You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மிதமான அறிகுறிகள் தென்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. நன்றி நேயர்களே!

    இன்றைய நேரலை பக்கத்தை இத்துடன் நிறைவு செய்கிறோம். இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய செய்தித் துளிகள் இதோ...

    • இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் நாட்டின் முதல் பெண் பழங்குடியின குடியரசுத் தலைவராகியுள்ளார்.
    • இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் சத்திய பிரமானம் செய்துகொண்டுள்ளார்.
    • மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு பிரசாரங்கள் கோவையில் தொடக்கம்
    • கள்ளக்குறிச்சி சின்னசேலத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள் விடுதி அரசின் அனுமதி பெறாமல் இயங்கி வந்தது மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மிதமான அறிகுறிகள் தென்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
    • எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
    • தான்சானியாவிலிருந்து வந்த நபரிடமிருந்து 8.86 கோடி ரூபாய் மதிப்பிலான 1.266 கிலோ ஹெராயினை சென்னை விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
    • அமலாக்கத்துறை சோனியா காந்தியிடம் நேஷனல் ஹெரால்ட் வழக்கில் இன்று விசாரணை நடந்தியது.
  2. பள்ளி மாடியில் இருந்து ஒன்பதாம் வகுப்பு மாணவி குதித்து தற்கொலை முயற்சி

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9ம்வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், பள்ளியில் இன்று அலகு தேர்வு நடைபெற்றதாக தெரிகிறது. இந்தத் தேர்வு எழுத வந்த மாணவி பிட் எடுத்து வந்ததாகவும், அதை ஆசிரியர் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

    மேலும், பெற்றோர்களிடம் தெரிவிக்கிறேன் என ஆசிரியர் கூறியதாக தெரிகிறது. இதனால், அச்சமடைந்த மாணவி பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்த மாணவியை ஆசிரியர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தகவல் அறிந்த மாமல்லபுரம் டிஎஸ்பி.ஐகதீஸ்வரன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்தும் மற்றும் இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர்கள், சக மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  3. கோவை: நான்கு மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு

    தமிழ்நாட்டில் இன்று 2093 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் அதிகபட்சமாக சென்னையில் 516, செங்கல்பட்டில் 269, கோவையில் 178 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தமிழக அளவில் இன்று கோவையில் மட்டும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கோவை மாவட்டத்தில் நான்கு மாதங்கள் கழித்து முதல் கொரோனா இறப்பு பதிவாகியுள்ளது.

  4. பினராயி அரசை கண்டித்து கேரள காங்கிரஸ் போராட்டம்

    தமிழ்நாடு அரசு கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு அணையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் எடுத்துச் செல்ல ரூ.930 கோடி மதிப்பில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

    இதற்கு தமிழ்நாடு, கேரளா என இரு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என கடந்த வாரம் கேரளா மாநிலம் பாலக்காட்டில் பிஏபி ஆழியாறு பாதுகாப்பு குழுவும் கேரள காங்கிரசும் போராட்டம் நடத்தியிருந்தது.

    இந்த நிலையில் கேரள அரசு இந்த விவகாரத்தில் தலையிடாமல் மௌனம் காக்கிறது என பினராயி விஜயன் அரசை கண்டித்து கேரளா காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைந்துள்ள சுங்கத்தில் போராட்டம் நடத்தினர்.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மிதமான அறிகுறிகள் தென்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அதிபருக்கு தற்போது 79 வயதாகிறது. அவர் முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். மேலும் இருமுறை பூஸ்டர் டோஸும் எடுத்துக் கொண்டுள்ளார்.

    தற்போது வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்திக் கொண்டு பணிகளை கவனிப்பார் என வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது.

    மேலும் தொலைப்பேசி மற்றும் ஜூம் வழியாக கூட்டங்களில் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  6. சென்னை விமான நிலையத்தில் ரூ. 8.86 கோடி மதிப்பிலான ஹெராயின் பிடிபட்டது

    தான்சானியாவிலிருந்து வந்த நபரிடமிருந்து 8.86 கோடி ரூபாய் மதிப்பிலான 1.266 கிலோ ஹெராயினை சென்னை விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

    உகாண்டாவின் என்டபே நகரிலிருந்து கடந்த 14ஆம் தேதி எதியோப்பியன் ஏர்லைன்ஸ் மூலம் தான்சானியாவைச் சேர்ந்த ஜோசப் பாட்ரிக் மின்யாரு என்ற நபர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.சென்னை விமான நிலைய அதிகாரிகள் அவரைச் சோதித்தனர்.

    அப்போது அவர் உடலில் 86 கேப்சூல்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த கேப்சூல்களில் இருந்த ஹெராயினை எடை போட்டுப் பார்த்தபோது, மொத்தமாக ஒரு கிலோ 266 கிராம் இருப்பது தெரியவந்தது. அந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

  7. அரசு நிகழ்ச்சியில் இந்து புரோகிதரை வெளியேற்றியது ஏன்? -திமுக எம்.பி செந்தில் குமார் பேட்டி

  8. இலங்கைக்கு கடத்த இருந்த 3 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்

    மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 3 லட்சம் மதிப்பிலான 25 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்த மண்டபம் வனத்துறை அதிகாரிகள் கடல் அட்டையை வாகனத்தில் எடுத்து சென்ற இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சங்கு ஏற்றி சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி வனத்துறையினர் சோதனை செய்த போது, சரக்கு வாகனத்தில் சுமார் 25 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. தொண்டியைச் சேர்ந்த சேகர் மீது வழக்கு பதிவு செய்த மண்டபம் வனத்தறையினர் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    மண்டபம் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 3 லட்சம் ரூபாய் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

  9. இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் என்ன?

  10. வேதாந்தா விண்ணப்பத்தை மூன்று மாதத்தில் பரிசீலிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

    ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வேதாந்த விண்ணப்பத்தை சுற்றுச்சூழல் துறை செயலர் மூன்று மாதத்தில் பரிசீலித்து முடிவெடுக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக, தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் சுமதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

    அதில், "தூத்துக்குடி தொழிற்பேட்டையில் இயங்கிவரும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் அனைத்து அனுமதியையும் பெற்று தொடங்கப்பட்டது.

    மக்களின் போராட்டத்தை தொடர்ந்து 2018 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால், வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. மேலும் தமிழக அரசு ஆணை 72ன் படி வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் முழுவதுமாக மூடப்பட்டது.

    வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்சாரம் நிறுத்தப்பட்டதன் விளைவாக அவசரகால நிலையைகூட செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.

    நிறுவனத்தின் உள்ளே ஆசிட், ரசாயனம் மற்றும் ஆபத்தான பல மூலப் பொருள்கள் உள்ளன. அவசர கால நிலைக்கு குறைந்த அளவு மின்சாரம் வழங்கக் கோரி மனு அளித்த நிலையில் அவையும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் போது மருத்துவ ஆக்ஸிஜன் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டது.

    இதற்காக உள்ளூர் உயர்மட்ட குழு அனுமதி பெற்று 250 ஊழியர்கள் வேலை பார்த்தனர். தற்போது ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெயை வெளியேற்றவும் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை சரி செய்ய உள்ளூர் உயர்மட்டக்குழு மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அனுமதி கேட்கப்பட்டது. எனவே, ஆக்சிஜன் தயாரிப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய், மூலப்பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றை வெளியேற்ற அனுமதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அதே போல் தொழிற்சாலையில் முன்பு இருந்த மூலப்பொருட்கள் மற்றும் பொருட்கள் கழிவுகள் ஆகியவை வெளியேற்ற அனுமதி அளிக்க வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரித்த நீதிபதிகள், வேதாந்தா நிறுவனம் தமிழக அரசுக்கு கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய விண்ணப்பத்தை தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறைதுறை செயலர் 3 மாதத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டார். அதே நேரத்தில் வேறு நபர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதனையும் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

  11. "கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த தனியார் பள்ளி விடுதி அனுமதியின்றி இயங்கியது"

    கள்ளக்குறிச்சி சின்னசேலத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள் விடுதி அரசின் அனுமதி பெறாமல் இயங்கி வந்தது மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவி மர்மமாக உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான குழுவினர் கள்ளக்குறிச்சி வந்தனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அதிகாரி சிவராமன் மற்றும் மாணவியின் உடலை முதலில் பார்த்த மருத்துவர்கள் உள்ளிட்டவர்களிடம் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணை முடிந்து செய்தியாளர்களிடம் சரஸ்வதி கூறும்போது, "மாணவியின் உயிரிழப்புக் குறித்து முதற்கட்டமாக விசாரணை நடத்தினோம். இந்த விசாரணையில் பள்ளி விடுதி முறையான அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. இதுபோன்று நடத்தக்கூடாது. இது தண்டனைக்குரிய குற்றம். ஆனால் மாவட்ட ஆட்சியர் 3 மாதத்திற்கு முன் தனியார் விடுதி நடத்துபவர்கள் முறையான அனுமதி பெறவேண்டும் என அறிவிப்பு வெளியிட்டும் இந்த பள்ளி நிர்வாகம் முறையான அனுமதி பெறவில்லை.

    அவ்வாறு பெற்றிருந்தால், விடுதிக்கு காவலர், பெண் காப்பாளர் உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றி விடுதி இயங்கியிருக்கும். எனவே பள்ளி நிர்வாகம் விடுதிக்கு முறையான அனுமதி பெறாமல் இயங்கிவந்ததால், காவல் துறைக்கு புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்ய பரிந்துரைப்போம்," என்றார்.

  12. இலங்கையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக மக்கள் போராட்டம்

  13. குடியரசுத் தலைவர் தேர்தல் - திரெளபதி முர்மூ முன்னிலை

    குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், பாஜக கூட்டணியின் வேட்பாளரான திரெளபதி முர்மூ 540 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இது வரை எண்ணப்பட்ட வாக்குகளில், எதிர்கட்சி வேட்பாளாரான யஷ்வந்த் சின்ஹா 208 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

    திரெளபதி முர்மூ பெற்றுள்ள வாக்குகளின் மதிப்பு 3, 78,000. யஷ்வந்த் சின்ஹா பெற்றுள்ள வாக்குகளின் மதிப்பு 1,45,600 ஆகும்.

  14. போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை: இலங்கை ஜனாதிபதி ரணில்

  15. அதிமுக அலுவலகம் திறப்பு - "ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் காணவில்லை"

    ஜூலை 11ஆம் தேதி கலவரத்தையடுத்து சீல் வைக்கப்பட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் சாவி நீதிமன்ற உத்தரவின்படி எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பிடம் கொடுக்கப்பட்டது.

    கடந்த ஜூலை 11ஆம் தேதி எடப்படி கே. பழனிச்சாமி தரப்பு அ.தி.மு.கவின் பொதுக் குழுக் கூட்டம் ஒன்றை நடத்தியது. அந்தத் தருணத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.கவின் தலைமை அலுவலகத்திற்கு வந்த ஓ. பன்னீர்செல்வம் தரப்பு, அதனை உடைத்து உள்ளே புகுந்தது. உள்ளே இருந்த ஆவணங்களும் அள்ளிச்செல்லப்பட்டன.

    அப்போது எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பைச் சேர்ந்த தொண்டர்களுக்கும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சட்டம் - ஒழுங்கைக் காரணம் காட்டி அந்தப் பகுதியின் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை சீல் வைத்தார். உரிமை இயல் நீதி மன்றத்தை அணுகி சாவியைப் பெற்றுக்கொள்ளும்படியும் சொல்லப்பட்டது.

    இந்த நிலையில், சாவியை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டுமென எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடின. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சதீஷ்குமார், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

    இதையடுத்து இன்று காலையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த வருவாய்த் துறை அலுவலர்கள், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் சீலை அகற்றி சாவியை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் ஒப்படைத்தனர். அப்போது முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. சண்முகம் உடனிருந்தார்.

    அலுவலகம் திறக்கப்பட்ட பிறகு, உள்ளே போய் பார்வையிட்ட எடப்பாடி தரப்பு நிர்வாகிகள் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஆகியவற்றைக் காணவில்லையெனக் கூறினர்.

  16. நாடாளுமன்றத்தில் நடந்த போராட்டம்: காங்கிரஸ் கட்சியின் 75 எம்.பிக்கள் கைது

    நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 75 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

    அப்போது, “மோதி அரசு அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைக்காக முன்பு தலைவர் ராகுல் காந்தி அவர்களையும் இன்று அன்னை சோனியா காந்தி அவர்களையும் அமலாக்கத் துறையை ஏவிவிட்டு விசாரணை என்ற பெயரில் அராஜகம் செய்து கொண்டிருக்கிறது.

    அரிசி, பால், தயிர், பென்சில், மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு என்று அனைத்திற்கும் கொடுமையான வரி விதிக்கும் மக்கள் விரோத மோதி அரசிற்கு எதிராக ,காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது.

    இதனால் அமலாக்கத்துறையை ஏவி விட்டு காங்கிரஸ் கட்சியை அலைக்கழிக்கலாம் என்று மோதி அரசு நினைக்கிறது. இதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சி அஞ்சாமல் களத்தில் நிற்கும். மக்கள் விரோத மோதி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயாமல் போராடுவோம். இன்று நடைபெற்ற போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளோம்,” என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

  17. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவானதில் தமிழ் எம்.பிக்களின் பங்கு என்ன?

    ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு தெரிவாவதற்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு நிலவி வந்த நிலையில், அவர் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். இதில் தமிழ் மற்றும் முஸ்லிம் எம்.பிக்களின் பங்கு என்ன?

  18. கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்திலிருந்து நேரலை

  19. விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகம் வந்த சோனியா காந்தி

    நேஷனல் ஹெரால்ட் வழக்கின் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சோனியா காந்தி வந்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    நேஷனல் ஹெரால்ட் நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துகள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை நடத்தி வரும் மத்திய அமலாக்கத்துறையின் அலுவலகத்திற்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வந்துள்ளார்.

  20. மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டுப் போராட கல்லூரி மாணவர்கள் திட்டம்

    மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டுப் போராட பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் வாட்ஸ் ஆப்பில் குழு அமைத்து போராட்டக்காரர்களை கல்லூரி மாணவர்கள் திரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த வாட்ஸ் ஆப் தகவலால் அண்ணா நகர், கீழ்ப்பாக்கத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளன.

    அதோடு, போராட்டத்தில் மாணவர்கள் யாரும் ஈடுபடக்கூடாது என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.