தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்துள்ள நிலையில், கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் ஓரிரு வாரங்களாக தினசரி உயிரிழப்புகள் குறைந்து வருகின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?

  2. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.

    மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  3. இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள்

    • ஐரோப்பாவில் பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளில் இன்று முதல் முடக்கநிலை தளர்த்தப்பட்டது
    • .ரஷ்யாவில் இன்று புதிதாக 10,581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து, 45 ஆயிரத்தை கடந்துள்ளது.
    • தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிதாக 10 ஆயிரத்துக்கும் மேலானவர்களுக்கு ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,836ஆக அதிகரித்துள்ளது.
    • நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 2,573 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    .

    • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 527 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் மே 7ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  4. ஊரடங்கு தளர்வு: சென்னை இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா?

  5. இத்தாலியில் நிகழ்ந்த கொரோனா உயிரிழப்புகள் குறித்து புதிய சர்ச்சை

    இத்தாலியில் 8 வாரங்களுக்கு அமலில் இருந்த முடக்கநிலை இன்று சற்றே தளர்த்தப்பட்ட நிலையில், அந்நாட்டின் பதிவான உயிரிழப்புகள் குறித்து ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

    இதுவரை அங்கு பதிவான மரணங்களின் எண்ணிக்கையை விட கூடுதலான எண்ணிக்கையில் மரணங்கள் நிகழ்ந்திருக்கும் என புதிய அறிக்கை ஓன்று தெரிவித்துள்ளது.

    இத்தாலியின் தேசிய புல்லியல்துறை அமைப்பான ஐஎஸ்டாட் அமைப்பு கூறுகையில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பல ஆயிரக்கணக்கான கூடுதல் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கும் என்றும் அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

    உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இத்தாலியில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ கணக்கின்படி இதுவரை அங்கு 28,884 பேர் இறந்துள்ளனர்.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  6. ‘ஜெர்மனியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 மடங்கு அதிகமாக இருக்கக்கூடும்’

    ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கையை விட 10 மடங்கு கூடுதலாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இருக்கக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

    பான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஜெர்மனியில் கிட்டத்தட்ட 18 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

    ஜெர்மனியில் இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஐந்தில் ஒருவருக்கு பாதிப்பு இருந்தபோதிலும், அறிகுறிகள் இல்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று முதல் ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்ட முடக்கநிலை தளர்த்தி கொள்ளப்பட்டுள்ளது.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  7. சென்னையில் 266 புதிய கொரோனா நோயாளிகள். என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

  8. சிங்கப்பூரில் அண்மைய நிலவரம் என்ன?

    சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று ஒரே நாளில் 573 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர்களில்ஐந்து பேர் மட்டுமே சிங்கப்பூரர்கள் என்றும், மற்ற அனைவரும் அந்நியத் தொழிலாளர்கள் என்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    சிங்கப்பூரில்இதுவரை18,205 பேர்கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 579 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 569 பேர் தங்குவிடுதிகளில் தங்காத அந்நியத் தொழிலாளர்கள் ஆவர்.

    ஒட்டுமொத்த நோயாளிகளில் 15,833 பேர், அதாவது 87 விழுக்காட்டினர் அந்நியத் தொழிலாளர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  9. அந்நியத் தொழிலாளர்கள் அனைவருக்கும் கோவிட்-19 பரிசோதனை: மலேசிய அரசு முடிவு

    மலேசியாவில் பணியாற்றும் அனைத்து அந்நியத் தொழிலாளர்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான செலவை அவர்களைப் பணியமர்த்தியுள்ள நிறுவனங்களே ஏற்க வேண்டும் என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.

    சிங்கப்பூரில் அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளது. இதையடுத்து நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அந்நியத் தொழிலாளர்களுக்கு கோவிட்-19 நோய் உள்ளதா என்பதைக் கண்டறிய அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூர் வழியைப் பின்பற்றி மலேசிய அரசும் அந்நியத் தொழிலாளர்களுக்கு பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளது.

    "கடந்த இரு தினங்களாக வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கட்டுமானத் துறையில் பணியாற்றும் அந்நியத் தொழிலாளர்கள்.

    "இதையடுத்து இன்று நடத்தப்பட்ட ஆலோசனையில் கட்டுமானத்துறை, தொழிற்சாலைகள், உணவகங்களில் பணியாற்றும் அந்நியத் தொழிலாளர்கள் அனைவருக்கும் கோவிட்-19 நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை நடத்தப்படுவது கட்டாயமாகிறது. இதற்கான செலவை தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவனங்கள், முதலாளிமார்கள் ஏற்க வேண்டும்," என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி இன்று செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

    மலேசியாவில் இன்றைய நிலவரம்:

    மலேசியாவில்இன்றுபுதிதாக55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,353ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 நோயில் இருந்து முழுமையாக குணமடைந்து 71 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,484ஆக அதிகரித்துள்ளது.

    தற்போது1,764 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 28 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 105ஆக நீடிக்கிறது.

    கொரோனா வைரஸ் மலேசியா

    பட மூலாதாரம், Getty Images

  10. கொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் உயிரிழந்த முதல் பெண்

    இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.

    ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 72 வயதான பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

    ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இந்த பெண் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    குருநாகல் - பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

    குறித்த பெண் ஏற்கனவே சிறுநீரக பாதிப்பிற்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

    இலங்கையில் இதற்கு முன்னர் 7 பேர் உயிரிழந்திருந்ததுடன், அவர்கள் அனைவரும் ஆண்களாவர்.

    கோவிட்-19 தொற்றுக்குள்ளாகிய நிலையில் இலங்கையில் உயிரிழந்த முதலாவது பெண் இவராவார்.

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 721 பேர் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் 520 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 194 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.

    கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 137 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

  11. தமிழகத்தில் மே 7ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறப்பு

    தமிழகத்தில் மே 7ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மதுபானக்கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் எல்லை பகுதிகளில் உள்ள மக்கள் அருகிலுள்ள மாநிலத்திற்கு சென்று மதுபானத்தை வாங்க முற்படுவதால் மாநிலங்களுக்கு இடையிலான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இவற்றை கருத்திற்கொண்டு, தமிழ்நாட்டிலும் வரும் மே 7ஆம் தேதி முதல் மதுக்கடைகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனினும், நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நோய் கட்டுப்பாட்டு பகுதி அல்லாத இடங்களில் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் ஆறு நிபந்தனைகள் பின்பற்றப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மதுபானக்கூடங்கள் திறக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.மதுபானக்கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படவேண்டும், ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி ஆறு அடி தூரமாக பராமரிக்கப்படவேண்டும், மதுபானக்கடைகளில் ஒரேநேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.மதுபானக்கடைகள் காலை 10.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து மதுபான கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும், ஒவ்வொரு கடைகளிலும் தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சித்தரிக்கும் படம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சித்தரிக்கும் படம்
  12. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்தது ஏன்?

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 500க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    கோயம்பேடு சந்தைக்கு சென்ற வியாபாரிகள் பலருக்கும் நோய் தொற்று இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று (மே 4) அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  13. கோயம்பேடு சந்தை இடமாற்றம்

    பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கோயம்பேடு சந்தை நாளை (மே 5) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அதன் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் வருகின்ற வியாழக்கிழமை (மே 7) முதல் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து காய்கறிகளை வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவில் 43 ஆயிரத்தை நெருங்கும் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு

    இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,836ஆக அதிகரித்துள்ளது.

    நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 2,573 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்த 83 பேரையும் சேர்த்து, இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,389ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் இதுவரை 11,762 பேர் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், Getty Images

  15. தமிழகத்தில் ஒரேநாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழகத்தில் இன்று (மே 4) ஒரே நாளில் 527 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

    இதையடுத்து இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,550-ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் இந்த தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் இந்த நோய்தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1409-ஆக உயர்ந்துள்ளது.

  16. ‘இந்தியாவில் ஒரேநாளில் 1074 பேர் குணமடைந்துள்ளனர்’

    கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தி, 533-ஆக (42,533) அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    இதுவரை 11,706 பேர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 1074 பேர் குணமாகியுள்ளனர். இதுநாள் ஒரே நாளில் அதிக அளவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுதான் என்றும் லாவ் அகர்வால் மேலும் தெரிவித்தார்.

    இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சதவீதம் தற்போது 27.52-ஆக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கோவிட்-19 போன்ற தொற்றில், முடக்கநிலை தளர்த்தப்பட்டவுடன், சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மதிக்கப்படவில்லையெனில், மீண்டும் இந்த தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

    ANI

    பட மூலாதாரம், ANI

  17. இரண்டாவது நாளாக ரஷ்யாவில் 10 ஆயிரம் தொற்றுகள்

    ரஷ்யாவில் இன்று (மே 4) புதிதாக 10,581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து, 45 ஆயிரத்தை கடந்துள்ளது.

    தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிதாக 10 ஆயிரத்துக்கும் மேலானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனா, துருக்கி, இரான் ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விஞ்சியுள்ளது.

    கடந்த வாரத்தில் ரஷ்ய பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு மக்களை தொடந்து இருக்கவேண்டுமென அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  18. திருப்பூரில் 300க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்

    சொந்த ஊருக்கு செல்ல ரயில் வசதி செய்து தரக்கோரி திருப்பூரில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள், ரயில் நிலையம் எதிரே இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் திருப்பூரில் வசித்து வரும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமலும், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும் தவித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு தொழிற்சாலை உரிமையாளர்களும், தன்னார்வலர்களும், மாவட்ட நிர்வாகத்தினரும் உணவுகளை வழங்கி உதவி வருகின்றனர்.

    இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். ஆனால், பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால், பீகார், ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல ரயில் வசதி செய்யக்கோரி, திருப்பூர் ரயில்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் போலீஸார் வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

  19. கொரோனா வைரஸ்: ஊரடங்குக்கு பிறகான உங்களின் பயணம் எவ்வாறு இருக்கும் தெரியுமா?

    கடலில் குளித்துவிட்டு கடற்கரையில் ஓய்வு எடுப்பவர்கள் கூட கண்ணாடி திரைகள் மூலம் பிரிக்கப்பட்டு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும். விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் முன்பு இரத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோம். இது சற்று அச்சுறுத்தலாக இருந்தாலும், உண்மையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன் பயணிகளை பாதுக்காப்பாக உணர செய்ய சில பயண நிறுவனங்கள் புதிதாக பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

    சர்வதேச அளவிலான பயணம் குறித்து நாம் விரைவாக திட்டமிடுகிறோம் என்று கூட பலருக்கு தோன்றலாம். ஆனால் அதுவும் உண்மைதான். அர்ஜென்டினா தனது விமான போக்குவரத்தை செப்டம்பர் மாதம் வரை இயக்கும் திட்டமில்லை என அறிவித்துள்ளது. அதேபோல பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த முறை விடுமுறை நாள் பயணத்திற்கு தான் எந்த முன்பதிவும் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images