முன்னறிவிப்பின்றி அணைகளில் அதிக நீர் திறப்பு கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை குறித்து திருச்சி, கரூர், சேலம் உள்ளிட்ட 12 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது,
- காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் உடனே தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
- பயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட்டிருந்தால் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
- மேற்கண்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.
- போதிய உள்ளூர் அறிவிப்பு தராமல் மக்கள் எதிர்பாராத நேரத்தில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்தக் கூடாது என்றும், குறிப்பாக இரவு நேரத்தில் தண்ணீர் அளவினை வெளியேற்றுவதை அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
- பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான உணவு, குடிநீர், குழந்தைகளுக்கு பால், ரொட்டி போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்யவும் தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்களை அமைக்கவும் தேவைப்படும் இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கிடவும் அறிவுறுத்தினார்.