ராமேஸ்வரத்திலிருந்து நேற்று மீன் பிடிக்கச்
சென்ற ஒரு விசைப்படகையும் அதிலிருந்த 6 மீனவர்களையும்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை
முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து
நேற்று காலை 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதிச் சீட்டு
பெற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
மீனவர்கள் நேற்று நள்ளிரவு இலங்கை
தலைமன்னாருக்கும் நாச்சிகுடாவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது
அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி
மீன் பிடித்ததாக இரண்டு படகையும் அதிலிருந்த 11
மீனவர்களையும் கைது செய்தனர்.
இதில் ஒரு படகும் அதிலிருந்து ஐந்து மீனவர்களும் இயந்திர கோளாறு காரணமாக காற்றின் வேகத்தால் எல்லை தாண்டி வந்ததாக தெரிவித்ததையடுத்து படகை சோதனை செய்த இலங்கை கடற்படையினர் இயந்திர கோளாறு உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்தப் படகையும்அதிலிருந்து 5 மீனவர்களையும் தமிழகத்திற்குத் திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த தூதர் என்பவருக்குச் சொந்தமான மற்றொரு படகையும் அதிலிருந்த பாலமுருகன், அந்தோணி, தங்கபாண்டி, அஜித், கிருஷ்ணன், மடுகு பிச்சை ஆகிய ஆறு மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக படகுடன் கைது செய்த இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் நடத்திய முதல் கட்ட விசாரணைக்குப் பின்னர், ஆறு மீனவர்களும் தலைமன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.