You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

காமன்வெல் 2022: தங்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் - பதக்கம் குவிக்கும் இந்திய வீரர்கள்

காமன்வெல்த் போட்டியின் எட்டாம் நாளான வெள்ளிக்கிழமை இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகிறார்கள். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர். மற்ற வீரர்களும் பதக்கங்களை குவித்து வருகிறார்கள். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ, பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

  2. தைவானை தனிமைப்படுத்த சீனாவை அனுமதிக்க மாட்டோம்: நான்சி பெலோசி

  3. என்எல்சி விவகாரம் - பிரதமர் மோதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    தமிழ்நாட்டில் உள்ள என்எல்சி திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் தேர்வில் முன்னுரிமை வழங்குவதை உறுதி செய்திடக்கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் சிறப்புத் தேர்வின் மூலம் நியமிக்கப்பட வேண்டும் எனவும், கேட் (GATE) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சிப் பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் என்று 2022 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி, தான் ஏற்கெனவே எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டதை வலியுறுத்தியுள்ளார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அழுத்தமான நியாயம் இருப்பதால், இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு விரைவில் சாதகமானதாக முடிவு எடுக்க வேண்டுமென முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

  4. "போதைப் பொருளை முற்றிலும் ஒழிக்க முழு ஒத்துழைப்பும், ஆதரவும் வேண்டும்" - ஸ்டாலின்

    போதைப் பொருளை முற்றிலும் ஒழிக்க முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும் என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "போதைப் பாதை அழிவுப் பாதை என்பதை நாடும் நாட்டு மக்களும் அறிவார்கள். தற்செயலாகவோ, தவறுதலாகவோ அதனைப் பயன்படுத்துபவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி, மொத்தமாக அதனுள் மூழ்கிவிடுகிறார்கள்.

    போதைப் பொருட்கள் அவர்களது சிந்தனையை அழித்து விடுகிறது. வளர்ச்சியைத் தடுத்து விடுகிறது. எதிர்காலத்தைப் பாழாக்கி, அவர்களது குடும்பத்தையும் அழித்து விடுகிறது.

    இது சமூகத்தின் - நாட்டின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கின்றது. சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களை முற்றிலும் அழித்தாக வேண்டும். அதனை யாரும் சிறிதளவு கூட பயன்படுத்தாமல் தடுத்தாக வேண்டும்.

    அதன் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு சட்டவழியிலான அனைத்து முறைகளையும் பின்பற்றி வருகிறது.

    போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11-ஆம் நாளை, போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

    அன்றைய நாள், பள்ளி - கல்லூரிகளில் இதுதொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போதையின் தீமைகள் குறித்த காணொளிக் காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தங்களுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

  5. "காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்" - ஜோதிமணி எம்.பி

    காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

    விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவற்றைக் கண்டித்து, இந்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் ராகுல் காந்தி, சசி தரூர் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், தமிழ்நாட்டின் கரூர் தொகுதி எம்.பி ஜோதிமணியும் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்யும் காணொளியை ஜோதிமணி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அப்பதிவில், "இரக்கமற்று மக்களை சித்திரவதை செய்யும் மோதியின் கொடுங்கோன்மை ஆட்சியில், விலைவாசி உயர்வு,வேலைவாய்ப்பின்மை, ஜிஎஸ்டி வரிக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் எங்கள் மீதான டெல்லி காவல்துறையின் அடக்குமுறை. அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம். மக்களுக்காகக் களம் காண்போம்" என பதிவிட்டுள்ளார்.

  6. கொள்ளிடத்தில் கரைபுரண்டோடும் வெள்ளம்

  7. கடற்கரைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

    மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரைகளாக பராமரிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நபர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் மறும் திருவான்மியூர் கடற்கரைகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் உபயோகிக்கப்படுவதாலும் அதை பயன்படுத்தும் பொதுமக்கள் கடற்கரையில் தூக்கி எறிவதாலும் அல்லது விட்டுச் செல்வதாலும் கடலில் கலந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

    இத்தகைய மிகப்பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சியின் சார்பில் ஏற்கெனவே அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

    இந்தக் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் 05:08:2022 முதல் மாநகராட்சியின் சார்பில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை என இருவேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.

    மேலும், அதிகபட்ச அபராதமும் விதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரும் அல்லது பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  8. சீர்காழி அருகே தாழ்வான பகுதிகளில் கால்நடைகள் மற்றும் உணவுகளுடன் வெளியேறும் கிராம மக்கள்

    சீர்காழி அருகே தாழ்வான பகுதிகளில் கால்நடைகள் மற்றும் உணவுகளுடன் கிராம மக்கள் வெளியேறி வருகின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே 2 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் சென்று கொண்டிருக்கிறது. கடந்த இரண்டுதினங்களாக குறைவான தண்ணீர் வந்த நிலையில், இன்று காலை முதல் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக, கொள்ளிடம் ஆற்றின் படுகை உள்ளே அமைந்துள்ள நாதல்படுகை முதலை மேடு திட்டு கிராமங்களுக்குச் செல்லும் சாலை வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. அந்த பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்து வருவதால் நாதல் படுகை மற்றும் முதலை மேடை சேர்ந்த கிராம மக்கள் தங்களது கால்நடைகள், உடைமைகளுடன் கிராமத்தை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.

    அதேநேரம், தண்ணீரின் அளவு அதிகரிக்கும் என்பதால் கிராமத்தில் உள்ளே இருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. வருவாய் துறையினர், தீயணைப்புத் துறை, காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கரையோர கிராமங்களில் முகாமிட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  9. முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு 534 கன அடி நீர் திறப்பு

    முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு 4 மதகுகள் வழியாக 534 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறிலிருந்து கேரளாவுக்கு ரூல்கர்வ் (நீர்தேக்கத்தில் நிலைநிறுத்தக்கூடிய நீர் அளவு மற்றும் செயல்பாடு அட்டவணை) அடிப்படையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது.

    தற்போது அணையின் நீர்மட்டம் 137 அடியை எட்டியதால் ரூல்கர்வ் அட்டவணைப்படி கேரளாவிற்கு உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் உள்ள 13 மதங்களில் தற்போது நான்கு மதகுகள் வழியாக கேரளாவிற்கு 534 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீரை திறக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.

  10. போலீசார் தடுப்பை தாண்டிய பிரியங்கா காந்தி

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் போராட்டம் நடைபெற்ற அக்கட்சி அலுவலகம் முன்பு போலீசார் அமைத்திருந்த தடுப்பை தாண்டி குதிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

    இதன்பின்னர், பிரியங்கா காந்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

  11. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீரை திறக்கக் கோரி ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் கடிதம்

    கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீரை திறக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது.

    நேற்று காலை விநாடிக்கு 6,143 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 7,201 கனஅடியாக அதிகரித்தது. இதனால், நீர்மட்டம் 136.95 அடியானது. ரூல்கர்வ் அட்டவணைப்படி ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 10 வரை அணையில் 137.50 அடி வரை தண்ணீர் தேக்கமுடியும்.

    தற்போது அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 2016 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 6,357 மில்லியன் கன அடியாகும். 2014ல் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு, கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது 7வது முறையாக நீர்மட்டம் 136 அடியை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ச்சியாக நீர்மட்டம் அதிகரித்து வருவதனால் இடுக்கி மாவட்டத்திற்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு தொடர்ந்து அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ச்சியாக அதிகரிக்க கூடும் என அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீரைத் திறக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். முல்லைப்பெரியாறு அணை 137 அடியை கடந்த நிலையில் படிப்படியாக நீரை இப்போதிலிருந்து திறக்க வேண்டும். தண்ணீரை திறக்கும் 24 மணிநேரத்துக்கு முன்னர் அறிவிப்பு கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  12. நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

    நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    மீனவர்களுக்கான இன்றைய எச்சரிக்கை:

    மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

    லட்சத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்தக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

    மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

    எனவே, இன்று மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  13. இந்து ராஷ்டிரா: மத வெறுப்பை பரப்பும் ஆயுதமாகும் இசை

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் கைது

    விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவற்றைக் கண்டித்து, இந்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் ராகுல் காந்தி, சசி தரூர் உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

  15. வணக்கம் நேயர்களே

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை எம். ஆர். ஷோபனா வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். தொடர்ந்து இணைந்திருங்கள்.

  16. திருப்பூரில் பேருந்து, கார் மோதி விபத்து - 5 பேர் பலி

    திருப்பூரில் இருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து நேற்று மாலை கொடுவாய் அடுத்த காக்காபள்ளம் அருகே சென்று கொண்டிருந்தபோது தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மகேந்திரா எக்ஸ்யூவி கார் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து வந்து கொண்டிருந்த பாதையில் விழுந்து பேருந்தின் மீது மோதியுள்ளது.

    இதில் பேருந்தும் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தற்போது வரை பலி எண்ணிக்கை 5 ஆக உள்ளது. மேலும் சிலர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  17. நாடு தழுவிய போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி

    வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி தொண்டர்கள்.

  18. அம்பானி vs அதானி: 5ஜி உரிமத்துக்கு போட்டி போடும் பெரு முதலாளிகள்

  19. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடரும் மழை

    தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், நீலகரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதிக கனமழையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  20. தமிழகத்தில் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு சோதனை

    தமிழகம் முழுவதும் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் (IFS) என்ற நிறுவனத்துடன் தொடர்புடைய 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    வேலூரை தலைமை இடமாகக் கொண்டிருக்கும் ஐ எஃப் எஸ் என்ற இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்விஸ் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் பணம் முதலீடு செய்தால் 8000 ரூபாய் மாதம் தருவதாக கூறி பல பேரிடம் முதலீடு பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

    இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேரிடம் பணத்தை வசூல் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் வேத நாராயணன் சகோதரர்கள் ஆவர். காஞ்சிபுரம் ராணிப்பேட்டை மற்றும் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஒரு லட்ச ரூபாய்க்கு அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்ததாக பல்வேறு புகார்கள் வந்த அடிப்படையில், சின்ன காஞ்சிபுரம் மின்மினி சரவணன் என்பவர் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதே போன்று ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிராமத்தில் ஜெகன் என்பவர் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.