You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழகத்தில் ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் வரும் ஏழாம் தேதியன்று திறக்கப்படமாட்டாது என்றும், இந்த கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. வரலாற்றிலேயே அதிக அளவு கடன் வாங்கும் அமெரிக்கா

    கொரோனா வைரஸ் தொற்று பரவலால் உண்டாகியுள்ள பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்ய அமெரிக்க அரசு அறிவித்துள்ள நிதியுதவிகள் பட்ஜெட்டில் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதால், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அந்நாடு 3 ட்ரில்லயன் (3 லட்சம் கோடி) டாலர் கடன் வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

    இதற்கு முன்பு ஒரே காலாண்டில் அமெரிக்க அரசு வாங்கிய கடனைவிட இது ஐந்து மடங்கு அதிகம்.

    அந்தத் தொகை 2008 பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் வாங்கப்பட்டது.

    2019 ஆண்டு முழுமைக்கும் சேர்த்து அமெரிக்க அரசு வாங்கிய கடன் 1.28 லட்சம் கோடி அமெரிக்க டாலர் ஆகும்.

    இதுவரை 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவு மதிப்புள்ள நிவாரண உதவிகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

    இத்துடன் அமெரிக்க அரசின் மொத்தக் கடன் சுமார் 25 லட்சம் கோடி டாலராக உள்ளது.

  2. நேற்று நடந்தவை - சில முக்கியச் செய்திகள்

    • ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட 10 மடங்கு கூடுதலாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இருக்கக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
    • ”சீனா வேண்டுமென்றே கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தீவிரத்தை மறைத்துவிட்டதாக” அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர் என அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் கசிந்துவிட்ட அறிக்கை ஒன்று கூறுவதாக ஏபி செய்தி முகமை தெரிவிக்கிறது.
    • சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 573 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஐந்து பேர் மட்டுமே சிங்கப்பூரர்கள். மற்ற அனைவரும் அந்நியத் தொழிலாளர்கள்.
    • கொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் பெண் ஒருவர் இறந்துள்ளார். இவரே கொரோனாவால் அந்நாட்டில் இறக்கும் முதல் பெண் ஆவார். இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.
    • தமிழகத்தில் மே 7ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும், நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படாது.
    • ஐரோப்பாவில் சில நாடுகளில் இன்று முதல் முடக்கநிலை தளர்த்தப்படுவதை அடுத்து, அந்நாடுகளின் அரசுகள் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் தங்களின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளன.
  3. வணக்கம் நேயர்களே!

    கொரோனா வைரஸ் தொடர்பான தமிழக, இந்திய மற்றும் சர்வதேச செய்திகளை உங்களுக்காக பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து செய்தியாளர்கள் விஷ்ணுப்ரியா ராஜசேகர் மற்றும் விக்னேஷ் ஆகியோர் தொகுத்து வழங்குகிறோம்.

    கோவிட்-19 கொரோனா தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இங்கு உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.