருகன் சின்ஹாவின் மகனும், தந்தையைப் போலவே நடிகருமான லவ் சின்ஹா பங்கிபூர் தொகுதியில் பின்தங்குகிறார்.
"சிராக் பாஸ்வானை பாஜக கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்" ஜேடியு தலைவர்
நிதீஷ்குமார் தலைமையில் ஒரு கூட்டணி பிகாரில் தொடர்ந்து நான்காவது முறையாக (தற்போதைய முன்னிலை நிலவரப்படி) வெற்றி நடை போடுகிறது. ஆனால், நிதீஷ் கட்சியால் இதனை முழுமையாக கொண்டாட முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அவர்களது கூட்டணியில் 110 இடங்களில் போட்டியிட்ட பாஜக 73 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில், 115 இடங்களில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் தற்போதைய நிலவரப்படி 47 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
எனவே கூட்டணி வெற்றிப் பாதையில் சென்றாலும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தம் தலைமையிலான கூட்டணியிலேயே இரண்டாவது கட்சியாகிறது.
பட மூலாதாரம், @KCTyagi
படக்குறிப்பு, கே.சி.தியாகி
என்.டி.டிவியில் இது குறித்துப் பேசிய ஐக்கிய ஜனதா தளத்தின் பொதுச் செயலாளர் கே.சி.தியாகி 'பிராண்ட் நிதிஷ்குமார்' வலுவாக இருப்பதாகவும் இது கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு என்றும் குறிப்பிட்டார்.
தங்கள் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வானை அவர் குற்றம் சாட்டினார்.தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அந்தக் கட்சி பாஜகவை தாக்கவில்லை. மாறாக நிதிஷை மட்டும் தாக்கியது. பாஜகவும் தங்கள் கட்சியும் பிகாரில் ஆட்சியமைக்கும் என்று கூறியபடியே வேறு கூட்டணியில் போட்டியிட்டது.சிராக் பாஸ்வானை பாஜக கட்டுப்படுத்தியிருக்கவேண்டும் என்று என்.டி.டிவி பேட்டியில் குறிப்பிட்டார் கே.சி. தியாகி.
தற்போதைய நிலவரம்
தேர்தல் ஆணைய இணைய தளத் தரவு காட்டும் தற்போதைய நிலவரம்.
பட மூலாதாரம், ECI
50 இடங்களுக்கு முன்னேறவே போராடும் நிதீஷ் கட்சி - ஏன்?
ஒரு காலத்தில் தேசிய அளவில் மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படவேண்டியவர் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தற்போது பிகாரில் 50 இடங்களில் முன்னிலை பெறுவதற்கே போராடிக் கொண்டிருக்கிறது. அவரது கூட்டணி வெற்றிக்குத் தேவையான எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜகவும் அவரையே முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளது.
தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருந்த கட்சி என்ற வகையில் நான்காவது முறையாகவும் கூட்டணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார் நிதீஷ் என்பதால் இது மிக அரிதானது.
பட மூலாதாரம், Getty Images
ஆனால், தமது சொந்த மாநிலத்தில் இவ்வளவு வலுவான அடித்தளம் உள்ள நிதீஷ்குமார் பாஜகவுக்கு தங்கள் கட்சிக்கு ஏறத்தாழ இணையாக 110 இடங்கள் தந்த நிலையில் அவரது கட்சி தற்போது 50 இடங்களுக்கே போராடுகிறது. பாஜக 73 இடங்களில் முன்னிலை கண்டு தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது.இந்த நிலை வெற்றிவரை நீடித்தால் நிதீஷ் தமது சொந்தக் கூட்டணியிலேயே மைனர் பார்ட்னராக - அதாவது இரண்டாவது நிலையில் உள்ள கட்சியாகத் தொடருவார்.இது நிதீஷ் கையில் உள்ள பிகாரை தங்கள் கைகளுக்கே மாற்றிக் கொள்வதற்கு பாஜகவுக்கு கிடைத்த வாய்ப்பா? நிதீஷ் ஒளி மங்குவதன் தொடக்கமா? இல்லை மூன்று முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்த கட்சி சலிப்பையும் மீறி பெற்றிருப்பது பெரு வெற்றிதானா?
தொடர்ந்து பாஜக கூட்டணி முன்னிலை
சி வோட்டர் தரவுகளின்படி தற்போது பாஜக நிதீஷ் கூட்டணி 126 இடங்களிலும், காங்கிரஸ் - தேஜஸ்வி கூட்டணி 105 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
தற்போதைய முன்னிலை நிலவரம் - கட்சி வாரியாக
தேர்தல் ஆணையத் தரவுகள் காட்டும் இப்போதைய முன்னிலை நிலவரம். கட்சிவாரியாக...
பட மூலாதாரம், ECI
கம்யூனிஸ்டுகள் 19 இடங்களில் முன்னிலை
ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், மூன்று கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்த பெருங்கூட்டணி (மகா கட்பந்தன்) பிகார் தேர்தலின் தற்போதைய முன்னிலை நிலவரத்தின்படி சற்று பின் தங்கியுள்ளது.
பாஜக - நிதீஷ் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
ஆனால், பெருங்கூட்டணியில் இடம் பெற்ற மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகளின் முன்னிலை நிலவரம் அவ்வளவு மோசமாக இல்லை.
19 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) (லிபரேசன்) 14 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
144 இடங்களில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் 62 இடங்களிலும், 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 21 இடங்களிலும்தான் முன்னிலை வகிக்கின்றன என்பதை ஒப்பிட்டால், இந்தக் கூட்டணியில் சிபிஐ எம்.எல். கட்சியின் முன்னிலை எவ்வளவு அதிகம் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
அதே நேரம் 6 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், 4 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பாஜக 71 இடங்களில் முன்னிலை: தனிப்பெரும் கட்சியாக உருவாகிறதா?
நிதீஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 110 இடங்களில் போட்டியிட்ட பாஜக 71 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அந்தக் கூட்டணியில் 115 இடங்களில் போட்டியிட்ட நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் 53 இடங்களிலும், எதிரணியில் தேஜஸ்வியின் ராஷ்டிரிய ஜனதா தளம் 60 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
பிரிந்து சென்ற கட்சிகளால் தேஜஸ்விக்கு சேதாரம்?
லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, அவரது ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை மகா கட்பந்தன் என்று அழைக்கப்படும் பெருங்கூட்டணியை அமைத்தன. இந்தக் கூட்டணி தற்போது பின்தங்கி வருகிறது.
எதிரணியில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்பதுடன், அந்தக் கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான அளவு இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இன்னும் இறுதி முடிவு தெரிய காலமாகும் என்றபோதும்.
தேஜஸ்வியின் மகா கட்பந்தன் கூட்டணியில் இருந்து முகேஷ் சாஹ்னியின் வி.ஐ.பி. கட்சி என்று அழைக்கப்படும் விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா போன்ற சிறு கட்சிகள் வெளியேறியது ரா. ஜனதா தளம் கூட்டணியை பாதித்திருக்கும் போலத் தெரிகிறது.
தேர்தல் ஆணையத் தரவுகளின் படி தற்போது விஐபி கட்சி 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தக் கட்சியும், அவாமி மோர்ச்சாவும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.
உபேந்திர குஷ்வாஹாவை முதல்வர் வேட்பாளராக கொண்டு மூன்றாவது அணி அமைந்தது.
பட மூலாதாரம், Getty Images
முந்துகிறது பாஜக கூட்டணி
சி வோட்டர் தருகிற சமீபத்திய தரவுகளின்படி 122 இடங்களில் பாஜக நிதீஷ் கூட்டணியும், 106 இடங்களில் ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலை வகிக்கின்றன. மற்றவை 13 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களில் முன்னிலை?
தேர்தல் ஆணையத் தளத்தில் உள்ள தரவுகள் காட்டும் கட்சிவாரியான முன்னிலை நிலவரம்.
பட மூலாதாரம், ECI
சமீப நிலவரம்
சி வோட்டர் அளிக்கும ் தரவுகளின்படி சமீபத்திய முன்னிலை நிலவரம்:
எந்த வேலைவாய்ப்பு வாக்குறுதி வேலை செய்யும்?
பெருங்கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
இது இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து, இதற்குப் பதிலடியாக பாஜக கூட்டணி 19 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.
வேலையின்மை பிகாரில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், யாருடைய வேலை வாய்ப்பு வாக்குறுதி இளைஞர்களைக் கவர்ந்துள்ளது என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.
ரா. ஜனதா தளம், பாஜக தலா 50 இடங்களுக்கு மேல் முன்னிலை
தேர்தல் ஆணையத் தளத்தில் உள்ள தரவு காட்டும் கட்சி வாரியான முன்னிலை நிலவரம்.
பட மூலாதாரம், ECI
நிலவரம் என்ன?
எந்தெந்த கூட்டணிக்கு எவ்வளவு இடங்கள்?
இழுபறியை நோக்கிச் செல்கிறதா பிகார்? இரு அணிகளும் 117
பிகார் தேர்தல் முடிவு இழுபறியை நோக்கிச் செல்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது,
நமக்கு கிடைத்த தற்போதைய நிலவரப்படி, நிதீஷ் - பாஜக கூட்டணி, தேஜஸ்வி - காங்கிரஸ் கூட்டணி இரண்டுமே தலா 117 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
மறைந்த ராம் விலாஸ் பாஸ்வான் உருவாக்கிய லோக் ஜன சக்தி கட்சி அவரது மகன் சிராக் பாஸ்வான் தலைமையில் பிகார் தேர்தலை எதிர்கொண்டது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்த கட்சி, தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் நிதீஷ் குமாருடன் அதிருப்தி அடைந்து அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறியது.
ஆனால், பாஜகவுடன் தங்களுக்குப் பிரச்சனை இல்லை என்றும் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாகவும் கூறி, தனி அணி அமைத்து இந்தக் கட்சி போட்டியிட்டது.
பாஜக தலைமையிலான தேஜ கூட்டணி பல இடங்களில் பின் தங்குவதற்கு இவரது கட்சி பிரிக்கும் வாக்குகள் காரணமாக இருக்கும் என்று ஆரம்பக் கட்டத் தகவல்கள் கூறுகின்றன.
நெருக்கமாக செல்லும் முன்னிலை நிலவரம்
பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி, பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை விட அபார முன்னிலை பெறுவது போலத் தோன்றியது.
ஆனால் நேரம் செல்லச் செல்ல இரு கூட்டணிகளுக்கும் இடையிலான வேறுபாடு குறைவாக இருப்பதாக நமக்கு வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
120 இடங்களில் ரா.ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியும், 112 இடங்களில் பாஜக, நிதீஷ் கூட்டணியும் முன்னிலை வகிக்கின்றன. மற்றவை எட்டு இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்குமா பாஜக?
தேர்தல் ஆணைய இணைய தளத்தில் உள்ள முன்னிலை நிலவரப்படி 20 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெறுகிறது. மற்ற எல்லா கட்சிகளை விடவும் பாஜக தனி ஒரு கட்சியாக அதிக இடங்களில் முன்னிலை பெறுவதாகத் தெரிகிறது. கூட்டணியாக எந்தக் கூட்டணி அதிக இடங்களைப் பிடிக்கும் என்பது வேறு.
தேர்தல் ஆணைய தளத்தில் உள்ள நிலவரம் இந்தப் படத்தில்: