கள்ளக்குறிச்சி மாணவி உடலைப் பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை நாளை காலையில் பெற்று, இறுதிச் சடங்குகளை முடித்துக்கொள்வதாக அந்த மாணவியின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. தேசிய திரைப்பட விருதுகள்: சூர்யா, அபர்ணா, ஜி.வி. பிரகாஷ், சூரரைப் போற்று, மண்டேலா படங்கள் தேர்வு

  2. இலங்கை ராணுவத்தின் தாக்குதல்: பிபிசி செய்தியாளர் நேரில் கண்டது

  3. அமெரிக்கா டு சென்னை: அறுவை சிகிச்சைக்காக 26 மணிநேரம் பயணித்து வந்த நோயாளி

  4. போலி ஆவண பாஸ்போர்ட், கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு கூடுதல் அழுத்தம் ஏன்? அண்ணாமலை பேட்டி

  5. கோனோகார்பஸ்: இந்தியா, பாகிஸ்தானை அச்சுறுத்தும் மரங்கள் - தீர்வு என்ன?

  6. நேயர்களுக்கு நன்றி!

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.

    இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:

    • இலங்கையில் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தியது தொடர்பாக தமிழ்நாட்டின் 22 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன்பு நடத்திய சோதனை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை நாளை காலையில் பெற்று, இறுதிச் சடங்குகளை முடித்துக்கொள்வதாக அந்த மாணவியின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
    • நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆயுதம் தாங்கிய படைகளை ஈடுபடுத்தும் வகையிலான உத்தரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ளார்.
    • ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.எஸ். ரவீந்திரநாத்தை அ.தி.மு.க. உறுப்பினராகக் கருதக்கூடாது என்ற எடப்பாடி தரப்பின் கோரிக்கைக்கு வி.கே. சசிகலா எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • காவல்துறை செய்தித்தொடர்பாளர் எஸ்.எஸ்.பி.நிஹல் தல்டுவா பிபிசி செய்தியாளர் தாக்கப்பட்டது குறித்து தனக்குத் தெரியவில்லை என்றும் அதுகுறித்து விசாரிப்பதாகவும் கூறியுள்ளார்.
    • இலங்கையின் புதிய அமைச்சர்கள் இன்று பிரதமர் அலுவலகத்தில் பதவி பிரமானம் செய்துகொள்கின்றனர்.
    • அரவிந்த் கெஜ்ரிவாலின் மதுபானக் கொள்கை பற்றி சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்த ஆளுநர்
    • 68-வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த நடிகர்களாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகர் சூர்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
    • கள்ளக்குறிச்சி வன்முறையின்போது எடுத்த பொருட்களை பொதுமக்கள் திருப்பிக் கொண்டுவந்து வைத்துள்ளனர்.
    • போராட்டக்காரர்களுக்கு எதிராக காலிமுகத் திடலில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தனது கவலைகளை இலங்கையிலுள்ள அமெரிக்க தூதர் ஜுலி சங் வெளிப்படுத்தினார்.
  7. எல்டிடிஇ எழுச்சிக்காக ஆயுதங்களை கடத்தியதாக சோதனை நடத்திய என்ஐஏ

    இலங்கையில் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தியது தொடர்பாக தமிழ்நாட்டின் 22 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன்பு நடத்திய சோதனை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த விவகாரம் தொடர்பாக புதிதாக வழக்குப்பதிவு செய்த என்ஐஏ, தமிழ்நாட்டில் சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் குற்றம் சாட்டப்பட்ட மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாக கூறியுள்ளது.

    இலங்கை போதைப்பொருள் மாஃபியாவை சேர்ந்த சந்தேக நபரான குணா என்ற சி குணசேகரன், பூக்குட்டி கண்ணா என்ற புஷ்பராஜா ஆகியோர், "பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போதைப்பொருள் மற்றும் ஆயுத சப்ளையர் ஹாஜி சலீமுடன் இணைந்து" செயல்பட்டதாக தெரிவித்துள்ளது.

    "இந்த போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல்காரர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் செயல்பட்டு, விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி பெறவும் அதன் வன்முறை நடவடிக்கைகளை மேலும் முன்னெடுப்பதற்காகவும் பணியாற்றி வருவதாக என்ஐஏ கூறியிருக்கிறது.

    இந்தப்பின்னணியிலேயே தமிழ்நாட்டின் 22 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியதாக தெரிய வந்திருக்கிறது.

  8. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - அடுத்தகட்ட விசாரணை 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது இருவரும் உயிரிழந்தனர்.

    இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது.

    அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகினர்.

    இதனையடுத்து இன்று வழக்கின் சாட்சிய விசாரணையின்போது, இந்த வழக்கு தொடர்பாக, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த, பெண் காவலர் ரேவதியிடம் சம்பவம் நடந்தப்போது வாக்குமூலம் பெற்ற தூத்துக்குடி நீதிபதி சக்திவேல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

    இதனையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜூலை 29ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

  9. விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

    விருதுநகர்

    2020-21ம் ஆண்டு விவசாய நிலங்களில் பயிர் அறுவடை கணக்கில் தவறு நடந்துள்ளதை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஓவர் இன்சூரன்ஸ் என்ற பெயரில் உள்ள பயிர் காப்பீட்டிலிருந்து சிறு, குறு விவசாயிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

    அருப்புக் கோட்டை தாலுகா, சவ்வாஸ்பரம், வெம்பக்கோட்டை, ராமநாதபுரம் முத்தண்டியாபுரம் ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயிர்க்ககாப்பீடு தொகையாக 300-500 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளை அவமதிக்கும் விதமாக உள்ளதாக, அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி அழைத்து பேசி உடனடியாக தீர்வு காண்பதாக தெரிவித்தார். தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லையெனில், காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

  10. எடப்பாடி தரப்பு கோரிக்கைக்கு சசிகலா எதிர்ப்பு

    சசிகலா

    பட மூலாதாரம், Getty Images

    ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.எஸ். ரவீந்திரநாத்தை அ.தி.மு.க. உறுப்பினராகக் கருதக்கூடாது என்ற எடப்பாடி தரப்பின் கோரிக்கைக்கு வி.கே. சசிகலா எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. பெயரைச் சொல்ல யாருமே வேண்டாமென கண்மூடித்தனமாக முடிவெடுப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "தன் சொந்த விருப்பத்திற்காக, நாடாளுமன்றத்தின் மக்களவையில் கட்சியின் அங்கீகாரத்தையே அழிக்க நினைப்பதை, தன் உடம்பில் உண்மையான அண்ணா திமுக இரத்தம் ஒடுகின்ற கழகத் தொண்டர்கள் யாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்", என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

  11. திண்டுக்கல் - நீச்சல் குளத்தில் தண்ணீரில் மிதந்து கொண்டு செஸ் விளையாடிய மாணவர்கள்

    செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு

    திண்டுக்கல்லில் நீச்சல் குளத்தில் தண்ணீரில் மிதந்து கொண்டு செஸ் விளையாடி மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் 2022 ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீச்சல் குளத்தில் தண்ணீரில் மிதந்தவாரு 14 போர்டுகளில் 28 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு செஸ் விளையாடினர்.

    செஸ் ஒலிம்பியாட்
    செஸ் ஒலிம்பியாட்
  12. மீண்டும் அரசியலுக்கு வருவதாக தமிழருவி மணியன் அறிவிப்பு

    தமிழருவி மணியன்

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, தமிழருவி மணியன் (கோப்புப்படம்)

    அரசியலில் இருந்து விலகுவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்த தமிழருவி மணியன், தற்போது மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

    2020இல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து, அரசியலில் நேர்மை, உண்மை, ஒழுக்கம் முக்கியம் இல்லை என்றும், வைரத்துக்கும் கல்லுக்கும் வித்தியாசம் இல்லாத இடத்தில் சாதிக்க எதுவும் இல்லை என்றும் மணியன் அறிவித்திருந்தார்.

    முன்னாள் காங்கிரஸ் தலைவரான தமிழருவி மணியன், 2020இல் நடிகர் ரஜினிகாந்தால் உத்தேசிக்கப்பட்ட அவரது கட்சியின் ஏற்பாடுகளை மேற்பார்வையிடவும் ஒருங்கிணைக்கவும் நியமிக்கப்பட்டார்.

    ஆனால், உடல்நல காரணங்களால் அரசியலில் ஈடுபடுவதில்லை என்று ரஜினிகாந்த் முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து தமிழருவி மணியன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்,

    "அரசியல் உலகில் நேர்மை, உண்மை, ஒழுக்கம் ஆகியவற்றுக்கு மதிப்பில்லை, வைரம், கல் ஆகியவற்றுக்கு இடையே பாகுபாடு இல்லாத இடத்தில் எதையும் சாதிக்க முடியாது" என்று அப்போது அவர் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், "மகாத்மா காந்தியின் பெயரில் ‘காந்தி மக்கள் இயக்கம்’ என்ற தமது முந்தைய இயக்கம், இனி முன்னாள் முதல்வர் கே.காமராஜரின் நினைவாக, "காமராஜ் மக்கள் இயக்கம்" என்ற பெயரில் புதிய கட்சியாக உருவாகியுள்ளதாக தமிழருவி மணியன் தெரிவித்தார்.

    தமிழ்நாடு அரசியல்

    பட மூலாதாரம்,

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான காரணத்தை அவர் விவரித்துள்ளார். அதன் விவரம்:

    பண அரசியலும், வெறுப்பு அரசியலும் முற்றுகையிட்டிருக்கும் தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த ஆரோக்கியமான நல்லரசியலை வளர்த்தெடுப்பது நம் கடமையாகும். நேர்மையும் நாணயமும் நல்லொழுக்கமும் நிறைந்த, ஊழலின் நிழல் கூடப் படியாத, எல்லாவகையிலும் வெளிப்படைத்தன்மை கொண்ட, வளர்ச்சிப்பாதையில் மாநிலத்தை முன்னெடுத்துச் சென்ற மெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்த அர்ப்பணிப்புடன் கூடிய மக்களை ஒன்றுதிரட்ட மிகக் கடுமையாக ஓர் தூய்மையான அரசியல் வேள்வியில் நாம் அனைவரும் ஈடுபடவேண்டும் என்பது காலத்தின் தவிர்க்கமுடியாத கட்டாயமாகும்.

    53 ஆண்டுகள் நேர்மை பிறழாமல், ஒழுக்கம் தவறாமல், அரசியலைப் பயன்படுத்தி ஒரு ரூபாயும் அறத்திற்குப் புறம்பாகச் சேர்க்காமல் காமராஜர் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன் நான். என் நெடிய அரசியல் பயணத்தில் இன்றுவரை ஓர் ஊராட்சித் தலைவர் தேர்தலில் கூட நான் நின்றதில்லை.

    என் இனம் மீண்டும் காமராஜரின் பொற்கால ஆட்சியைத் தரிசிக்கவேண்டும் என்பதற்குமேல் எந்தக் கனவும் எனக்கில்லை. நான் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் வீணாகிப் போனதில் ஏற்பட்ட விரக்தியில் அரசியலை விட்டே விலகி நிற்பது என்று நான் முடிவெடுத்தது இமாலயத் தவறு என்று உணர்கிறேன். தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு என்று சுயநலமாக வாழ என் மனச்சான்று அனுமதிக்கவில்லை.

    போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் என்று முழு அர்ப்பணிப்புடன் காமராஜர் ஆட்சியைமீண்டும் மலரச் செய்ய என்னை நான் முற்றாக அர்ப்பணித்துவிட்டேன். காமராஜர் ஆட்சி என்ற ஒற்றை இலக்கை நோக்கி நடக்க நான் உருவாக்கிய காந்திய மக்கள் இயக்கம் இன்றுமுதல் காமராஜர் மக்கள் இயக்கம் என்று பெயர் மாற்றம் பெறுகிறது.

    நல்லரசியல் இந்த மண்ணில் செழிக்கவேண்டும், வெறுப்பு அரசியலும, பண அரசியலும் அடியோடு அகற்றப்படவேண்டும், ஊழல் நடைமுறைகள் களையப்படவேண்டும், இனத்தின் நலன்களையும், மாநில உரிமைகளையும் பறிகொடுக்காமல் தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டும், சாதிகளுக்கிடையே சமரசமும், மதங்களுக்கிடையே நல்லிணக்கமும் மேன்மையுறவேண்டும் என்று சிந்திப்பவர்கள் அனைவரும் காமராஜர் மக்கள் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

    அரசியல் களம் வன்முறைக் காடாகிவிட்டது என்று கவலைப்படுபவர்கள், சகல தளங்களிலும் சிஸ்டம் சீரழிந்துவிட்டது என்று சிந்திப்பவர்கள், மாற்று அரசியலை நம் வாழ்காலத்தில் காணவேண்டும் என்று விழைபவர்கள் இனியும் மௌனப் பார்வையாளர்களாக இல்லாமல் வீட்டுக்கு ஒருவர் காமராஜர் மக்கள் இயக்கத்தில் இணைந்து செயலாற்ற அன்புடன் அழைக்கிறேன். அற்புதமான இளைஞர்கள் எனக்குத் தந்த ஊக்கமும், உள்வலியும், உற்சாகமும்தான் மீண்டும் என் அரசியல் பயணத்தைத் தொடங்கச் செய்திருக்கிறது. இதில் சமூக நலனன்றி எள்ளளவும் சுயநலமல்லை என்று அவர் கூறியுள்ளார்.

  13. பிபிசியின் சர்வதேச நேயர்களில் 'இந்தியா' தொடர்ந்து முதலிடம் - GAM அறிக்கை

  14. கள்ளக்குறிச்சி மாணவி உடலைப் பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்

    கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்

    பட மூலாதாரம், Getty Images

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை நாளை காலையில் பெற்று, இறுதிச் சடங்குகளை முடித்துக்கொள்வதாக அந்த மாணவியின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படித்துவந்த மாணவி ஒருவர் கடந்த 13ஆம் தேதியன்று மாடியிலிருந்து குதித்து உயிரிழந்தார். ஆனால், தனது மகளின் மரணத்தில் சந்தேகமிருக்கிறது என்று கூறிய அந்த மாணவியின் பெற்றோர், தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமித்து பிரேதப் பரிசோதனையை நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் 3 அரசு மருத்துவர்களும் ஓர் ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரும் சேர்ந்து உடற்கூராய்வு நடத்த வேண்டுமென உத்தரவிட்டது.

    அதனை ஏற்காத மாணவியின் பெற்றோர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியது.

    இந்த நிலையில், மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பாக முறையீடு செய்யப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்ற உத்தரவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்படி அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்ற உத்தரவு இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்கு விசாரணைக்கு வந்தபோது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தடயவியல் துறையைச் சேர்ந்த செல்வக்குமார் சில விளக்கங்களை அளித்தார். இதற்குப் பிறகு நீதிபதி மாணவியின் பெற்றோர் தரப்பைப் பார்த்து நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை பெற்றுக்கொள்ள ஏன் மறுக்கிறீர்கள், ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்னை செய்வது ஏன் என்று கேள்வியெழுப்பியதோடு, மகளின் உடலுக்கு கண்ணியமாக இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டுமென்றும் கூறினார். நாளை காலை 11 மணிக்குள் பெற்றோர் உடலைப் பெற்றுக்கொள்ளவில்லையெனில், காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறினார்.

    இதையடுத்து, நாளை காலை ஆறு மணி முதல் 7 மணிக்குள் உடலைப் பெற்று இறுதிச் சடங்குகளை நாளையே நடத்தி முடித்துவிடுவதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் சிலர் செயல்பட்ட விதம் குறித்து கண்டனம் தெரிவித்த நீதிபதி, மாணவியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மூன்று மருத்துவர்களும் தடயவியல் நிபுணரும் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

  15. ரஷ்ய ஏவுகணை அமைப்பு: இந்தியாவுக்கு அனுமதி, துருக்கிக்கு தடை - அமெரிக்கா ஏன் இப்படி செய்தது?

  16. காலி முகத்திடலில் அமைதி போராட்டம் - நேரலை

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

    டெல்லியில் 2020ம் ஆண்டுக்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. 5 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன.

    சிறந்த தமிழ் திரைப்படம் - சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

    சிறந்த நடிகர் - சூர்யா (சூரரைப் போற்று)

    சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)

    சிறந்த இசையமைப்பாளர் - ஜி. வி. பிரகாஷ் (சூரரைப் போற்று)

  18. சேலத்தில் அமைச்சர் நேருவின் கார் முன்பாகத் தீக்குளிக்க முயன்ற தம்பதி

    சேலத்தில் அமைச்சர் நேருவின் கார் முன்பாகத் தீக்குளிக்க முயன்ற தம்பதி

    சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை சேலம் நாமக்கல்,தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.

    இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அமைச்சர் நேருவின் கார் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

    அப்போது சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகேயுள்ள வேலநத்தத்தைச் சேர்ந்த தினேஷ் குப்தா மற்றும் அவரது மனைவி லட்சுமி, பெண் குழந்தையுடன்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

    இவர்கள் அமைச்சர் நேருவின் கார் நிறுத்தியிருந்த பகுதிக்கு வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தாங்கள் மறைத்து எடுத்து வந்திருந்த மண்ணெண்ணை கேனை திறந்து தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீ வைக்க முயன்றனர்.

    சேலத்தில் அமைச்சர் நேருவின் கார் முன்பாகத் தீக்குளிக்க முயன்ற தம்பதி

    இதைப் பார்த்த அமைச்சர் நேருவின் பாதுகாப்பு போலீசார் அங்கு ஓடி வந்து மண்ணெண்ணை கேனை பறித்தனர். பின்னர் அமைச்சர் நேருவின் காரிலிருந்த தண்ணீர் பாட்டில்களை எடுத்து வந்து கணவன் மனைவி மீது ஊற்றி அவர்களைச் சமாதானப்படுத்தினர்.

    இதைத் தொடர்ந்து கணவன், மனைவி, பெண் குழந்தை மூவரும் சேலம் நகர காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    இவர்களிடம் டவுன் உதவி கமிஷனர் வெங்கடேசன், காவல் ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர் .அப்போது கடந்த 50 வருடத்திற்கும் மேலாக கோவில் நிலம் ஒன்றில் வசித்து வருவதாகவும்தற்போது இந்த இடத்திலிருந்து காலி செய்யுமாறு சிலர் மிரட்டுவதாகவும் இதனால் தீக்குளிக்க முயன்றதாகவும் தம்பதியர் தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர் .

    பின்னர் காவல்துறையினர் இருவர் மீதும் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  19. பொன். மாணிக்கவேலுக்கு எதிரான புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    பொன். மாணிக்கவேல்

    பட மூலாதாரம், ARUN SHANKAR

    சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேலுக்கு எதிரான புகாரை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் காணாமல் போன சிலைகள் மீட்கப்பட்டபோது அவை முறையாக ஒப்படைக்கப்படவில்லை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளும் கோவில் அதிகாரிகளும் அவற்றைக் கடத்தல்காரர்களுக்கு விற்றதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக இருந்த பொன். மாணிக்கவேல் வழக்குப் பதிவுசெய்தார்.

    அந்த வழக்குகளை ரத்துசெய்ய வேண்டுமென்றும் தங்கள் மீது பொய் வழக்கு பதிவுசெய்த பொன் மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டுமென்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் டிஎஸ்பி காதர் பாட்சா கோரியிருந்தார். அதில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையில், 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் ஆஜரான பொன் மாணிக்கவேல் தரப்பு, தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே வழக்குப் பதிவுசெய்ததாகக் கூறியது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

  20. மரபணு குறைபாட்டால் மாறிய முகம்: சவால்களை சாதனையாக மாற்றிய யுவராஜ்